Published : 03 Jun 2023 01:10 PM
Last Updated : 03 Jun 2023 01:10 PM

கும்பகோணம் | பள்ளிகள் திறப்பையொட்டி ஜூன் 4, 5-ல் 400 சிறப்பு பேருந்துகள்

கும்பகோணம்: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் 7-ம் தேதி திறக்கப்படுவதையொட்டி 4 மற்றும் 5-ம் தேதிகளில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம். கும்பகோணம் சார்பில், வரும் 7-ம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படுவதையொட்டி வெளியூர் சென்ற பொது மக்கள் அவரவர் இருப்பிடங்களுக்கு 4 மற்றும் 5-ம் தேதிகளில் திரும்ப வாய்ப்பு உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 250 பேருந்துகளும்,

திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 150 பேருந்துகள் என மொத்தம் 400 பேருந்துகள் 4 மற்றும் 5-ம் தேதி இயக்கப்பட உள்ளது.

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தைச் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x