Published : 03 Jun 2023 07:51 AM
Last Updated : 03 Jun 2023 07:51 AM

இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை அகற்ற சென்னை, கோவை, மதுரையில் ஊழியர்களுக்கு பயிற்சி - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை அகற்ற சென்னை, கோவை, மதுரையில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீரை அகற்றும் பணிகளை இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து, வாரியப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி சென்னை அயனாவரத்தில் உள்ள வாரியப் பயிற்சி மையத்தில் நேற்றுநடைபெற்றது.

அமைச்சர் கே.என்.நேரு பயிற்சியைத் தொடங்கிவைத்து, கழிவுநீர் லாரிகளை இயக்குபவர்களுக்கான சிறப்புக் கையேடை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது: கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் டிஐசிசிஐ (DICCI) அமைப்புடன், குடிநீர் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் தூய்மைப் பணியில் ஈடுபடுவோரை, தொழில்முனைவோராக மாற்றும் வகையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக முதல்வர் ரூ.100 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார்.

அதனடிப்படையில், கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு உரிய பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கழிவுநீரை அகற்றும் பணிகளை இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்கான பயிற்சிகள், சென்னை, கோவை, மதுரை மற்றும் மறைமலைநகரில் அளிக்கப்படும்.

கழிவுநீரை அகற்றும் லாரிகள், அரசிடம் உரிமம் பெற்ற பின்னரே பணிகளை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகரப் பகுதிகளிலும், ஜூன் 30 முதல்பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பொதுமக்கள் 14420 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, அரசின் உரிமம் பெற்ற வாகனங்களுக்கு உரிய கட்டணங்களை செலுத்தி, கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஏதேனும் புகார்கள் இருந்தால், அதே எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். மேலும், சென்னை மாநகர மக்கள் grfocmwssb@gmail.com என்ற மின்னஞ்சல், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் fsmhelpline@gmail.com என்ற மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x