Published : 02 Jun 2023 09:27 AM
Last Updated : 02 Jun 2023 09:27 AM

விஷவாயு மரணங்களை தடுக்க தூர்வாரும் நிபந்தனைகளை திருத்துமா மாநகராட்சி?

கழிவுகளை அகற்றும் பணியின்போது விஷ வாயு தாக்கி தொழிலாளிகள் அதிகம் உயிரிழப்பது தமிழகத்தில் தான். வழக்கமாக மலக்கசடு தொட்டிகளை திறக்கும்போதும், அவற்றில் இறங்கும்போதும் விஷ வாயு தாக்கி உயிரிழக்கின்றனர். இவை அடைப்பிடங்களாக உள்ளன. ஆனால் கடந்த ஆண்டு சென்னை மாதவரத்தில், குடிநீர் வாரிய ஒப்பந்த பணியாளர்கள் 2 பேர், திறந்த வெளியில், நடுத்தெருவில் உள்ள கழிவுநீர் குழாய் மூடியை திறக்கும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இது மிகவும் ஆபத்தானது. பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கும் குடிநீர் வாரிய பணியாளர்களே உயிரிழந்திருப்பதால், அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லையோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஷவாயு தாக்கி சென்னையில் மட்டும் 1993-ம் ஆண்டு முதல் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புழல் பகுதியிலும் கடந்த வாரம் மேலும் 2 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் 2 ஆயிரத்து 70 கிமீ நீளமுள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம், மழைநீர் வடிகால்களில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. பிரதான சென்னை பகுதிகளான ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் பெரும்பாலானவற்றில் 365 நாளும் விதிகளை மீறி கழிவுநீர் விடப்பட்டு, கழிவுநீர் நிறைந்து காணப்படுகின்றன.

இவற்றில் தூர் வாரும் பணிகளின்போது இது நாள் வரை எந்த ஒப்பந்ததாரரும் கழிவுநீரை வெளியேற்றிய பின் மழைநீர் வடிகாலை தூர் வாரியதே இல்லை. கழிவுநீர் தேக்கத்திலேயே இறங்கிதான் தூர் வாருகின்றனர். தமிழக அரசும் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013-ன் கீழ் விதிகளை திருத்தியுள்ளது.

அதில், “பிரிவு 7-ன்படி மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013, பிரிவு 7-ன் படி, எந்தவொரு நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தக்கூடாது.

அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது மேற்படி சட்டப்பிரிவு 9-ன்படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது 2-ம் தண்டனையாக விதிக்கப்படும். 2-வது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளது.

மேலும் விஷ வாயு மரணங்களை தடுக்க தமிழக அரசும் நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை குடிநீர் வாரிய சட்டங்களை திருத்தி, இயந்திரங்களைக் கொண்டே கழிவுநீர் அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மாநகரப் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதால், அவற்றில் தூர் வாரும் பணிகளுக்கும் மேற்கூறிய விதிகள் பொருந்தும்.

ஆனால் இந்த புதிய விதிகள் வந்த பிறகும், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தூர் வாரும் பணியின்போது, பணியாளர்கள் கழிவுநீரில் இறங்கி, எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றியே மலக்கசடு மற்றும் தூரை வாரினர். மாதவரத்தில் நிகழ்ந்தது போல, மழைநீர் வடிகால்களிலும் வரும் காலங்களில் விஷ வாயு வெளியேறி உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதனால் சென்னை, புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தூர்வாரும்போது கட்டாயம் இயந்திரங்களைக் கொண்டே தூர் வார வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் தூர் வாருவதற்கான ஒப்பந்த ஆணைகளை சென்னை மற்றும் புறநகரில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் வழங்க வேண்டும்.

இது குறித்து ஆதி தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அதியமான் கூறியதாவது: மலக்கசடுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படுத்த அரசு விரும்புகிறது. அதிகாரிகள் விரும்புவதில்லை. விஷ வாயு மரணங்களைத் தடுக்க சென்னை, புறநகர் பகுதிகளில் மலக்கசடு தொட்டிகள் அமைக்க தடை விதிக்க வேண்டும். மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். எல்லா இடங்களிலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவது என அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இறப்பு ஏற்பட்டால் அதிகாரிகளின் சொந்த நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் கூறும்போது, “விஷ வாயு மரணங்களில் தேசிய அளவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இன்று வரை 225 பேர் உயிரிழந்துள்ளனர். தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த ஆட்சியில் நல வாரியம் அமைக்கப்பட்டது. அதன் பிறகு புதிய அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு கூட்டம் கூட கூட்டப்படவில்லை. இதுபோன்ற மரணங்களைத் தடுக்க மாநில அளவில் கண்காணிப்பு குழு அமைக்கவில்லை” என்றார்.

சென்னையில் கழிவுநீர் அகற்றலின் போது விஷவாயு தாக்கி உயிரிழப்பதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிபகுதிகளில் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும் லாரி உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தி இருக்கிறோம். அதில், "மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாரியம் மூலம் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர்த் தொட்டியிலிருந்து கழிவுநீரை அகற்ற அனுமதிக்கப்படுவார்கள். இதுநாள் வரையிலும் உரிமம் பெறாத லாரி உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் மட்டுமே கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்" என்று அறிவுறுத்தி இருக்கிறோம். வாரியத்தின் மூலம் உரிமம் பெறாத லாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சட்டவிரோதமாக கழிவுநீர்த் தொட்டியிலிருந்து கழிவுநீரை அகற்றுபவர்களை முதல் விதிமீறலுக்கு ரூ.25 ஆயிரம், 2-வது முறை விதிமீறலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும், சாதனங்களும் கழிவுநீர் லாரிகளில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களை கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி, அப்பணியாளர் இறக்க நேரிட்டால், இழப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சத்தை வீட்டு உரிமையாளர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகிய இருவராலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கி இருக்கிறோம்.

சட்ட விரோதமாக கழிவு நீரகற்றுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, விரிவாக்கப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக துண்டு பிரசுரம் மூலமும், ஒலிபெருக்கி பொருத்திய ஆட்டோக்கள் மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று மண்டல பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் ஏற்படும் விஷ வாயு மரணங்களைத் தடுக்க, வரும் காலங்களில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும பகுதியில் இடம்பெற்றுள்ள புறநகர் பகுதிகளிலும் கழிவுநீரகற்று சேவைகளை வாரியம் மூலம் வழங்க திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் விஷ வாயு மரணங்களைத் தடுக்க, தூர் வாரும் பணிகளின்போது, கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களில் இயந்திரங்களை பயன்படுத்தி, உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தூர் வாருமாறு, ஒப்பந்ததாரர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படுமா என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, “வரும் ஜூன் 2-ம் தேதி மழைநீர் வடிகால்கள் பணிகள் தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன்.

அப்போது இதுகுறித்து கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.கடந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக சென்னை, தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி பக்தவத்சலம் காலனி பகுதியில் மழைநீர் வடிகாலில் தேங்கியுள்ள கழிவுநீரில் இறங்கி, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தூர்வாரும் தொழிலாளர்கள். இரா.அதியமான்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x