

சென்னை: கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ம் ஆண்டுக்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின் போது, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
அப்போது, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, “தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைக் கூலியில் 10 விழுக்காடும், அகவிலைப்படியில் 10 விழுக்காடும் உயர்த்தி வழங்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, நெசவாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் நலனைக் கருதி தற்போதைய அடிப்படைக் கூலியில் 10 சதவீத உயர்வும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயர்த்தி வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு கடந்த செப். 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப் படும். இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 74,000 கைத்தறி நெசவாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.