Last Updated : 08 Nov, 2016 11:06 AM

 

Published : 08 Nov 2016 11:06 AM
Last Updated : 08 Nov 2016 11:06 AM

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள்-21: பயிற்சி இன்றி அதிகாரி ஆனேன்!

ஐ.டி. துறையில் வேலை செய்து கொண்டே யூ.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் ஆர்.சதீஷ் குமார். இவருக்கு 2010 ஆம் ஆண்டு பேட்ச்சில் ஐ.பி.டி.ஏ.எஃப்.எஸ். எனும் இந்தியத் தபால் மற்றும் தொலைதொடர்பு கணக்கு மற்றும் நிதி பணி (IP&TAFS-Indian Postal and Telecom Accounts and Finance Service) கிடைத்துள்ளது. இவர் தற்போது கர்நாடக வட்டத்தின் தொலைதொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் பிரிவின் பெங்களூரு அலுவலக இணை தொலைதொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளராகப் (Joint Controller of Communication Accounts) பணியாற்றுகிறார். இதற்கு முன் கர்நாடக வட்டத் தபால் துறையின் உதவி தலைமை கணக்காளராகப் பணியாற்றினார்.

தாய்க்காகவும் தாய்நாட்டுக்காகவும்

சிறுவயதிலேயே தந்தை காலமானதால் தாயால் கஷ்ட்டப்பட்டு வளர்க்கப்பட்டார் சதீஷ் குமார். சேலத்தைச் சேர்ந்த இவர் கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படித்தார். அப்போது வளாகத் தேர்வில் ஐ.டி. பெருநிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு ஆறு வருடம் வேலை செய்தபடியே யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதினார். 2006-ம் வருடமும் அடுத்த ஆண்டும் முயன்றபோது முதல்நிலையில்கூட வெல்ல முடியவில்லை. பிறகு ஒரு வருடம் இடைவெளி விட்டு எடுத்த மூன்றாவது முயற்சியில் ஐ.பி.டி.ஏ.எஃப்.எஸ். கிடைத்தது.

“இனியும் அம்மா குடும்பப் பாரத்தைச் சுமக்கக் கூடாது என்பது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதனால், ஐ.டி. வேலை கிடைத்ததும் சேர்ந்துவிட்டேன். அதில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது என்னுடைய உழைப்பு தாய்நாட்டுக்கு கிடைக்க வேண்டும் எனத் தோன்றியது. யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்தேன். வரலாறு பிடித்த பாடம் என்பதால் அதையும், பணியின் தேவைக்காகப் பொது நிர்வாகமும் விருப்பப் பாடமாக எடுத்தேன். ஆனால், இதற்காக எந்தப் பயிற்சி நிலையத்திலும் சேரவில்லை. வழிகாட்ட வேண்டியும் யாரையும் அணுகவில்லை.

நேர்முகத் தேர்வுக்கு மட்டும் மனிதநேயம் அறக்கட்டளை நடத்தும் பயிற்சி நிலையத்தில் இரு மாதிரித் தேர்வுகளில் கலந்து கொண்டேன். வார இறுதியில் கிடைத்த இரண்டு நாள் விடுமுறை மற்றும் அன்றாடம் இரவு இரண்டு மணி நேரம் படித்தேன். பள்ளி மற்றும் கல்லூரியில் குவிஸ் போட்டியில் கலந்து கொண்டதால் அன்றாட செய்திகள் மீதும் அதிகக் கவனம் இருந்தது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்கும் தவறாமல் சென்று, பொது அறிவு நூல்களையும் படித்தது பயன் அளித்தது” என்கிறார் சதீஷ் குமார்.

பல பணிகள் உள்ளன

வழக்கமாகப் பலரும் செய்வதைப் போல சதீஷும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். தவிர யூ.பி.எஸ்.சி.யில் மற்றவற்றின் விவரம் அறிந்து குறிப்பிடவில்லை. இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க கடந்த இரண்டு வருடங்களாக மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் 24 பணிகளின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, இனி குடிமைப்பணி தேர்வு எழுதுபவர்கள் அதைப் படித்து அறிந்த பின்னர் தனது விருப்பங்களை விண்ணப்பத்தில் குறிப்பிடலாம். சதீஷுக்கு தனது ரேங்கின்படி கிடைத்த ஐ.பி.டி.ஏ.எஃப்.எஸ்-ல் இணைந்த பின்னரே அது பற்றிய விவரம் தெரிந்தது.

வெற்றியின் ரகசியம்

பள்ளி நாட்கள் முதல் ‘தி இந்து’ஆங்கில நாளிதழையும் ஃபிரண்ட்லைன் பத்திரிகையையும் படித்த பலன் ஆங்கிலத்தில் எழுதும் திறனை தனக்கு அளித்தது எனகிறார் சதீஷ். கல்லூரிக் காலத்தில் உலக வரலாறு குறிப்பாக உலகப் போர்கள் தொடர்பான வரலாற்று நூல்களை ஆர்வமாக படித்தது பின்பு கைகொடுத்தது. ஐ.டி. நிறுவனப் பணியின் போது பல வாடிக்கையாளர்களிடம் பேசிய அனுபவம் இருந்ததால் தயக்கம் இல்லாமல் நேர்முகத்தேர்வை எதிர்கொண்டார்.

எப்போதுமே மேலோட்டமாகவோ மனப்பாடம் செய்தோ படிப்பது அவருக்குப் பிடிக்காது. ஒரு பாடத்தை ஒரு நாள் படித்தாலும் அதனோடு சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் தேடிப் படித்தது எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வில் அதிகம் உதவியது.மற்ற பணிகளைப் போல இந்தியத் தபால் மற்றும் தொலைதொடர்பு கணக்கு மற்றும் நிதி பணியிலும் இரண்டு வருடப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், ஹரியாணாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பினான்ஷியல் அண்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் டெல்லியில் உள்ள தேசியத் தொலைதொடர்பு நிதி பயிற்சி நிலையத்திலும் பயிற்சி அளிக்கப்படும். இதன் பின், தபால் மற்றும் தொலைதொடர்பு துறைகளில் பணியாற்ற வேண்டும். குறிப்பிட்ட மாநிலப் பிரிவு என்பது இல்லாமல் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பணி மாறுதல் கிடைக்கலாம்.

தொலைதொடர்புத் துறையில் தனியார் மற்றும் அரசு சேவை நிறுவனங்களின் உரிமக் கட்டணம் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாடு கட்டணம் பெறுதல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகிய பணி இருக்கும். அலைக்கற்றை ஏலம் விடுதல் பணியும் உண்டு. தபால் மற்றும் தொலைதொடர்புத் துறையின் நிதி மேலாண்மை மற்றும் உட்தணிக்கை, கணக்குகளைச் சரிபார்த்தல் மற்றும் ஓய்வூதியப் பணி நிர்வாகம் ஆகியவை செய்ய வேண்டியிருக்கும். தொலைதொடர்புத் துறையின் மீதான வழக்குகளை நடத்தும் பணியும் இருக்கும். கிராமப்புறங்களுக்குத் தொலைதொடர்பு மற்றும் இணையதளச் சேவை அளிக்கும் அரசு திட்டங்களின் மானிய நிர்வாகம் மற்றும் மேற்பார்வை செய்ய வேண்டும்.

ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளில் அரசுக்குக் கிடைக்கும் வரியில்லாத வருமானம் தொலைதொடர்புத் துறையில் அதிகரித்துள்ளது.

பணியின் தன்மை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x