Published : 15 Mar 2016 11:55 am

Updated : 15 Mar 2016 11:55 am

 

Published : 15 Mar 2016 11:55 AM
Last Updated : 15 Mar 2016 11:55 AM

ஐன்ஸ்டைனை ஜொலிக்க வைத்த கிரகணம்

ஐன்ஸ்டைன் பிறந்த தினம்: மார்ச் 14

கடந்த வார சூரிய கிரகணத்தின் நினைவுகள் இன்னும் நம்மை நீங்கவில்லை. சூரிய கிரகணங்களைப் பற்றி ஒவ்வொரு கலாச்சாரத்திலும் வெவ்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. சூரிய கிரகணங்கள் அழிவைக் கொண்டுவரும் என்றெல்லாம் நம்பிக்கைகள் நிலவுகின்றன. இவற்றில் எந்த வித உண்மையும் இல்லை. இந்த நம்பிக்கை களுக்கெல்லாம் மாறாக 1919-ல் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அழிவையல்ல, மனித குலத்துக்கு மகத்தான ஒரு விஞ்ஞானியைத்தான் அந்த கிரகணம் பரிசாகத் தந்தது. அவர் வேறு யாருமல்ல, ஐன்ஸ்டைன்தான்.

சவாலான கோட்பாடு

‘மிகவும் அதிகமான நிறையைக் கடக்கும்போது ஒளி வளையும்’ முதலான கணிப்புகளுடன் பொதுச் சார்பியல் கோட்பாட்டை 1915-ல் ஐன்ஸ்டைன் முன்வைத்தார். எனினும் அந்தக் கோட்பாடு உறுதியாக நிரூபிக்கப்பட்டது 1919-ல் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போதுதான்.

வழக்கமாக ஒரு அறிவியல் கோட்பாட்டை யாரேனும் முன்வைத்தால் ஆய்வகங்களில் அதைப் பரிசோதித்து அது உண்மையா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பார்கள். ஐன்ஸ்டைனின் கோட்பாட்டை நிரூபிப்பதில் உள்ள பெரும் சிக்கல் என்னவென்றால் அவர் கூறியபடி ஒளியை வளைக்கும் அளவுக்கு மிகமிக அதிகமான நிறையுள்ள பொருள் ஒன்று நம்மிடம் இல்லை என்பதுதான். ஆகவே, ஆய்வகங்களில் பரிசோதனை நடத்தி அந்தக் கோட்பாட்டின் உண்மைத் தன்மையைக் கண்டறிய முடியாது. அதே நேரத்தில் ஒரு இயற்கை நிகழ்வைக் கண்காணிப்பதன் மூலம் அந்தக் கோட்பாட்டின் உண்மைத் தன்மையைக் கண்டறியலாம். ஆம், நம்மிடம் ஒளியை வளைக்கும் அளவுக்கு நிறையுள்ள பொருள் ஒன்று உண்மையிலேயே உள்ளது. நம்மிடம் என்றால் நம் சூரியக் குடும்பத்தில் என்று அர்த்தம். சூரியனைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்!

பிரிட்டனைச் சேர்ந்த வானியலாளர் சர் ஃபிராங்க் வாட்சன் டைசன் 1917-ல் ஒரு யோசனையை முன்வைத்தார். முழுமையான சூரிய கிரகண மொன்றின்போது பொதுச் சார்பியல் கோட்பாட்டின் உண்மைத் தன்மையைக் கண்டறியலாம் என்றார்.

பகல் நட்சத்திரம்

எதற்காக சூரிய கிரகணத்தின்போது? ஐன்ஸ்டைனின் கோட்பாட்டை நிரூபிப்பதற்கு ஒளி, ஒளியை வளைக்கும் இன்னொரு பொருள் என்று இரண்டு விஷயங்கள் இருக்கின்றன அல்லவா! சூரியனைக் கடந்துசெல்லும்போது விண்மீன் ஒன்றின் ஒளி வளைகிறதா இல்லையா என்பதை உற்றுநோக்க வேண்டும் என்பதுதான் டைசனின் யோசனை. விண்மீன்கள் இரவில்தான் தெரியும். விண்மீன்களும் தெரிய வேண்டும். ஆனால், அது பகலாகவும் இருக்க வேண்டும் என்றால் அதற்குப் பொருத்தமான நேரம் முழு சூரிய கிரகணம்தான். ஆகவேதான் டைசன் சூரிய கிரகணத்தைப் பரிந்துரைத்தார்.

சூரிய கிரகணத்தை உற்றுநோக்கும் பொறுப்பை பிரிட்டனின் இன்னொரு வானியலாளர் ஆர்தர் எடிங்டன் ஏற்றுக்கொண்டார். ஆனால், அது முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலம். ராணுவத்தில் கட்டாய ஆள்சேர்ப்பு நடந்துகொண்டிருந்தது. ஆனால், இந்தப் பரிசோதனையைக் குறிப்பிட்டு, இதைச் செய்வதற்குப் பொருத்தமான நிபுணர் எடிங்டன்தான் என்று சொல்லி எடிங்டனைக் காப்பாற்றியவர் டைசன்தான். எனினும், போர் நடந்துகொண்டிருந்த காரணத்தால் கிரகணப் பரிசோதனையை உடனேயே நடத்த முடியவில்லை.

அறிவியல் வரலாற்றில் ஒளி

1918-ல் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. அடுத்த, முழு சூரிய கிரகணம் 1919 மே 29-ல் நிகழும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆகவே, அதற்காக எடிங்டன் குழுவினர் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டார்கள். ஹயாடெஸ் விண்மீன் தொகுப்பின் ஒளி, சூரியனைக் கடக்கும் முழுக் கிரகண தருணத்தை உற்றுநோக்குவது என்று ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டிருந்தது.

கிரகணத்துக்கு முன்னதாக 1919-ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஹயாடெஸ் விண்மீன்கள் அண்டவெளியில் அமைந்திருக்கும் உண்மையான ஸ்தானங்கள் குறித்துக்கொள்ளப்பட்டன. ஹயாடெஸ் விண்மீன்களின் ஒளி பூமியை நோக்கி வரும் பாதைக்கு அருகே சூரியன் இல்லாத சமயம், அந்த ஒளியில் விலகல் இருக்காது என்பதால் ஒப்பீட்டுக்காக அந்த விண்மீன்களின் உண்மையான ஸ்தானங்களைக் குறித்துவைத்துக் கொண்டார்கள்.

முழு கிரகணத்தைப் பார்ப்பதற்காக இரண்டு குழுக்களாகப் பிரிந்து எடிங்டன் தலைமையிலான குழு மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையை ஒட்டி இருக்கும் பிரின்சிபி தீவுக்கும் இன்னொரு குழு பிரேசிலின் சோப்ராலுக்கும் சென்றனர். முழு கிரகணமும் தெளிவாகத் தெரியக்கூடிய இடங்கள் என்று அவற்றைத்தான் கணித்திருந்தார்கள். அது மட்டுமல்லாமல் ஒரு பரிசோதனையில் ஏதாவது தவறு நிகழ்ந்துவிட்டால் என்ன செய்வது என்பதற்காகத்தான் இரண்டு குழுக்களாக இரண்டு இடங்களுக்குப் பயணம்!

1919, மே-29 அன்று இரண்டு குழுக்களுமே சூரிய கிரகணத்தை உற்றுநோக்கினார்கள். புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்கள். அந்தப் புகைப்படங்களையும் அந்த ஆண்டின் தொடக்கத்தில் பதிவுசெய்த தரவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். சூரியனின் ஈர்ப்புவிசைப் புலத்தைக் கடக்கும்போது ஒளி மிகச் சிறு அளவில் வளைகிறது என்பது உறுதியானது.

நவம்பர் 6, 1919 அன்று தனது ஆய்வின் முடிவை எடிங்டன் உலகத்துக்கு அறிவித்தார். அதற்குப் பிறகு உலகத்தின் பல நாளிதழ்கள், பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியானார் ஐன்ஸ்டைன். அதுவரை அறிவியல் வட்டாரங்களில் மட்டும் அறியப்பட்டவராக இருந்த ஐன்ஸ்டைனை உலகுக்கு அறிவித்தது 1919-ம் ஆண்டின் சூரிய கிரகணமே. அதற்கு உறுதுணையாக இருந்தவர் எடிங்டன்.

எடிங்டனின் பரிசோதனை குறித்த சுவாரசியமான தகவல்கள் நிறைய இருக்கின்றன. பிரேசிலில் இருந்த குழுவின் தரவை எடிங்டன் பிழையானது என்று நிராகரித்திருக்கிறார். பிரேசில் குழுவின் தொலைநோக்கியில் ஒரு குறைபாடு இருந்ததாகக் கருதி எடிங்டன் அப்படி முடிவெடுத்திருக்கிறார். எடிங்டனின் பரிசோதனையில் துல்லியம் இல்லை என்றும், அது பிழையானது என்றும் அப்போதும் அதற்குப் பிறகும் பலரும் கருத்துத் தெரிவித்தார்கள்.

அவரது பரிசோதனை முடிவுகளை 1979-ல் நவீனத் தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தார்கள். எடிங்டனின் கண்டுபிடிப்பில் துல்லியத்தில் பிரச்சினை இருந்தாலும் அவரது கண்டுபிடிப்பு சரியே என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்ல, எடிங்டனே நிராகரித்திருந்த பிரேசில் அணியினரின் தரவுகளும் சரியானவையே என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

ஒரு சூரிய கிரகணம், வரலாற்றின் போக்கையே மாற்றிய கதை இதுதான்!


சூரிய கிரகணம்சூரிய கிரகண நம்பிக்கைஐன்ஸ்டைன் பிறந்தநாள்எடிங்டன்சூரிய கிரகண ஆராய்ச்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author