Published : 24 Sep 2019 11:45 AM
Last Updated : 24 Sep 2019 11:45 AM

தமிழ்ப் புவியியல் பெருமை உணர்த்திய அறிஞர்

இரமேசு கருப்பையா

தமிழகப் புவி அறிவியல் குறித்து சமூக ஊடகங்களிலும் ஆர்வலர்களிடையேயும் தொடர்ச்சியாகக் கவனப்படுத்தி வந்தவர் சிங்கநெஞ்சம். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இந்திய புவியியல் துறையின் தமிழ்நாட்டுப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், கடந்த வாரம் காலமானார்.

தேசிய விருது

புவியியல் துறையில் கனிமங்களை கண்டறிவது, தொகுப்பது, ஆவணப்படுத்துவது போன்ற பணிகளில் சிறப்புத்தகுதி பெற்றிருந்தார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாக்பூர், சிக்கிம், கேரளம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் போன்ற பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளில் பணியாற்றியவர். மத்திய இந்திய பகுதிகளின் புவியியல் வரைபடம் உருவாகக் காரணமாக இருந்தவர்.

தமிழ்நாட்டில் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களில் பங்கெடுத்தவர். தமிழ்நாட்டில் அரூர்-ஊத்தங்கரை பகுதியில் மாலிப்டினம் கனிமத்தைக் கண்டறிந்து, அதற்கான வரைபடத்தைத் தயாரித்தவர். இந்தப் பணிக்காக 1995-ம் ஆண்டுக்கான ‘தேசியக் கனிம விருதை’ குடியரசுத்தலைவரிடம் பெற்றிருந்தார். தற்போது இது ‘புவி அறிவியல் விருது’ எனப்படுகிறது.

புவி அறிவியல் துறையின் கேரள இயக்குநராகப் பணிபுரிந்தபோது, திருவனந்தபுரம் அருகில் உள்ள வர்கலா கடற்கரையில் உள்ள செங்குத்தான குன்று பகுதி ‘தேசிய புவியியல் நினைவுச்சின்னம்’ என்ற அந்தஸ்தைப் பெறக் காரணமாக இருந்தார்.

தமிழகப் புவியியல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்த குடியம் குகைகள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றிய ஆய்வுகளிலும் ஆர்வம் காட்டி வந்தார். குடியம் குகைளை 19-ம் நூற்றாண்டில் கண்டறிந்த ஆங்கிலேயப் புவி அறிவியல் ஆய்வாளர் ராபர்ட் புரூஸ் பூட் பற்றி ஆவணப்படத் தயாரிப்புக்கு உறுதுணையாக இருந்தார்.

தமிழ்நாட்டின் திருவக்கரை கல்மரங்கள் (அரிய புதைப்படிவங்கள்), உலக அளவில் அரிதான பெரம்பலூர் மாவட்ட சாத்தனூர் கல்மரங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பது குறித்துத் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அரியலூர் பகுதியில் கண்டறியப்பட்ட டைனோசர் முட்டைகள் குறித்து, உலக அளவிலான டைனோசர் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டு ஆய்வுகளை விரிவுபடுத்தினார்.

தமிழகத்தில் நடந்த கடல்கோளுக்குத் தமிழ் இலக்கியங் களிலும் களத்திலும் கிடைக்கும் சான்றுகள் அடிப்படையில் வரையறைகளை உருவாக்க முயன்றார். குமரிக்கண்டம் குறித்து தமிழ் இலக்கியம், புவியியல் சான்றுகள் அடிப்படையில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

எழுத்துப் பதிவு

தொல்லியல் ஆய்வு சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து தமிழில் எழுதி வந்தார். அவர் எழுதிய கட்டுரைகளும் பதிவுகளும் பாமரருக்கும் புரியும் வகையில் அமைந்திருந்தன. சென்னையில் வாழ்ந்துவந்த சிங்கநெஞ்சம், சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருந்தார்; செப் 19 அன்று காலமானார். அவருடைய துணைவி அருட்செல்வியும் அன்றைக்கே காலமானார். புவியியல் ஆய்வாளராக இருப்பதில் பெருமிதம் கொண்ட சிங்கநெஞ்சத்தின் மறைவு தமிழ்நாட்டுப் புவியியல் ஆய்வுத்தளத்தில் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

கட்டுரையாளர்
தொடர்புக்கு: mazhai5678@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x