Published : 24 Sep 2019 11:01 AM
Last Updated : 24 Sep 2019 11:01 AM

நுழைவுத் தேர்வுக்காக மடைமாறும் மாணவர்கள்

எஸ்.எஸ்.லெனின்

தேசிய அளவிலான மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விச் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அவசியம். இதனால் மாணவர்களின் வழக்கமான பள்ளி இறுதித் தேர்வுகளும் பாட மதிப்பெண்களும் முக்கியத்துவத்தை இழந்துள்ளன. பள்ளிப் பாடங்களைப் பெயருக்கு ஒப்பேற்றியபடி, முழு மூச்சாக நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் நெருக்கடிக்கு மாணவர்கள் ஆளாவது அதிகரித்துவருகிறது.

இந்தப் போக்கின் உச்சமாகப் பள்ளி வளாகக் கல்விக்கு மாற்றாகத் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனத்தை நாடுபவர்கள் அதிகரித்துவருகின்றனர். தேசியத் திறந்த நிலை பள்ளிக் கல்வி நிறுவனம் (nios.ac.in) என்பது மத்திய மனிதவள அமைச்சகத்தின்கீழ் செயலாற்றிவரும் கல்வி வாரியம். கல்லூரிப் படிப்பை வீட்டிலிருந்தபடியே தொலைநிலைக் கல்வியாகப் பெறுவது போன்றே, பள்ளிக் கல்வியைப் பெற இந்நிறுவனம் உதவி வருகிறது.

வழக்கத்துக்கு வெளியே

14 வயது நிறைவடைந்தவர்கள் 10-ம் வகுப்புக்கு நிகரான ‘செகண்டரி’ தேர்வையும் பிளஸ் 2-க்கு நிகரான ‘சீனியர் செகண்டரி’ தேர்வையும் எழுதலாம். எளிமையான பாடத்திட்டம், விரும்பிய பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் வசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். மாற்றுத் திறனாளிகள், உடல் நலிவுற்றோர், பள்ளியில் இடை நின்றோர், மெல்லக் கற்போர், பள்ளியில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை இழந்தவர்கள் உள்ளிட்டவர்கள் தேசியத் திறந்தநிலைப் பள்ளியில் சேர்ந்து மூன்றாம் வகுப்பு முதல் பல்வேறு சான்றிதழ் படிப்புகள்வரை படிக்கலாம். இவற்றுக்கு அப்பால் சூழ்நிலை, சிறப்புக் காரணங்களுக்காகவும் திறந்தநிலைப் பள்ளியை நாடுவோர் உண்டு.

நிர்ப்பந்திக்கும் கல்விச் சூழல்

இதுபோன்ற சிறப்புக் காரணங்களுக்கு அப்பாலும், வழக்கமான பள்ளி வளாகக் கல்விக்கு மாற்றாகத் திறந்த நிலையில் பள்ளிக் கல்வியை நாடும் போக்கு தற்போது தலைதூக்கியுள்ளது. வட மாநிலங்களிலும் தென்னகத்தில் கேரளாவிலும் அதிக அளவில் இந்தப் போக்கு காணப்படுகிறது. ‘நீட்’ கட்டாயம் என்றதையடுத்துத் தமிழகமும் இந்தத் திசையில் திரும்பியுள்ளது. மழைக்காளானாக முளைக்கும் தனியார் பயிற்சி மையங்களும் சில தனியார் பள்ளிகளும் பெற்றோர் வாயிலாக மாணவர்களை மடை மாற்றி வருகின்றன.

பிளஸ் 2 பாடங்களைப் படித்தபடியே நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது அல்லது பிளஸ் 2 முடித்த பிறகு ஓரிரு ஆண்டுகள் நுழைவுத் தேர்வுக்காகத் தொடர்ந்து மோதிப் பார்ப்பது ஆகியவற்றைவிட இந்தப் புதிய முறையைச் சிறந்த உபாயமாகப் பெற்றோர் கருதுகின்றனர். அந்த வகையில் ஒன்பது அல்லது 10-ம் வகுப்புக்குப் பின்னர் கல்விக் கூடங்களுக்கு முழுக்குப் போட்டுவிடுகிறார்கள் மாணவர்கள். அதன் பிறகு திறந்தநிலைப் பள்ளிக் கல்வியில் சீனியர் செகண்டரி பயின்றபடி முழு நேரமாக நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளுக்குத் தயாராகின்றனர். இதனால் மாணவர்களின் நேரம், உழைப்பு உள்ளிட்டவற்றை நுழைவுத் தேர்வு நோக்கில் எளிதாகக் குவிக்க முடிகிறது என்கின்றனர் பெற்றோர்.

இழப்பு அதிகம்

ஆனால், நுழைவுத் தேர்வை மட்டுமே இலக்காகக் கொண்டு மாணவர்களைத் திசைதிருப்புவது, முதலுக்கு மோசம் செய்யும் என்கின்றனர் கல்வியாளர்கள். “பள்ளிக்கூடம் நடத்தப்படுவதன் நோக்கம் மதிப்பெண் ஈட்டக்கூடியவர்களாக மாணவர்களைத் தயார்படுத்துவது மட்டுமல்ல. பாடத்துக்கு அப்பால், பின்னாளைய வாழ்க்கைக்கான அனுபவ அடிச்சுவடியை வழங்குவதில் பள்ளி வளாகத்தின் பங்கு பெரிது.

பல்வேறு வாழ்க்கைமுறைத் திறன்கள், பக்குவமான மன வளர்ச்சி, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முதிர்ச்சி, தகவல் தொடர்பு மேம்பாடு, விளையாட்டு, கல்வி இணைச் செயல்பாடுகள், மதிப்புக் கல்வி, நேர மேலாண்மை, ஆசிரியர்களின் வழிகாட்டல் உள்ளிட்டவற்றையும் பள்ளி வளாகமே அரவணைப்புடன் போதிக்கும். பாடம் மட்டுமே சுமையாகித் தனிமையில் உழலும் மாணவருக்கு மனச்சோர்வு அதிகரிக்கவும், சுய ஒழுங்கு கெடவும் வாய்ப்பாகலாம்” என்று எச்சரிக்கிறார் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரான ஏ.ஜெரால்டு.

எல்லாம் இங்கே உள்ளன!

நுழைவுத் தேர்வு எதுவானாலும் அவற்றுக்கான அடிப்படையை பள்ளிப் பாடங்களால் மட்டுமே முறையாகத் தர முடியும் என்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்த்த முதுகலை ஆசிரியரான வி.ஸ்ரீதரன். “முறைசாரா கல்வி பெறாமல் நேரடியாக நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது மாணவரின் சுமையைக் கூட்டவே செய்யும். தற்போதைய புதிய பாடத்திட்டம் பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகளுக்கு அடிப்படையாகவும், பல போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும் உதவியாக அமைந்துள்ளது. அது மட்டுமன்றி மருத்துவம், பொறியியலுக்கு அப்பால் நிறைந்திருக்கும் உயர்கல்வி, பணி வாய்ப்புகளுக்கு ஈடுகொடுக்கவும் முறையான பள்ளி வளாகத்தை நாடுவதே நல்லது” என்கிறார் வி.ஸ்ரீதரன்.

கல்வி பெற பல வழிகள் இருக்கவே செய்கின்றன. வழக்கமான கல்வியைப் பெற முடியாத சூழ்நிலையில் இத்தகைய மாற்றுமுறைகள் மாணவர்களுக்கு வரப்பிரசாதமே. ஆனால், இன்றைய சூழலில் நுழைவுத் தேர்வு என்ற பூதத்துக்குப் பயந்து நம் மாணவர்களும் பெற்றோரும் தேசியத் திறந்த நிலைப் பள்ளிக் கல்வியை நாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு கல்வித் துறைக்கான அபாய ஒலி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x