Last Updated : 10 Feb, 2015 03:40 PM

Published : 10 Feb 2015 03:40 PM
Last Updated : 10 Feb 2015 03:40 PM

இந்தியாவின் ரொட்டிக் கூடை: பஞ்சாப்!

பஞ்சாப் என்றால் ஐந்து ஆறு என்று பொருள். சிந்து நதியின் கிளை ஆறுகளான ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆறுகள் பாய்வதால் பஞ்சாப் ஆனது. (இதில் ஜீலம், செனாப் ஆறுகள் தற்போது பாகிஸ்தானில் பாய்கின்றன).

பண்டைய பஞ்சாப்

3,300 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகமான ஹராப்பா ஒன்றுபட்ட பஞ்சாப்பை மையமாகக் கொண்டே அமைந்திருந்தது. மகாபாரத்தில் இடம்பெற்ற குருஷேத்ரப் போரும் இந்தப் பகுதியில் நடந்துள்ளதாகப் பதிவுகள் உள்ளன. ரிக் வேத காலம், மத்திய மற்றும் பிற்கால வேத காலங்கள் நிலவியுள்ளன. அன்றைய ஒன்றுபட்ட பஞ்சாப் ஆங்கிலேயர்களால் எளிதில் வெல்ல முடியாத பகுதியாகத் திகழ்ந்தது. இறுதியாக 1844-ல் தான் பஞ்சாப் வீழ்ந்தது.

பிரிவினையில் உதயம்

பரந்து விரிந்திருந்த பஞ்சாப் மாகாணம் 1947-ல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியாவின் பஞ்சாப் பின்னர் இமாச்சல பிரதேசம், ஹரியானா, யூனியன் பிரதேசமான சண்டிகர் எனப் பிரிக்கப்பட்டு 1966-ல் தற்போதைய பஞ்சாப் உதயமானது.

இன்றைய நவீன பஞ்சாபியர்கள் இந்தோ-ஆரியர்கள், ஸ்கைதியர்கள், பார்தியர்கள் மற்றும் கிரேக்கர்கள் ஆகிய இனக்குழுக்களின் வம்சாவளிகள்தான் எனப் பொதுவாகக் கூறப்படுகிறது. இருப்பினும் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் குஜ்ஜார்களும் பூர்வீக பஞ்சாபியர்களாக உள்ளனர்.

எல்லைகள்

மேற்கில் பாகிஸ்தானும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசலப் பிரதேசமும், தென் கிழக்கில் ஹரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் எல்லைகளாக உள்ளன. மாநிலத்துக்கு வெளியே உள்ள யூனியன் பிரதேசமான சண்டிகர்தான் பஞ்சாபுக்கும் ஹரியானாவுக்கும் தலைநகர்.

செழிக்கும் வேளாண்மை

பஞ்சாப்பின் பெரும்பகுதி வளமிக்க வண்டல் மண்ணைக் கொண்டுள்ளது. ராவி, பியாஸ், சட்லெஜ் நதிகள் பாய்கின்றன. சிறந்த நீர்ப்பாசனக் கட்டமைப்பால் அங்கு வேளாண்மையே முதன்மைத் தொழில். அதிக அளவில் கோதுமை பயிரிடுவதால் இந்தியாவின் ரொட்டிக்கூடை என அழைக்கப்படுகிறது. அரிசி, பருத்தி, கரும்பு, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவையும் முக்கியப் பயிர்கள்.

உலகின் 5-வது பெரிய மதம்

ஓரிறைக் கொள்கையை உடையதாக சீக்கிய மதத்தை கி.பி.15-ம் நூற்றாண்டில் குருநானக் தோற்றுவித்தார். அதை அவருக்குப் பின் வந்த 10 சீக்கிய குருமார்களும் பின்பற்றி வளர்த்தெடுத்தனர். பத்தாவது குருவான கோவிந்த் சிங் கடைசி குருவாக நீதிபோதனைகள் அடங்கிய எழுத்து வடிவ நூலான ஆதிகிரந்தத்தை அறிவித்தார். இதுவே சீக்கியர்களின் புனித நூலாகும். தாடி வளர்ப்பதும், குத்துவாளைத் தரிப்பதும் சீக்கிய குருவான குரு கோவிந்தரின் கட்டளையாகும்.

பஞ்சாபில் சீக்கியத்தை 60 சதவீத்தினரும் இந்து மதத்தைச் சுமார் 37 சதவீதத்தினரும் ஏனையோர் இஸ்லாம், பவுத்தம், சமணம், கிறிஸ்தவம் போன்ற மதங்களையும் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.

குருமுகி எழுத்துகள் மாநிலத்தின் அலுவல் மொழி. 11 உயர் கல்வி அரசுப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் முக்கியமானது.

இந்திய தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழு தனது தரவரிசையில் இந்தியாவின் சிறந்த அடிப்படைக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாக பஞ்சாப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது. நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் தனிநபர் வருவாயில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சுமார் 2.5 மடங்கு அதிகம் பெற்று பஞ்சாப் முதன்மை வகிக்கிறது. இதனால் இதை பணக்கார மாநிலம் என்றும் சொல்வதுண்டு.

75.8 சதவீத எழுத்தறிவு கொண்ட மாநிலம் இது. மக்கள் தொகை 2,77,04,236. பாலின விகிதாச்சாரம் 1,000 ஆண்களுக்கு 895 பெண்கள்.

கலை இலக்கியம்

கலை இலக்கியத்தில் வளமையான பாரம்பரியத்தைக் கொண்டது பஞ்சாப். குருநானக் கொடங்கி, அர்ஜுன் தேவ், குரு கோவிந்த் சிங், பெர்ஷிய கவிஞர் சந்தர் பான், பை வீர் சிங், பத்மபூஷனா, முதல் பஞ்சாபி பெண் கவிஞர் அம்ரித பிரிதம், ஷிவ் குமார் பாடல்வி மற்றும் நானக் சிங் போன்ற சிறந்த ஆளுமையினால் பஞ்சாபி இலக்கியம் சிறந்து விளங்குகிறது.

உணர்ச்சிமயமான இசையால் வசப்பட்டிருக்கிறது பஞ்சாப் சமூகம். பிள்ளைப் பேறு, காதல், திருமணம், பிறந்த வீட்டை விட்டுப் புறப்படும் பெண்களின் சோகம் என அனைத்துக்கும் பஞ்சாபியர்கள் பாடல்களைப் பயன்படுத்துகின்றனர். ஹரிரா, சுகாக், வாட்னா, சித்தானியான், அல்தானியான், மாஹியா, போளி, டோளா ஆகியவையும் பக்தி இலக்கியப் பாடல்களும் கோலோச்சுகின்றன.

பாங்கரா, ஜும்மர், லுட்டி, ஜுல்லி, டாங்கரா, துமால் ஆகியவை ஆண்களுக்கான நடனம். சம்மி, கித்தா, ஜாகோ, கிக்கிலி ஆகியைவ பெண்களுக்கான நடனம். கைவினைப்பொருட்கள் செய்வதிலும் பஞ்சாபியர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

பண்டிகைகள்

பசந்த் பஞ்சமி, பைசாகி, சப்பார், குகா நவமி, ரோஷினி, மலர்கோட்லா ஹைதர் ஷேக் திருவிழா, ஜோர் மேளா, ஹோலி, குருபுராப்ஸ், ராக்கி, தசரா, தீபாவளி, மாகி ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

பாரம்பரியமிக்க சுற்றுலா தேசமாக பஞ்சாப் பரிணமித்திருக்கிறது. அமிர்தசரஸ் பொற்கோயில், வாகா எல்லை, மகாராஜா ரஞ்சித் சிங் அருங்காட்சியகம், பதிண்டா கோட்டை, கெய்சர் பாக் பூங்கா, சுக்னா ஏரி, மொர்னி மலை, சாட்பிர் விலங்கியல் பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்கா, நேரு ரோஜா பூங்கா, பக்ரா நங்கல் அணை என ஏராளமான இடங்கள் காண்பதற்கு இனியவை.

மகத்தான தேசம்

மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், உத்தம்சிங், கர்தார் சிங் ஜப்பார், சேத் சுதர்ஸன், லாலா லஜபதிராய், ஹர்ஹிசன் சிங் சுர்ஜித் உள்ளிட்ட ஏராளமான விடுதலை வீரர்களை ஈன்ற மகத்தான மாநிலம் என்னும் பெருமையும் இதற்கு உண்டு.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x