Published : 26 Oct 2013 02:54 PM
Last Updated : 26 Oct 2013 02:54 PM

குருப்-1 மெயின் தேர்வு முறையில் மாற்றம்: சிறு வினாக்கள் இனி இல்லை

குருப்-1 மெயின் தேர்வுமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு மதிப்பெண் மற்றும் இரணடு மதிப்பெண்ணுக்கான சிறிய வினாக்கள் நீக்கப்பட்டுள்ளன.



துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்கான குரூப்-1 மெயின் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, அடையாறு அவ்வை இல்லம் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மையங்களில் தேர்வு நடந்தது. என்.கே.டி. பள்ளி தேர்வு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மெயின் தேர்வில் இடம்பெற்றுள்ள 3 தாள்களும் பொது அறிவு சம்பந்தப்பட்ட தாள்கள்தான். இதுவரை மெயின் தேர்வில் 1 மதிப்பெண், 2 மதிப்பெண்கள், 5 மதிப்பெண்கள், 15 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 1 மற்றும் இரண்டு மதிப்பெண்களுக்கான கேள்விகள் நீக்கப்பட்டு 3 மார்க், 8 மார்க், 15 மார்க் என 3 விதமான மதிப்பெண் நிலைகளில் கேள்விமுறை மாற்றப்பட்டுள்ளது. விஷயத்தை தெரிந்து கொண்டிருக்கிறார்களா என்பதை காட்டிலும் அதை எப்படி புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை சோதிக்கும் வகையில்தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

அடையாறு அவ்வை இல்லம் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தேர்வெழுதிய மாணவி நந்தினி கூறுகையில், "மெயின் தேர்வில் முன்பு தகவல் சார்ந்த கேள்விகள்தான் கேட்கப்படும். ஆனால், இப்போது, யோசித்து விடையளிக்கும் வகையில்தான் கேள்விகளை கேட்டிருந்தார்கள். நமது சொந்த கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்க கேள்விகளில் அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது" என்றார்.

மெயின் தேர்வுக்கான எஞ்சிய 2 தாள்கள் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். மெயி்ன் தேர்வுக்கு 1,372 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 84 சதவீதம் பேர் (1,152) மட்டுமே தேர்வு எழுத வந்தனர். எஞ்சிய 220 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

3 மாதத்தில் தேர்வு முடிவு குருப்-1 மெயின் தேர்வு நடைபெறுவதை ஆய்வு செய்வதற்காக சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப் பள்ளி மையத்திற்கு வந்த டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், "மெயின் தேர்வு முடிவை 3 மாதத்தில் வெளியிடுவோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x