மின்சார வாரிய அணி பற்றவைத்த ‘கபடி’ நெருப்பு | ‘டைகர்’ ராஜரத்தினம் 12

மின்சார வாரிய அணி பற்றவைத்த ‘கபடி’ நெருப்பு | ‘டைகர்’ ராஜரத்தினம் 12
Updated on: 
3 min read

1980, செப்டம்பர் 1. தமிழ்நாடு கபடி வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். அன்றுதான் தமிழ்நாடு மின்சார வாரியம் தனது கபடி அணிக்காக ஜெயபாலன், ராஜ ராஜேந்திரன், ‘கள்ளக்குறிச்சி’ ராஜா, சுபாஷ், ராஜரத்தினம், வெங்கடாசலமூர்த்தி ஆகிய ஆறு வீரர்களை வேலைக்கு எடுத்தது. அந்த அற்புதமான இபி அணி தமிழ் மண்ணில் கோலோச்சியது மட்டுமல்லாமல், அகில இந்திய அளவிலும் தன் முத்திரையைப் பதித்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வாங்கிய ராஜரத்தினம், ‘மனத்தி’ கணேசன், முருகானந்தம்  உள்பட பலரைப் பட்டைத் தீட்டி இந்திய அணிக்கு அனுப்பியது. பத்தொன்பது வயதிலேயே ராஜரத்தினம் சீனியர் நேஷனல் போட்டியில் தமிழ்நாட்டுக்காக ஆடிவிட்டார். ஆனால், திறமை என்கிற சிறகுடன் ராஜரத்தினம் கபடி வானில் பறக்க ஆரம்பித்தது மின்சார வாரியத்தில்  சேர்ந்த பிறகுதான். கபடியைத் தாண்டி அந்த மின்சார வாரிய அணியின் சிறப்பு இரும்பால் இணைக்கப்பட்டது போன்ற ஒற்றுமை.     

ராஜரத்தினம் பார்க்காத களங்கள் இல்லை, ஆடாத அணிகள் இல்லை. ஆனால், நான்கு ஆண்டுகள் விளையாடிய மின்சார வாரிய அணியைப் போன்று அவர் இதயத்தில் இடம்பிடித்தது எதுவும் இல்லை.

“என்னை அமுக்காம உலகத்திற்குத் தெரிய வைத்தது மின்சார வாரியம். டீம்ல இருந்த எல்லாரும் டாப் பிளேயர்ஸ். ஆனால், எங்களுக்குள்ள துளி கூட ஈகோ இருந்ததில்லை. நான் எல்லாரோட துணிகளையும் தோய்ச்சி போடுவேன்; ஒருத்தர் இன்னொருத்தர் டிரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு போயிட்டே இருப்போம். அது மாதிரி ஒரு டீம் இனிமே வராதுங்க” என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ராஜரத்தினம்.

1980இல் ஏற்பட்ட பந்தம் இன்று வரை தொடர்கிறது. அந்த மின்சார வாரிய அணி கல்யாணங்கள், கபடிப் போட்டிகளில் இப்போது சந்தித்தால்கூட ஜென் ஸீக்களைவிட அதிக உற்சாகமாக இருப்பார்கள்!

அந்த மின்சார வாரிய அணியின் தலைவராக இருந்த ஜெயபாலன், ஒற்றுமைதான் அவர்களின் பலம் என்கிறார். “எல்லாரையும் சகோதரர்கள் மாதிரி கவனிப்பேன். ஏன் என்னை இறக்கவில்லை என்று ஒரு சப்ஸ்டிடுயூட் பிளேயர்கூட என்னைக் கேட்டதில்லை. கேப்டன்ஷிப் ரொட்டேஷன் முறையில கொடுப்போம்; அப்பவும் பிரச்சினையே வந்ததில்லை. ஸ்போர்ட்ஸ் ஆபிசர் கண்ணையன், கபடி இன்சார்ஜ் மாணிக்கம் எல்லாம் எங்களுக்குப் பெரிய சப்போர்ட்.

80களில் மின்சார அணி களம் இறங்குனாலே தனி மரியாதைதான். எங்க பேட்சுக்குப் பிறகும் சாமியப்பன், கணேசன், பழனிவேல், சூசைராஜ், புலேந்திரன், ரவி சுந்தர் போன்ற பிளேயர்ஸ் மூலமாக மின்சார வாரியத்தில் கபடி பாரம்பரியம் தொடர்ந்தது” என்று பெருமையாகச் சொல்கிறார் ராஜரத்தினம்.  

ராஜரத்தினத்துக்கு பயம் என்பதே கிடையாது என்கிறார் ஜெயபாலன். “அவரோட வலிமையான உடம்பை, திறமையை நினைச்சே எதிரணி பயந்துடும். ராஜரத்தினம் களத்தில இருந்தா எல்லாருக்கும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். புடிக்க வந்த சுலபமா ரிலீஸ் ஆகி வந்துடுவாரு; பெரும்பாலும் பாயிண்ட் எடுக்காம திரும்ப மாட்டாரு. இயற்கையா வரும் கோபமும் அவருடைய ஆட்டத்திற்கு ஒரு ப்ளஸ்தான். வெறி இருந்தாதான் வெற்றி வரும். அவரு திறமைக்கு எங்க போயிருந்தாலும் ஜொலிச்சிருப்பாரு; மின்சார வாரியம் மூலமா அவருக்கு வெளிச்சம் கிடைத்ததில் எங்களுக்குச் சந்தோஷம்.”

ராஜரத்தினம் எங்கேயும் எப்போதும் ஜாலியாக இருப்பார் என்கிறார்,  மின்சார வாரியத்தில் பின்னர் சேர்ந்த விதுரன். “அவ்வளவு பெரிய பிளேயராக இருந்தாலும், விளையாடும் போது திட்டுனா  கோச்சுக்கவே மாட்டார். நான் அவரைத் திட்டியிருக்கேன். அந்த டீம்ல யாரும், யார் மேலையும் உண்மையா கோபப்பட மாட்டாங்க. எங்க ஆட்டத்தில அனல் பறக்கும்; வெளியில எப்பவும் கலகலப்புதான். எங்க மின்சார வாரிய அணி மாதிரி இன்னொரு அணி அமையாது” என்று உணர்வு மேலிடச் சொன்னார் விதுரன்.  

80களில் மாநில அளவில் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த மின்சார வாரிய வீரர்களால் தேசியப் போட்டிக்கான தமிழ்நாடு அணி நிரம்பியிருக்கும்.

“நாலு, அஞ்சு மின்சார வாரிய பிளேயர்ஸ் நேஷனல்ஸ் போவோம். ஜாம்ஷெட்பூர்ல நடந்த ஒரு நேஷனல் சாம்பியன்ஷிப்பில் யாருமே தோற்கடிக்க முடியாத பஞ்சாபைத் தோற்கடித்தோம். ராஜரத்தினம் அந்த மேட்ச்ல கலக்கிட்டார். பக்கத்துல இருந்து பார்த்து பிரமிச்சுட்டேன். அது நம்ம கபடிக்கு ஒரு பொற்காலம்!” என்றார் விதுரன். 

<div class="paragraphs"><p>ஜெயபாலன் -&nbsp;விதுரன்</p></div>

ஜெயபாலன் - விதுரன்

மதுரை காவல்துறை அணியின் முன்னாள் வீரரான காசிராஜன், ராஜரத்தினத்தின் ஸ்பீட் மற்றும் பவரைச் சமாளிப்பது கஷ்டம் என்றார். “ராஜரத்தினம் என்ன செய்வாருன்னு கணிக்கவே முடியாது. தூத்துக்குடி பக்கத்துல உள்ள கொளத்துர்ல ஒரு லீக் போட்டியில நாங்களும் மின்சார வாரிய அணியும் மோதுனோம். ஸ்கோர் 8-8. கடைசி ரைடுக்கு ராஜரத்தினம் வந்தார். லீக் போட்டித்தானே, எம்ப்ட்டி ரைடு போட்டு மேட்ச்சை சமமா முடிச்சிடுவாருன்னு பார்த்தா, ரெண்டு பாயிண்ட்ஸ் எடுத்து மின்சார வாரிய அணியை ஜெயிக்க வைச்சிட்டார்!

திருச்செங்கோட்டில் ஒரு போட்டிக்கு முன்னாடி, அவரோட ஒரு கால் பெருவிரல் அறுந்து தொங்கிக்கிட்டு இருந்தது. ஒண்ணுமே ஆகாத மாதிரி, களத்துல இறங்கி எங்களைத் தோக்கடிச்சார். இப்படிப் பேசிக்கிட்டே போகலாம்.”

ராஜரத்தினத்தின் கருங்கல் போன்ற உடல், இயற்கை அவருக்குக் கொடுத்த வரம் என்று சொல்லலாம். “திருப்புவனத்தில் ஒரு போட்டி முடிஞ்சு அவரை அந்தப் பக்கம் வந்த லாரியில் ஏத்தி மதுரைக்கு அனுப்பி வைத்தேன். ஏறுப்பான்னு சொன்னவுடனே, டிரைவர் பக்கத்தில இருக்கிற சீட்டில் உட்காராமல், லாரியோட டாப்புக்கு நொடிப்பொழுதில் பாஞ்சிட்டார்! அசந்துட்டேன். விளையாடவே பிறந்தவர் ராஜரத்தினம்” என்கிறார் காசிராஜன்.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர்.

தொடர்புக்கு: tnrags@gmail.com

மின்சார வாரிய அணி பற்றவைத்த ‘கபடி’ நெருப்பு | ‘டைகர்’ ராஜரத்தினம் 12
‘ஆதித்தன்’ சகோதரர்கள் காட்டிய அன்பு! | ‘டைகர்’ ராஜரத்தினம் 11

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in