‘ஆதித்தன்’ சகோதரர்கள் காட்டிய அன்பு! | ‘டைகர்’ ராஜரத்தினம் 11

‘ஆதித்தன்’ சகோதரர்கள் காட்டிய அன்பு! | ‘டைகர்’ ராஜரத்தினம் 11
Updated on: 
3 min read

வாழ்க்கையிலும் விளையாட்டிலும் கோபத்தினால் எந்தப் பயனும் இல்லை என்று நம்புபவர் கிளாடிஸ். கோபப்படாதவன் மனிதனே இல்லை என்று நினைப்பவர் ராஜரத்தினம். தன்னைக் கட்டுப்படுத்துவது ரொம்பக் கஷ்டம் என்று ராஜரத்தினமே ஒப்புக்கொள்கிறார். “பருத்தி வீரன் படம் பார்த்திருப்பீங்க, சின்ன வயசில அது மாதிரி பத்து பருத்தி வீரனா இருந்தேன். யார் பேச்சையும் கேட்க மாட்டேன்” என்கிறார் ராஜரத்தினம். 

ராஜரத்தினத்தின் நெருங்கிய நண்பர் ராஜதுரை, கபடிப் புலி விளையாட்டுக்கு வெளியே பாய்ந்த சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்.

“அவரு இபியில இருக்கும்போது திருச்செந்தூர்ல ஒரு போட்டி முடிச்சுட்டு எல்லாரும் விடியக் காலை முதல் பஸ்ஸில் நாகர்கோவில் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்ப சில லாரி டிரைவர்கள், அவங்க வண்டிகளை பஸ்சுக்கு முன்னயும் பின்னயும் அணைச்சு, கண்டக்டரை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி செஞ்சாங்க. அப்ப ராஜரத்தினம் அவங்களை அடிச்சு ஓடவிட்டது என்னால இன்னும் மறக்க முடியல” என்கிறார். 

“கபடில திட்டத்தோட விளையாடுவேன்; வாழ்க்கையில் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் களத்தில் இறங்கிடுவேன். சின்ன வயசில என் மனசுக்குத் தப்புன்னு தோணிச்சுன்னா பட்டுனு அடிச்சுடுவேன்” என்கிறார் அதிரடியான சிரிப்போடு ராஜரத்தினம்.

<div class="paragraphs"><p>சிவந்தி ஆதித்தனோடு ராஜரத்தினம் குடும்பத்தினர்</p></div>

சிவந்தி ஆதித்தனோடு ராஜரத்தினம் குடும்பத்தினர்

மனதில் பட்டதைச் சட்டென்று பேசும் ராஜரத்தினத்துக்குப் பொறுமைசாலியான கிளாடிஸ், பொருத்தமான வாழ்க்கைத் துணையானார். ராஜரத்தினத்தின் கபடி வளர்ச்சிக்கு, தினத்தந்தி நாளிதழைத் தொடங்கிய சி. பா. ஆதித்தனாரின் மகன்களான ராமச்சந்திர ஆதித்தனும் சிவந்தி ஆதித்தனும் பேருதவியாக  இருந்திருக்கிறார்கள். 

திருநயினார்குறிச்சி விவேகானந்தர் கபடி மன்றத்தில் விளையாடிய பிறகு ராஜரத்தினம் சேர்ந்த இடம் சேரன்மாதேவியிலிருந்த சன் பேப்பர் மில் அணி. தினத்தந்தி அதிபரும் முன்னாள் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருமான சிவந்தி ஆதித்தன் கபடி, வாலிபால், தடகள அணிகளைத் தன்னுடைய சன் பேப்பர் மில் சார்பாகச் சிறப்பாக நடத்தி வந்தார். நல்ல சம்பளம், அருமையான சாப்பாடு, சிவந்தி ஆதித்தனின் விளையாட்டு ஆர்வம் சன் பேப்பர் மில் அணிகளில் இருந்தவர்களுக்குப் பெரிய ஊக்கமாக இருந்தது. 

“கவர்ன்மென்ட் சம்பளத்தைவிட அதிகம் கொடுப்பார் சிவந்தி ஐயா. நான் விளையாடுவதைப் பார்ப்பதற்காகவே போட்டிகள் நடுத்துவார். எனக்கு அர்ஜுனா விருது கிடைத்ததை அவர் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்” என்கிறார் ராஜரத்தினம்.

அந்தக் காலக்கட்டத்தில் சன் பேப்பர் மில் அணிக்கு விளையாடாத பெரிய கபடி வீரர்களே நம்ம மாநிலத்தில் இல்லை என்கிறார் முன்னாள் தமிழ்நாடு வீரரான ரவிச்சந்திரன். “மனத்தி கணேசன், ரவி சுந்தர், கருணாநிதி, பழனி எல்லாரும் சன் பேப்பர் மில்லுக்கு ஆடியிருக்காங்க. தாமிரபரணிக் கரையோரம் நல்ல சாப்பாடு, ஓய்வு, பிறகு விளையாட்டு. பல அருமையான வீரர்களுக்கு ஆல மரம்போல இருந்தது அந்த அணி.”

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1980இல் வேலை கிடைத்ததால், ராஜரத்தினம் குறைந்த காலமே சன் பேப்பர் மில் அணியில் இருந்தார். இருந்த காலத்தில் கோப்பைகளை வாங்கிக் குவித்தார். பின்னர் EB அணி கலந்து கொள்ளாத போட்டிகளில், சன் பேப்பர் மில்லுக்காகத் தொடர்ந்து ஆடினார் கபடிப் புலி. 

சிவந்தி ஆதித்தனின் அண்ணன் ராமச்சந்திர ஆதித்தன் தனக்குக் கடவுளைப் போன்றவர் என்கிறார் ராஜரத்தினம். “நான் எங்கே விளையாடினாலும் பெரிய ஐயா வந்துடுவாங்க. என் ஆட்டத்திற்கு ரசிகர் அவர். அவர் எனக்குக் கொடுத்த ஆதரவுக்கு அளவே இல்லை. என்னோட பொண்ணுங்களோட திருமணத்தை அவர்தான் நடத்தி வச்சார். சின்ன பொண்ணு திருமணத்தின் போது அவருக்கு உடம்பு சரியில்லாம இருந்தாலும் வந்து ஆசிர்வாதம் செஞ்சார். பெரிய ஐயாவை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார் ராஜரத்தினம். 

<div class="paragraphs"><p>ராமச்சந்திர ஆதித்தன் - ராஜரத்தினம்&nbsp;</p></div>

ராமச்சந்திர ஆதித்தன் - ராஜரத்தினம் 

ராஜரத்தினம் வாழ்க்கையில் இன்னோர் ஆதித்தனும் முக்கியமான பங்காற்றியிருக்கிறார்: “மத்திய அரசில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த தனுஷ்கோடி ஆதித்தனும் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.

தேசிய கபடி கழகத்தைக் கண்காணிக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பாண்டியன் ஐபிஎஸுக்கு தேசிய அளவில் நிர்வாகப் பொறுப்பு கிடைக்க உதவி செய்தார். நம்ம கபடிக்கும், நம்ம வீரர்களுக்கும் தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்தவர் தனுஷ்கோடி ஆதித்தன்.” 

கரூரைச் சேர்ந்த பாண்டியனின் அன்பையும் ஆதரவையும் நன்றியோடு நினைவுகூர்ந்தார் ராஜரத்தினம். “1994 ஏசியன் கேம்ஸ்க்குப் பாண்டியன் மேனேஜராக வந்தது அணியின் கேப்டனா எனக்கு ரொம்ப உதவியா இருந்தது. கபடி தெரிந்தவர். 1990 லிருந்து 1994 வரை என்கூடவே இருந்தவர். நம்ம பிளேயர்ஸ் முன்னேற்றத்துக்கு உதவி செய்தவர். அவர் நிர்வாகப் பொறுப்பில் இருந்த போதுதான் தமிழ்நாடு மூன்று முறை தொடர்ந்து சீனியர் நேஷனல்ஸ் ஜெயிச்சுது. அப்ப இருந்த தமிழ்நாடு டீம், ஏசியன் கேம்ஸ்லகூட ஈசியா தங்கப் பதக்கம் வாங்கியிருக்கும்” என்கிறார் ராஜரத்தினம்.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர்.

தொடர்புக்கு: tnrags@gmail.com

‘ஆதித்தன்’ சகோதரர்கள் காட்டிய அன்பு! | ‘டைகர்’ ராஜரத்தினம் 11
டைகரின் பாய்ச்சலுக்கு கிளாடிஸே காரணம்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 10

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in