ராஜரத்தினம் எனும் ‘மாமனிதர்!’ | ‘டைகர்’ ராஜரத்தினம் 14

ராஜரத்தினம் எனும் ‘மாமனிதர்!’ | ‘டைகர்’ ராஜரத்தினம் 14
Updated on: 
3 min read

ராஜரத்தினத்தின் கபடியை அணு, அணுவாக ரசிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் ரவிச்சந்திரன். “அவரோட அற்புதமான ஆட்டத்தை வீடியோ மூலமாக ஆவணப் படுத்த முடியவில்லை என்பது பெரிய இழப்புதான். பல பரிமாணங்களைக் கொண்டது அவரது கபடி. அடிப்பதிலும் பிடிப்பதிலும் அவர் வெளிப்படுத்திய வித்தியாசமான ஆட்ட நுணுக்கங்கள் பின்னால் வந்த கபடி வீரர்களுக்குப் பெரிய பாடம். அவரோடு விளையாடியவர்கள், அவரது ஆட்டத்தைப் பார்த்தவர்கள் வாய்மொழியாகத்தான் ராஜரத்தினத்தின் கபடியை வரும் சந்ததியினருக்குக் கடத்த முடியும்” என்கிறார்.

ராஜரத்தினத்தின் ஒன்றுவிட்ட அக்கா மகனான ரவிச்சந்திரனுக்கும் டைகருக்கும் ஆறு வயதுதான் வித்தியாசம். ஆனால் மருமகன், மாமாவைத் தன்னுடைய துரோணாச்சாரியாராகப் பார்க்கிறார். ரவிச்சந்திரன், இன்று நாடறிந்த கபடி பயிற்சியாளர்.

நேர்மைக்கும் உழைப்புக்கும் பெயர் போன அவர், ஆலத்தங்கரையில் நடத்தும் A to Z கபடி கிளப் மூலம் நிறையப் பேருக்கு ப்ரோ கபடி லீகில் விளையாடும் வாய்ப்பு, அரசு வேலை கிடைத்துள்ளது. 2010 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜீவகுமாரை உருவாக்கியது ரவிச்சந்திரன்தான்! ப்ரோ கபடி லீகில் மூன்று வெவ்வேறு அணிகளுடன் பட்டம் வென்ற பெருமை கொண்டவர் ஜீவகுமார்.

பலருக்கும் கிடைக்காத வாய்ப்பைப் பெற்றவர் ரவிச்சந்திரன். “நான் ராஜரத்தினத்தைப் பார்த்தே வளர்ந்தேன். என்னை வளர்த்தவரு அவரு. எங்க அப்பாகூட அவருக்குப் பெரிய ரசிகர். பிற்காலத்துல தமிழ்நாடு அணியில அவரோட விளையாடி சீனியர் நேஷனல்ஸில் தங்கப் பதக்கம் வெல்லும் சான்ஸும் எனக்குக் கிடைச்சது. ராஜரத்தினத்தின் அண்ணன் ராஜாமணிக்குக் கைப்பிடி, சிலம்பம், வர்மம் எல்லாம் தெரியும். அந்த வீர விளையாட்டுகள் ராஜரத்தினத்தின் ரத்தத்திலேயே இருந்தன. வர்மம், கைப்பிடி பயிற்சி அவருடைய கபடிக்கு ரொம்ப உதவி செஞ்சுச்சு” என்கிறார் ரவிச்சந்திரன்.

ராஜாமணி வேலைக்காக சென்னைக்குச் சென்ற பிறகு, அவருடன் இருக்கும் வாய்ப்பு ராஜரத்தினத்தின் கபடி பயணத்தில் முக்கியமான கட்டம் என்கிறார் ரவிச்சந்திரன்.

<div class="paragraphs"><p>ரவிச்சந்திரன் தன்னுடைய மாமா மற்றும் ஹீரோ ராஜரத்தினத்துடன்</p></div>

ரவிச்சந்திரன் தன்னுடைய மாமா மற்றும் ஹீரோ ராஜரத்தினத்துடன்

“அவருக்குப் படிப்புல பெரிய ஆர்வம் இல்லை. சொந்த ஊர்ல இருந்தா வம்பு, சண்டை செய்வாருன்னு சென்னைக்குக் கூட்டிட்டுப் போனது நல்லதா போச்சு. சென்னையில முருகானந்தம் சார் கிட்ட கிடைச்ச நல்ல பயிற்சியும், பல போட்டிகளில் கலந்துகிட்ட அனுபவமும் அவரை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துட்டுப் போச்சு.”

ராஜரத்தினம், கபடிக்கு இயற்கை கொடுத்த வரம் என்கிறார் ரவிச்சந்திரன். “ஒவ்வொரு விளையாட்டிலும் இயற்கையே சில வீரர்களை வடிவமைத்துக் கொடுக்கும். அப்படி கபடிக்கு அமைந்தவர்தான் ராஜரத்தினம். கபடிக்குத் தேவையான உடலமைப்பு அவருக்கு இயற்கையாகவே இருந்தது. சிறு வயதில் கடற்கரை மண்ணில் பயிற்சியெடுத்ததால் சர்வ சாதாரணமா டைவ் அடிப்பாரு.

அதே நேரத்துல எப்போதுமே கடினமா உழைச்சாரு. தூங்கும்போதும்கூட கபடிதான் நினைப்பு. தன்னை ஒருத்தன் களத்தில் அடிச்சிட்டா, திரும்ப எப்படி அடிக்கிறதுனு யோசிச்சுட்டே இருப்பாரு. அந்தச் சிந்தனைதான் அவரை லெஜெண்ட் ஆக்கியது!”

“களத்தில் ராஜரத்தினம் என்ன செய்வார் என்பதைக் கணிப்பது கடினம். சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி கேமை மாத்திப்பாரு. ஒரு ரைடர் தப்பித்துப் போனால், செஞ்ச தப்பை உடனே திருத்தி அடுத்த முறை பிடிச்சிடுவாரு. ரைட் கார்னர்ல நிப்பாரு; திடீர்னு பார்த்தா ரைட் இன் பொசிஷன்ல இருந்து டேக்கிள் செய்வாரு. அவரு இருந்தா எப்போதும் டேஞ்ச்சர்தான்;

அவரைப் பார்க்காமல் ஆடினா முடிஞ்சுது. ரைடு போகும்போது கவர் டிஃபெண்டரைக் கையால் தள்ளி, பின்னால் பிடிக்க முயற்சி செய்றவங்களைக் காலால் உதைத்து அவர் எடுக்கும் புள்ளிகள் அற்புதமா இருக்கும்! இந்தியா முழுக்க அவரைப் பார்த்துப் பயந்தாங்க; வியந்தாங்க” என்று பெருமையாகச் சொன்னார் ரவிச்சந்திரன்.

கபடி விளையாட உடல் வலிமை தேவைதான்; ஆனால் அது இருந்தால் மட்டுமே சாம்பியன் ஆக முடியாது. தொடுவதற்கு, தப்பிப்பதற்கு, பிடிப்பதற்கு நிறைய யோசிக்க வேண்டும். ராஜரத்தினம் என்றாலே பவர் கேம் என்று பொதுப் புத்தியில் பதிந்துள்ளது;

ஆனால் அவரோட ஆட்டத்தில் மூளையோட பவருக்கும் முக்கியமான பங்கு இருந்ததாக ரவிச்சந்திரன் சொல்கிறார். “தான் விளையாடுவதற்கு மட்டுமல்ல; அணியே விளையாட திட்டம் போடுவாரு. அவர் சொன்னதைக் கேட்டாலே நல்லா விளையாடலாம். எதிரணி வீரர்களைத் துல்லியமா கணிப்பாரு. அவருக்கு நுணுக்கமான கபடி அறிவு இருந்துச்சு!”

பல விளையாட்டுகளில் சூப்பர் ஸ்டார் வீரர்களாக இருப்பவர்கள், அணியில் உள்ள மற்றவர்களின் ஆட்டத்தில் கவனம் செலுத்துவார்கள் என்று சொல்ல முடியாது.

ஆனால், ராஜரத்தினம் தானும் நன்றாக விளையாடி, தன்னுடைய சக வீரர்களையும் சிறப்பாக விளையாட வைக்கும் தலைமைப் பண்பு உள்ளவராகத் திகழ்ந்தார். அதனால்தான் ஐ.சி.எஃப்., ரயில்வே, தமிழ்நாடு, இந்திய அணிகளுக்குத் தலைவராக இருந்துள்ளார்.

“அணியை வழிநடத்துவதிலும் ராஜரத்தினம் தனிச்சிறப்பு வாய்ந்தவர். எல்லா பிளேயர்ஸையும் நல்லா ஒருங்கிணைப்பாரு; அவங்க மனசைப் புரிஞ்சுப்பாரு. அவ்வளவு பெரிய பிளேயராக இருந்தாலும் நண்பர் மாதிரி பழகுவாரு. களத்துக்கு வெளில ஆட்டம், பாட்டம்னு ஒரே ஜாலியா இருப்பாரு. அவரே எல்லாருக்கும் சமைச்சுப் போடுவாரு. எல்லாரும் நல்லா சாப்பிடுவதைப் பார்த்து சந்தோஷப்படுவாரு. அதனாலதான் ரசிகர்களுக்கு அவரை எப்படிப் பிடிக்குமோ அதே மாதிரி சக வீரர்களுக்கும் பிடிக்கும்” என்கிறார் ரவிச்சந்திரன்.

கபடியைப் பொறுத்தவரை, ரவிச்சந்திரனுக்கு அவருடைய மாமாதான் அல்டிமேட்!

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர்.

தொடர்புக்கு: tnrags@gmail.com

ராஜரத்தினம் எனும் ‘மாமனிதர்!’ | ‘டைகர்’ ராஜரத்தினம் 14
ஜாம்பவான் அவதார் சிங்கை வீழ்த்திய ராஜரத்தினம்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 13

X