

1980 முதல் 1984 வரை தமிழ்நாடு மின்சார வாரிய கபடி அணியில் ராஜரத்தினத்தோடு விளையாடியவர்களுடன் பேசுவதே உற்சாகமான அனுபவம். டைகர் மீது இருக்கும் பவித்திரமான அன்பு, அவர் தொட்ட உயரத்தின் பெருமை எல்லாரிடமும் வெளிப்படுகிறது. அதோடு, களத்திலும் வெளியிலும் மின்சார வாரிய அணி வீரர்கள் கொண்டாட்டமாகக் கழித்த நாள்கள் குறித்த சுவையான கதைகள் ஏராளம்.
ராஜ ராஜேந்திரன்-ராஜரத்தினம் நட்புக்கு வயது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள். “1979இல் அவர் முதன்முறையாக சீனியர் நேஷனல்ஸ் ஆடும்போது, நானும் அந்த டீம்ல இருந்தேன். பிறகு மின்சார வாரிய அணியில் சேர்ந்து விளையாடினோம். பயமே இல்லாத ஆள். எவ்வளவு பெரிய அடிபட்டாலும், கவலைப்படாமல் அவர் ஆடுவதைப் பார்த்து, மின்சார வாரிய ஸ்போர்ட்ஸ் ஆபீசர் கண்ணையன், இவர் மனுஷர்தானா என்று ஆச்சரியப்படுவார்.
மின்சார வாரியத்துக்கு ஆடும்போது உச்சத்தில் இருந்தார். அவரை நம்பி எந்தப் போட்டியிலும் இறங்கலாம். ரெய்டு செய்யும்போது அவர் செய்யும் ரிலீஸ், ஜம்ப் கண்ணுலேயே நிக்குது. ரெய்டில் முதல் பாதியில் இருக்கும் எனர்ஜியைக் கடைசி வரைக்கும் மெயின்டெயின் பண்ணுவார். அது ஈசி இல்ல. அந்த விடாமுயற்சிதான் அவரை இருபது ஆண்டுகள் டாப்ல வைத்திருந்தது” என்கிறார் திருவாரூர் அமெச்சூர் கபடி கழகத்தின் செயலாளராக உள்ள ராஜ ராஜேந்திரன்.
“ராஜரத்தினத்தோட சிந்தனை முழுக்க கபடிதான் இருக்கும்; இப்ப ஆட விட்டாகூட ஆடுவார். எங்க போனாலும் டைகர், டைகர்னு ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவாங்க. மகாராஷ்டிராவில பெரிய ஹீரோ அவர்.
அவரோட கேம் நம்ம தமிழ்நாடு கபடிக்குப் பெரிய மரியாதையை வாங்கிக் கொடுத்தது. பவர் கேம்தான் அவருடைய பிளஸ் என்றாலும், ரொம்ப நுட்பத்தோடவும் விளையாடுவார். போனஸ் பாயிண்ட் அறிமுகமான போது ரொம்ப சீக்கிரமாகவே அதற்குத் தகுந்த மாதிரி ஆட்டத்தை அட்ஜஸ்ட் செஞ்சுக்கிட்டார்.”
கபடி மட்டும் ராஜரத்தினம் இல்லை என்கிறார் ராஜ ராஜேந்திரன். “கபடி களத்துக்கு வெளியிலும் அவர் பெரிய என்டர்டெய்னர். அவர் பக்கத்தில் இருந்தால் எல்லாரும் சிரிச்சுக்கிட்டே இருப்போம். நிறைய குறும்பு செய்வார். பாக்குப் பொட்டலத்தில் பேனா இங்க் மாத்திரையைக் கலந்து வைத்து, ஏமாந்தவங்க வாயெல்லாம் நீல நிறமாக்கிடுவார். ஒருத்தர் உட்கார வரும்போது நாற்காலியை இழுத்துக் கீழே விழ வைப்பார்.
அதை நாம செஞ்சாலும் சிரிப்போடு கடந்து போவார். வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு ரொம்பப் பசிக்குதுன்னு சொல்லி சாப்பாடு போடுறவங்களைப் பயமுறுத்துவார். நான் இருபது வயசில பார்த்த ராஜரத்தினம் இன்னும் அப்படியேதான் இருக்கார்! மின்சார வாரிய அணியில் ஆடிய கபடியைப் போலவே, நாங்க எல்லாரும் சேர்ந்து சிரித்த சிரிப்பையும் மறக்க முடியாது.”
ராஜரத்தினம், அவரோட இன்னொரு மின்சார வாரிய அணி சகாவான ‘கள்ளக்குறிச்சி’ ராஜாவுக்கு எப்போதும் டார்லிங்தான்! “இப்பகூட அவர் என்னை டார்லிங்னுதான் கூப்பிடுவார். நானும் அப்படிதான் கூப்புடுவேன். நாங்க எல்லாரும் மின்சார வாரிய அணியில் சேர்ந்த பிறகு முதலில் கலந்துகொண்ட அகில இந்திய மின்வாரிய கபடி போட்டியில் கோப்பையை அடிச்சோம். பெரிய சாதனை அது.
1983ல, ஸ்டேட் சாம்பியன்ஷிப் உள்பட 15 போட்டிகளில் நாங்க தோற்காம சாதனை படைத்தோம். ஸ்டேட் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் ஐ.சி.எஃப்.க்கு எதிரா 50-1 லீட் எடுத்தோம். இறுதிப் போட்டியில் மதுரா கோட்ஸ்க்கு எதிரா செஞ்சுரி அடிச்சோம். பாதங்களில் ஓட்டைகளுடன் பகலில் நடக்கவே ராஜரத்தினம் கஷ்டப்படுவார்; நைட்டு களத்தில வேற ஒரு ஆளு மாதிரி ஆடுவார்” என்று தனது டார்லிங்கின் ஆட்டத்தை நினைவுகூர்ந்தார் ராஜா.
எல்லாரும் தரமான வீரர்களாக இருந்தாலும் மின்சார வாரிய அணியில் ஈகோவுக்கு இடமே கிடையாது என்கிறார் ராஜா. “களத்தில எல்லாரும் எல்லா வேலையையும் செய்வோம். சேர்ந்து கபடி விளையாடுவது அவ்வளவு மகிழ்ச்சியான விஷயமாக இருந்தது. போட்டி நடுத்துறவங்களைக் கஷ்டப்படுத்த மாட்டோம். கோயில்ல படுத்திருக்கோம்.
சாப்பாடு, பஸ் சார்ஜ் கொடுக்காத இடங்களில் ஆடியிருக்கோம். ஜெயிச்ச பிறகு பரிசுத்தொகை கொடுக்க முடியாதவங்க கிட்ட சண்டை போடாம வீடு திரும்பியிருக்கோம். அப்படி விளையாடிய கபடிதான் எங்க எல்லாரோட வாழ்க்கையிலும் ஒளி ஏத்தி வச்சுது.” ராஜாவின் இரண்டு மகன்கள் சேலத்திலும் கள்ளக்குறிச்சியிலும் நடத்தும் உணவகங்களின் பெயர், ‘கபடி ராஜா’ ஹோட்டல்.
ராஜரத்தினத்தின் ரைடை ஜாக்கி சானின் சண்டைக் காட்சிகளோடு ஒப்பிடுகிறார் ராஜா.
“நாலு பேரு புடிக்க வந்தாலும் கையால் தள்ளி, காலால் உதைத்து, தலையால் முட்டி, ஜம்ப் செஞ்சு சமாளிப்பார். சுருக்கமா சொல்லணும்னா சண்டை செய்வார். அவர் கை இரும்பு மாதிரி இருக்கும். அவரோட மூவ்மென்ட் எல்லாமே இயற்கையாக வந்ததுன்னு நினைக்கிறேன். என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்னு ஆடுவார். புதுக்கோட்டையில் வேகமா ஒரு பிளேயரைப் பிடிக்க ஓடி, சவுக்கு மர கேலரியில மோதி அவர் மண்டையில 18 தையல்கள் போட வேண்டியிருந்தது. அடுத்த நாள் போட்டிக்கு ரெடி ஆயிட்டார்!” என்று வியப்போடு நினைவுகூர்ந்தார்.
ராஜரத்தினம், கள்ளக்குறிச்சி ராஜா (வலது) மற்றும் ராஜ ராஜேந்திரனுடன் (இடது).
பெங்களூருவைச் சேர்ந்த ஏ.எஸ்.சி. என்கிற ராணுவ அணியில் மலை போன்ற தோற்றதுடன் அவதார் சிங் என்கிற ரைடர் இருந்தார். “அவரைத் தொடுவதே கஷ்டம்; அவரைத் தனி ஆளாக ராஜரத்தினம் பிடிச்சார். அடுத்த நாள் காலை சாப்பிடும் இடத்தில், ராஜரத்தினம் காலைத் தொட்டு அவதார் சிங் கும்பிட்டார்! ராஜரத்தினம்னு அவர் அப்பா ஏன் பேர் வச்சார்னு தெரியாது; கபடில அவர் ஒரு ரத்தினம்தான்!” என்கிறார் ராஜா.
- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர்.
தொடர்புக்கு: tnrags@gmail.com