

ஒவ்வொரு முறை புயல் அறிவிப்பு வெளியாகும் போதும், எனக்கு ஒரு புயல்தான் நினைவுக்கு வரும். அது எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம்.
நாகப்பட்டினம் அருகே அந்தணப்பேட்டையில் ஒரு நள்ளிரவு. திடீரென ‘உய்ய்ங்ங்’ என்கிற சத்தம் காதை அடைக்க விழித்துக்கொண்டோம்.
மின்சாரம் இல்லை. எங்கும் கும்மிருட்டு. நிமிர்ந்தால் கூரையில் வானம் கறுப்பாகத் தெரிந்தது. வீசிய காற்றின் வேகத்தில் வேய்ந்த நாட்டு ஓடுகள் எல்லாம் பறந்தன.
வீட்டுக்குள்ளேயும் மழை. மேலே தளம் பாவிய அறைக்குள் பதுங்கினோம். தூக்கமேயில்லை. விடிந்தது. வெளியே எட்டிப் பார்த்தால் வாசலில் அடைத்த இரும்புத் தடுப்புகள் தெருவில் கிடந்தன.
எல்லா வீடுகளிலும் அதே நிலைதான். தோட்டத்துப் பக்கம் போனால் ஒரு டஜன் தென்னை மரங்களில் பத்து தரையில் சாய்ந்திருந்தன.
அடுப்புக்குள் நீர் நிரம்பி, விறகுகள் நனைந்து கிடந்ததால் பட்டினியில் கிடந்தோம். விழுந்த தென்னை மரங்களில் இருந்து இளநீர் பறித்துக் குடித்தோம்.
மதியம் பசி தாங்காமல் ‘கடைகள் திறந்திருந்தால் ஏதாவது வாங்கி வரலாமே’ என்று ஒரு சொம்போடு புறப்பட்டேன்.
ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்ட வாளம் வழியாக நடந்தால் புத்தூர் அண்ணா சிலை வரும். அங்கு கடைகள் இருக்கும். தண்டவாளம் நடுவே நடந்தபோது இரண்டு புறமும் வயல்கள் கடல்நீரால் நிரம்பி இருந்தன. கடல்நீரோடு வந்த கடல் பாம்புகள் தண்டவாளத்தின் அடியில் சுருண்டு கிடந்தன.
ஓட்டமும் நடையுமாகத் திறந்திருந்த கடையில் சொம்பு நிறைய டீயும் பன்னும் வாங்கிவந்து பசியாறினோம். மறுநாள் அரசு சார்பில் ரொட்டி, அரிசி விநியோகமானது. ஒரு வாரத்துக்குப் பிறகே நிலைமை இயல்புக்குத் திரும்பியது.
- அண்ணா அன்பழகன், சென்னை.