

ஜிஎஸ்டி வரி அதிகாரிகளின் கைது அதிகாரங்களை ரத்துசெய்வது, பணம் திரும்பப் பெறுவதற்கான விதிகளைத் தளர்த்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ஜிஎஸ்டி அமலாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கியமான சீர்திருத்த நடவடிக்கை இது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவரும் மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் நடைபெற்ற 57ஆவது கூட்டத்தில்தான் இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி வரி ஏய்ப்பு செய்வது, போலியான கட்டண ரசீது (Invoice) உருவாக்குவது / வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் தனிநபர்களைக் கைது செய்வதற்கான வரி அதிகாரிகளின் நேரடி அதிகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக சிஜிஎஸ்டி சட்டம் 2017இல் 69ஆவது பிரிவை நீக்குவதற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. குற்றவியல் வழக்கு தொடர்வதற்கான குறைந்தபட்ச நிதி வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சக் கட்டாயத் தண்டனைகள் / அபராதம் விதிக்கும் அதிகாரமும் நீதித் துறையின் விருப்பத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.