

நாம் அதிகம் சுவைக்காத இலங்கைத் தமிழர் உணவு வகைகளை, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் இயங்கிவரும் ‘அடிசில்’ உணவகம் அளிக்கிறது. “எங்க உணவு வகைகளில் 90% தேங்காய்பால் சேர்த்துச் சமைக்கப்படுகிறது” என்கிறார் இங்கு பணியாற்றிவரும் கௌரி நாதன். இவருடன் பிரதீபா, விஜிதா ஆகி யோர் இணைந்து இந்த உணவகத்தைத் தொடங்கி யிருக்கின்றனர்.
அடிசில் உணவகத்தில் பணியாற்றும் 12 பேரும் புழல் அகதிகள் முகாமில் வசிப்பவர்கள். காலை 6 மணிக்குத் தொடங்கும் இவர்களது பணி இரவு 8 மணி வரை தொடர்கிறது.
கட்லெட், ரோல் என நாம் கேள்விப்பட்ட சிலவற்றில் தொடங்கி, முட்டை அப்பம், மஞ்சள் தோசை எனப் பலர் கேள்விப்படாத உணவு வகைகள் வரை இவர்களின் பட்டியலில் இருக்கின்றன.
“தமிழர்களின் காலை உணவு இட்லி, தோசை அல்ல; இடியாப்பம், புட்டுதான். இவற்றுக்குச் சிவப்பு அரிசியைப் பயன்படுத்துகிறோம்” என்கிறார் கெளரிநாதன். தேங்காய்பாலில் செய்யப்படும் சொதி, சம்பல் ஆகியவற்றுக்குத் தமிழகத்தில் ரசிகர்கள் கணிசம்.