வாத்தியாருக்கு எல்லாரும் பிள்ளைகள்தானே! | நதி நகர்ந்த பாதை 4

வாத்தியாருக்கு எல்லாரும் பிள்ளைகள்தானே! | நதி நகர்ந்த பாதை 4
Updated on: 
2 min read

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் எங்கள் ஊர். நானும் பழனியும் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம். எங்களோடு சரிக்குச் சரி விளையாடிக் கொண்டிருந்தவள் பவளம். பழனிக்கு அத்தை மகள். அவளும் ஐந்தாம் வகுப்பு தான். ஆனால், பாதிநாள் பள்ளிக்கூடம் வரமாட்டாள்.

ஐந்தாம் வகுப்பு வாத்தியார் சாமியப்பன் எங்களையும் கூட்டிக்கொண்டு வீடு வீடாகப் போய், பிள்ளைகளைக் கூட்டி வருவார். அதில் கத்தி அடம்பிடித்து, ”பள்ளிக்கோடத்துக்கு வர மாட்டேன்” என்று மண்ணில் உருளுகிறவள் பவளம்தான்.

ஒருநாள் இப்படிப் பள்ளிக்கு வரச்சொல்லி இழுக்கையில் வாத்தியாரை, கெட்டவார்த்தை ஒன்றைச் சொல்லித் திட்டிவிட்டாள். ஒரு சின்ன பிள்ளை வாயிலிருந்து அப்படியொரு வார்த்தை வருமென்று வாத்தியார் எதிர்பார்க்கவில்லை. கண் கலங்கி விட்டார்.

அதுக்கப்புறம் வாத்தியார் அவளைக் கூப்பிட வர மாட்டார். நாங்கள்தான் போவோம். எப்பவாவதுதான் பள்ளிக்கூடத்துக்கு வருவாள் ஆனால், எங்களோடுதான் விளையாடு வாள். லீவு விட்டால் மலையடிவாரத்துக்குப் போய்விடுவோம். மெயின் ரோட்டுக்கு மேற்கே பருத்தி போட்டிருக்கும் தோட்டங்களைக் கடந்தால் மானாவாரி விவசாயக்காடுகள்.

அங்கே சோளம், மொச்சை, தட்டாம்பயறு சில இடங்களில் வள்ளிக்கிழங்கு, வெள்ளரி எல்லாம் போட்டிருப்பார்கள். வெள்ளரிப் பிஞ்சுகள், கோவைப்பழம், மொச்சை, சில தோப்புகளில் இருக்கும் கொய்யா இவற்றை எல்லாம் தின்றபடியே, விளையாடியபடியே சந்தோஷமாக அலைவோம். மரம் மரமாக ஏறி இறங்கி பவளத்துக்குப் பொன்வண்டு பிடித்துத் தருவோம்.

மழைக்காலம் தொடங்கிவிட்டால் காளான்கள் காடுகளில் வெடிக்கும். அவற்றை எடுத்துத் துண்டில் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து, பவளத்தின் அம்மாவிடம் கொடுத்தால் ருசியாகச் சமைத்துத் தருவார். மூன்று பேரும் சப்புக்கொட்டித் தின்போம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in