

‘வள்ளியூர் முறுக்கு வாயில போட்டு நொறுக்கு.' இது வள்ளியூர்ப் பகுதியின் ‘கொலைகொலையா முந்திரிக்கா’ விளையாட்டில் வரும் சொற்றொடர். வெளியூர்க்காரர்களுக்குப் பொருள் இல்லாத விளையாட்டுச் சொற்றொடராக இது தோன்றலாம். ஆனால், எங்களுக்கு அது ஓர் ஊரின் மணத்தோடு கலந்த குழந்தைப் பருவ நினைவு.
சுற்றியுள்ள பல சிற்றூர்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு, அவற்றின் வாழ்வாதாரமாக விளங்கும் ஊர் வள்ளியூர். வணிகம், சந்தை, போக்குவரத்து, கல்வி எனப் பல வழிகளிலும் சுற்றுவட்டார மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கும் இந்த ஊர், வரலாற்றிலும் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறது.
பெயர்க் காரணம்
கோயில் தலப்புராணத்தின்படி, முருகப் பெருமான் வள்ளியை மணந்த பின்னர், மகேந்திரகிரியின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்தக் குன்றில் வள்ளியுடன் வந்து தங்கியதாகக் கூறப்படுகிறது. வள்ளியுடன் முருகன் குடியிருந்த ஊர் என்பதால் ‘வள்ளியூர்’ என்கிற பெயர் ஏற்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது.
சு.சண்முகசுந்தரத்தின் வள்ளியூர் வரலாறு நூலில், ‘பள்ளியூர்’ என்கிற பெயர் பின்னர் ‘வள்ளியூர்’ என வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இலக்கியங்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள், கல்வெட்டுகள், வாய்மொழி மரபுகள் போன்ற பல்வேறு ஆதாரங்களைத் தொகுத்து எழுதப்பட்ட அந்த நூல், வள்ளியூரின் பெயர் வரலாற்றை ஒரே மரபுக்குள் அடைத்துவிடாமல் பார்க்க வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது.
முருகன் கோயில்
வள்ளியூர் முருகன் கோயில் வரலாற்றுச் சிறப்பும் அழகும் கொண்ட பழமையான குகைக் கோயில். அறிவிப்புப் பலகைகளில் இது ‘சுப்பிரமணிய சுவாமி கோயில்’ என்று குறிப்பிடப்பட்டாலும், எங்கள் நினைவில் இது எப்போதும் ‘வள்ளியூர் முருகன் கோயில்’தான்.
கோயிலின் உள்ளே நுழைந்ததும், மலைக்குள் அமைந்துள்ள ஆலயத்துக்கே உரிய அமைதி நம்மைச் சூழும். வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும்போது சிறியதாகத் தோன்றும் ஆலயம், உள்ளே சென்றபின் அதன் சந்நிதிகளும் மண்டபங்களும் ஒன்றோடு மற்றொன்று இணைந்திருக்கும் விதத்தால் விரிந்து காணப்படுகிறது. இயற்கையான பாறையும் மனிதக் கைவண்ணத்தில் உருவான ஆலயக் கட்டுமானமும் சிறப்பான தோற்றத்தைக் கொண்டுள்ளன.
வள்ளியூர் முருகன் கோயிலின் அழகு அதன் கற்சிற்பங்களிலோ கட்டிட அமைப்பிலோ மட்டும் இல்லை. மலையைச் சார்ந்து அமைந்திருப்பதும், அதன் கிழக்கே விரிந்திருக்கும் தெப்பக்குளமும், தெப்பத் திருவிழா நாள்களில் அந்த இடம் பெறும் உயிரோட்டமும் சேரும் போதுதான் இந்த ஆலயத்தின் முழுமையான தோற்றம் நமக்குக் கிடைக்கிறது.