

சென்னையில் ராஜரத்தினம் கபடியோடு வாழ்க்கையையும் கற்றுக் கொண்டார். “சென்னை எனக்குக் கடின உழைப்பைச் சொல்லிக் கொடுத்தது. என்னோட சின்ன அண்ணன் ராஜகோபால் திருவொற்றியூர் காலடிபேட்டையில் வச்சிருந்த கடைக்கு, கொத்தவால் சாவடியிலிருந்து வாழைத்தார்களை சைக்கிளில் கட்டி எடுத்து வருவேன்” என்று ராஜரத்தினம் நினைவுகூர்ந்தார்.
“கதிர் அறுப்பவர்கள், கடப்பாறையை வைத்து வேலை செய்பவர்கள் எல்லாம் தாங்கள் ஒர்க் அவுட் செய்வதாக நினைத்துக்கொள்வதில்லை. சின்ன வயசில நான் செய்த வேலைகளின் பலன் பின்னாடி நான் கபடி விளையாட உபயோகமா இருந்துச்சு. கபடிக்கு முக்கியமான வலிமையான கால்கள் எனக்கு டெவலப் ஆக உதவி செய்த அந்த வாழைத்தார்களுக்கும் நன்றி சொல்லணும்” என்று சிரிக்கிறார்.
முன்னாள் அஞ்சல் துறை வீரரும், இந்நாள் கபடி நடுவருமான அன்புமதி, ராஜரத்தினத்தின் கால் வலிமைக்கு ஒரு சம்பவத்தைச் சொன்னார்: “80களில் திருநெல்வேலியில் நடந்த மேட்ச்ல தமிழ்ச்செல்வன்னு ஒரு பிளேயர் ராஜரத்தினத்தின் கால் முட்டியைத் தலையால் குத்திப் பிடித்து அவுட் ஆக்கினார். அவுட் ஆன ராஜரத்தினம் எழுந்து நடந்து போனார்; அவுட் ஆக்கிய தமிழ்ச்செல்வன் மூணு நாள் கோமாவுல இருந்தார்!”
கில்லி, கும்கி, கயல், பைசன் படங்களில் நடித்திருக்கும் அன்புமதி, ராஜரத்தினம் மாதிரி தைரியமான வீரரைப் பார்க்க முடியாது என்கிறார். “கால் கட்டைவிரலுக்குக் கீழே சதைப் பிஞ்சு ரத்தக்களரியா இருக்கும். ஒண்ணுமே ஆகாத மாதிரி ஆடுவாரு” என்று வியக்கிறார்.
அன்புமதி
கடந்த நாற்பது ஆண்டுகளாகச் சென்னையில் ராஜரத்தினத்தின் நிழலாக இருப்பவர் நொச்சிக்குப்பம் ‘கோல்டு’ ராஜேந்திரன். “அவரோட கபடில மயங்கி அவருக்கு நண்பர் ஆனேன். அந்த நட்பு இன்னும் தொடருது. அவருடைய ஆட்டத்தை உலகமே ரசித்தாலும், சென்னையின் மீனவ கிராமங்களில் அவருக்குத் தனி இடம் உண்டு. அவரோட ஆட்டத்தை அப்படி ரசிப்பாங்க. கணபதிபுரமா இருக்கட்டும், திருவொற்றியூராக இருக்கட்டும், கடலுக்குப் பக்கத்துலயே வளர்ந்தவர் அவர். மீனவர் சமுதாயத்துல பிறக்காத மீனவர் ராஜரத்தினம்” என்று சொன்னார் சென்னை மாவட்ட கபடி சங்கத்தின் முக்கிய நிர்வாகியான ராஜேந்திரன்.
திருவொற்றியூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே.பி.பி. சங்கர் தன் இளம் வயதில் அற்புதமான கபடி வீரராக இருந்தவர். மேலும், ராஜரத்தினத்தின் மிகப்பெரிய ரசிகர். திருவொற்றியூர் வேற இருவரையும் இணைக்கும் பாச சங்கிலி!
2003இல் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ‘அயோத்திகுப்பம்’ வீரமணி, ராஜரத்தினத்தின் மிகப்பெரிய ரசிகர். “வீரமணி எப்போதும் ரொம்ப டென்ஷனாக இருப்பாரு; ஆனால் ராஜரத்தினத்தின் கபடியைப் பார்த்தால் ரிலாக்ஸ் ஆகி விடுவார். எக்மோர் ஸ்டேடியத்தில் ராஜரத்தினம் ஆடினால் ஓரமாக, மறைந்திருந்து பார்ப்பார்” என்கிறார் ராஜேந்திரன்.
அவ்வளவு திறமை இருந்தாலும் ராஜரத்தினத்திற்கு எதுவும் எளிதாகக் கிடைக்கவில்லை.
“கபடில மேல வரணும்னு ரொம்பக் கஷ்டப்பட்டாரு. காசிமேட்டில் மீன்பாடி வண்டி ஓட்டியிருக்காரு. 1990 ஏசியன் கேம்ஸ்ல கோல்டு மெடல் வாங்கிய போது எனக்குப் பெருமையாக இருந்தது. 1994இல் தங்கம் ஜெயிச்சுட்டு வந்தவுடன், ஏர்போர்ட்டிலிருந்து 250 ஆட்டோக்களோட ராஜரத்தினத்தை ஊர்வலமாக அழைச்சுட்டு வந்தேன். மறக்க முடியாத நிகழ்ச்சி அது” என்று உணர்வுவயப்படப் பேசினார் ராஜேந்திரன்.
ராஜேந்திரனைப் பொறுத்தவரை, ராஜரத்தினம் கபடியின் தோனி. “தோக்கற போட்டிய ஜெயிக்க வைப்பதில் மட்டுமல்ல; எல்லாருக்கும் புடிச்சவரா இருப்பதிலும் அவரு தோனிதான். அவரைப் பிடிக்காதவங்க கபடி ரசிகராகவே இருக்க முடியாது. எதிரிக்கும், ராஜரத்தினத்தின் கபடி பிடிக்கும். கபடியை அணு, அணுவாக ரசிச்சுப் பார்க்கும் மகாராஷ்டிராவில அவரு பெரிய ஹீரோவாக இருந்தாரு.”
கொட்டிவாக்கம் குப்பன் ஒரு தரமான கபடி வீரராக இருந்தவர். தமிழ்நாட்டுக்காக விளையாடி இருக்காரு. அவருடைய கபடி காட்ஃபாதர் ராஜரத்தினம்தான்: “எல்லாரும் அவரை டைகர்னு சொல்லுவாங்க; என்னைப் பொறுத்தவரை அவரு ஒரு கம்பீரமான சிங்கம். அவரோட டீம்ல நானும் விளையாடி இருக்கேன் என்பதே எனக்குப் பெருமைதான். அவரு பக்கத்துல இருந்து ஆடுன்னு சொன்னா ஆட்டம் அதுவா வரும். எனக்குப் படிப்பு கிடையாது; கபடிதான் உலகத்தைக் காண்பித்தது; கபடிதான் எனக்கு மெச்சூரிட்டி குடுத்தது.”
'டைகர்' ராஜரத்தினம்
களத்தில் ஆக்ரோஷத்தின் மறு உருவமான ராஜரத்தினத்தின் இன்னொரு பக்கம் அன்பால் நிறைந்தது. “அவரோட அன்பால் சேர்ந்த கூட்டமும் அதிகம். எல்லாரும் எப்போதும் நல்லா சாப்பிடணும்னு நினைப்பார். அதற்காகச் செலவு செய்யத் தயங்க மாட்டார். ரொம்பப் பாவம் பார்ப்பார். ஈகை குணம் அதிகம். அவ்வளவு பெரிய பிளேயராக இருந்தாலும், ஒரு சின்ன பையன்கிட்டயும் பந்தா இல்லாம பழகுவார், சேர்ந்து டீ குடிப்பார்” என்கிறார் கோல்ட் ராஜேந்திரன்.
ராஜரத்தினத்தின் இரண்டு மகள்களும் ராஜேந்திரனை போட்டோ மாமா என்றே அழைப்பார்கள்; டைகரை அவர் அவ்வளவு ஒளிப்படங்கள் எடுத்துள்ளார்.
- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர்.
தொடர்புக்கு: tnrags@gmail.com