சென்னையில் தீட்டப்பட்ட ‘குமரி வைரம்’ | 'டைகர்' ராஜரத்தினம் 4

சென்னையில் தீட்டப்பட்ட ‘குமரி வைரம்’ | 'டைகர்' ராஜரத்தினம் 4
Updated on: 
2 min read

கபடி என்றாலே தாம்பரத்துக்கு அந்தப் பக்கம் உள்ள கிராமங்களில் மட்டும் ஆடப்படும் விளையாட்டு என்கிற எண்ணம் பலரிடம் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் தலைநகரிலும் கபடியை மூச்சாக நினைக்கிற இடங்கள் பல இருக்கின்றன. ஏன், நம் ராஜரத்தினம் டைகராக பாய அச்சாரம் போட்டதே சென்னைதான்.

“என் கபடி திருத்தப்பட்டு, ஒரு வடிவத்துக்கு வந்ததே சென்னையிலதான். இங்க என் கால் படாத ஏரியாவே இல்ல. பழவேற்காட்டிலிருந்து கல்பாக்கம் வரைக்கும் இருக்கும் மீனவ குப்பங்களோட கூடப்பிறந்தது கபடி. உள்ளே வந்தீங்கனா விருகம்பாக்கம், சேத்துப்பட்டு, அசோக் நகர் போன்ற இடங்கள்ள கபடியை நல்லா விளையாடுவாங்க, ரசிப்பாங்க,” என்கிறார் ராஜரத்தினம்.

கபடி கோர்ட்டில் புள்ளிகளை எடுக்கும் வீரர் (ரைடர்) இரண்டு பக்கங்களிலும் ஓடியாடி விளையாடுவது போல, ராஜரத்தினமும் கணபதிபுரத்தையும் சென்னையையும் மாறி, மாறி ரெய்டு செய்திருக்கிறார்.

“ஏழாவது வரைக்கும் கணபதிபுரத்துல படிச்சேன். அப்புறம் ரெண்டு வருஷம் திருவொற்றியூர்ல என்னோட பெரிய அண்ணன் ராஜாமணி வீட்டுல தங்கிப் படிச்சேன். படிச்சேன்னு சொல்றதைவிட விளையாடினேன்” என்று அவருக்கே உரிய வெடிச்சிரிப்புடன் சொன்னார்.

<div class="paragraphs"><p>ராஜரத்தினம் -&nbsp;முருகானந்தம்</p></div>

ராஜரத்தினம் - முருகானந்தம்

சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் ஓர் ஆண்டு கணபதிபுரம்; பிறகு பத்தாம் வகுப்பு சென்னையில். பள்ளியில் தேசிய அளவுக்குச் செல்வதற்கு நானூறு ரூபாய் கிடைக்கவில்லை என்பதற்காக ராஜரத்தினம் எக்ஸ்பிரஸ் மீண்டும் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டது. நான்காவது, ஐந்தாவது வகுப்புகளை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த அக்கா வீட்டில் தங்கிப் படித்ததால், ராஜரத்தினத்தின் இளம்பருவம், தென், மத்திய மற்றும் வட தமிழ்நாடு அனுபவங்களை உள்ளடக்கியது எனலாம்.

பல வீடுகளில் அண்ணன்மார்களே தம்பிகளின் ஆதர்சம். ராஜாமணி அண்ணன் புளியந்தோப்பில் இருக்கும் திரு.வி.க கபடி அணிக்கு விளையாடிய போது, கூடவே ராஜரத்தினமும் போவார்.

“அண்ணன் மெயின் டீம்ல இருப்பாரு; நான் B டீம்ல விளையாடுவேன். எப்போதும் புளியந்தோப்பிலதான் கிடப்பேன். அவ்வளவு பிளேயர்ஸ் அங்கே இருப்பாங்க. ஆடு தொட்டி ஏரியாவுல எங்க திரும்பினாலும் கபடி, கபடிதான். சீனிவாசன், முனுசாமி அங்கே முக்கியமான பிளேயர்ஸ்” என்று நினைவுகூர்ந்தார் ராஜரத்தினம். சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு அருகிலிருக்கும் புளியந்தோப்பில் தற்சமயம் கால்பந்து ரொம்ப பிரபலம்.

ஒரு போட்டியில் சென்னையிலேயே பெரிய அணியான பி&சி மில்லுடன் திரு.வி.க A டீம் ஆட வேண்டும். திரு.வி.க அணியின் முக்கியமான வீரர் அன்றைக்கு வரவில்லை. கேப்டன் முனுசாமிக்கு செலக்க்ஷன் தலைவலி. எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தபோது, துடிப்போடு நின்று கொண்டிருந்தார் 16 வயது ராஜரத்தினம். ‘ஆடுறா தம்பி’ என்று  ராஜரத்தினத்தைக் களமிறக்கினார் முனுசாமி.

“அப்பவே ரொம்ப ஸ்பீடா விளையாடுவேன். ரெண்டு, மூணு கேட்ச் மாட்டிக்கிச்சு. மேட்சை ஜெயிச்சுட்டோம். பி&சி மில்லைத் தோற்கடிப்பது எளிது அல்ல. அந்த ஆட்டத்தைப் பார்த்துவிட்டு டைரக்டா மாவட்ட சீனியர் அணியில இடம் கொடுத்தாங்க” என்று பெருமையுடன் சொன்னார் ராஜரத்தினம்.

திரு.வி.க சீனியர் அணியில் ஒரு வீரரான முருகானந்தம், ராஜரத்தினத்தின் கபடி வாழ்க்கையில் ஒரு பயிற்சியாளராக முக்கியப் பங்காற்றினார். ராஜரத்தினம் படித்த பள்ளியிலும், பின்னர் அவர் பணியாற்றிய தமிழ்நாடு மின்சார வாரியத்திலேயும் முருகானந்தம்தான் பயிற்சியாளர். தமிழ்நாட்டிலிருந்து National Institute of Sports மூலமாக கபடி பயிற்சியாளர் பட்டயம் வாங்கிய முதல் நபர் அவர்தான்.

<div class="paragraphs"><p>சேத்துப்பட்டைச் சேர்ந்த முன்னாள் கபடி வீரர் ஜெயசிம்மவர்மன்</p></div>

சேத்துப்பட்டைச் சேர்ந்த முன்னாள் கபடி வீரர் ஜெயசிம்மவர்மன்

“அண்ணன் ராஜாமணியோட விளையாடியிருந்ததால், முருகானந்தம் என்னை நல்லாப் பார்த்துக்கிட்டார். நிறையக் கத்துக் கொடுத்தார். புளியந்தோப்பில் ஆரம்பிச்ச பாடம், EBல நான் இருந்த ஐந்து வருடங்களும் தொடர்ந்தது. முருகானந்தம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத கோச். அவருகிட்ட பல நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன்” என்று தன்னுடைய சென்னை நாள்களை நன்றியோடு நினைவுகூர்ந்தார் ராஜரத்தினம்.

சேத்துப்பட்டு ஏரியாவிலும் கபடி கோலோச்சியிருக்கிறது. “சேத்துப்பட்டு எனக்கு இன்னொரு பூர்விகம். அப்பண்ணராஜ்னு ஒரு அற்புதமான பிளேயர் சேத்துப்பட்டுதான். ரயில்வேயில் வேலை செஞ்சார். எழுபது, எண்பதுகளில் ஐம்பது நல்ல பிளேயர்ஸ் சேத்துப்பட்டுல இருந்தாங்க” என்றார் ராஜரத்தினம்.

சேத்துப்பட்டைச் சேர்ந்த முன்னாள் கபடி வீரர் ஜெயசிம்மவர்மன், ராஜரத்தினம் ஒரு தனிப்பிறவி என்கிறார். “எங்க வீட்டுக்குப் பல முறை வந்திருக்காரு. அவரோட கபடிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ரத்தம் கொட்டினாலும் விளையாடுவாரு; தைரியம் அவருக்குக் கடவுள் கொடுத்த வரம்” என்று உணர்வுப் பொங்கச் சொன்னார்.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர்.

தொடர்புக்கு: tnrags@gmail.com

சென்னையில் தீட்டப்பட்ட ‘குமரி வைரம்’ | 'டைகர்' ராஜரத்தினம் 4
உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த கபடி! | ‘டைகர்’ ராஜரத்தினம் 3

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in