

இயற்கையாக அமைந்த திறமை மட்டுமே ஒருவரை விளையாட்டில் ஆகச் சிறந்த வீரராக உருவாக்காது. அந்தத் திறமையை மிளிரச் செய்ய முயற்சியும் பயிற்சியும் அவசியம். கபடி விளையாட ஆரம்பித்த நாளிலிருந்து, ஓய்வு பெறும் நாள் வரை கற்றுக்கொள்வதை டைகர் ராஜரத்தினம் நிறுத்தவே இல்லை.
“கபடியை அவ்வளவு நேசித்தேன். நல்லா விளையாடணும்னுதான் நினைப்பேன்; வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்து ஆட மாட்டேன். எந்த ஒரு விளையாட்டையும் அனுபவித்து விளையாடினால், வெற்றி தானாக வரும்” என்று தன்னுடைய வெற்றி ரகசியத்தைச் சொன்னார் ராஜரத்தினம்.
ஒவ்வொரு நாளும் தன்னுடைய ஆட்டத்தில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்று ராஜரத்தினம் விரும்புவார். அவர் இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வாங்கியதை ஊரறியும். ஆனால், அதற்குப் பின்னால் இருந்த பல நாள் உழைப்பை ராஜதுரை அறிவார். கன்னியாகுமரி மாவட்டம் திருநயினார்குறிச்சி விவேகானந்தர் கபடி மன்றத்தில் ராஜரத்தினத்துடன் எழுபதுகளில் விளையாடியவர் ராஜதுரை.
“ராஜரத்தினத்தின் சொந்த ஊரான கணபதிபுரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் கடற்கரை அவரது கபடிக்கு உறுதுணையாக இருந்தது. கடற்கரை மணலில் ஓடுவது ரொம்பக் கஷ்டம்; ஆனால் ராஜரத்தினம் சளைக்காமல் ஓடுவார். அதனால அவரது கணுக்கால்கள் உறுதி அடைந்தன. ரெய்டு போகும்போது அவரோட ஆங்கிளைப் பிடிக்கவே முடியாது. அந்தக் காலத்தில் கோயம்புத்தூர் லக்ஷ்மி மில்ஸ் வீரரான தண்டபாணி ஆங்கிள் ஹோல்டு ஸ்பெஷலிஸ்ட். எனக்குத் தெரிஞ்சு, அவரிடம் ராஜரத்தினம் அவுட்டானதே இல்ல” என்கிறார் ராஜதுரை.
ராஜதுரை - ராஜரத்தினம்
“நாங்க விவேகானந்தர் மன்றத்துக்கு ஆடும்போது, ‘தீவட்டி’ ராஜேந்திரன் என்கிற கன்னியாகுமரி மாவட்ட வீரர் டேஷ் செய்து ரைடரை வெளிய தள்ளுவதில் கில்லாடி. அவரைப் பார்த்தாலே எதிரணிக்குப் பயம் வந்துடும். ஆனால், ராஜரத்தினம், ‘தீவட்டி’ ராஜேந்திரன் மீது கையை வைத்து, எதிராளியின் வேகத்தையும் வலிமையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தப்பி வந்துவிடுவார். அவர் கிட்ட வேகம் மட்டுமல்ல; விவேகமும் உண்டு. அவரோட ஆட்ட நுணுக்கங்களை ஆராய்ச்சியே செய்யலாம்” என்று உற்சாகமாகப் பேசினார் ராஜரத்தினத்தின் அரை நூற்றாண்டு கால நண்பர்.
“ரெய்டு செய்வதில் மட்டுமல்ல, தடுப்பாட்டம் ஆடுவதிலும் ராஜரத்தினம் கைதேர்ந்தவர். தனி ஆளாகக் களத்தில் இருந்தாலும், ரைடரைக் கையைப் பிடித்து காலை வாருவார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு அற்புதமான வீரரும், மின்சார வாரியத்தில் வேலை பார்த்த மனோகரனுடன் சேர்ந்து நடுக்கோட்டுக்கு அருகே சொல்லி வைத்து, ராஜரத்தினம் டேஷ் செய்வதைப் பார்த்துகிட்டே இருக்கலாம்.
இத்தனைக்கும் ராஜரத்தினத்தின் அதிகமான உயரம் டேஷ் செய்வதற்கு ஏதுவானதில்லை. மனோகரன்-ராஜரத்தினம் செய்யும் டேஷை, டிஸ்கோ டேஷ் என்று சொல்வோம். டைகரோட கேம் கண் முன்னாடி நிக்குது; சொல்லி விளக்குவது ரொம்ப கஷ்டம்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் ராஜதுரை.
விவேகானந்தா மன்றத்திலிருந்து சேரன்மாதேவி சன் பேப்பர் மில் அணிக்காக விளையாட ராஜரத்தினம் சென்றபோது கூடவே போனார் ராஜதுரை: “ஈபில வேலைக்குச் சேர்ந்த பிறகும், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல்ஸ் லிமிடெட் உள்பட பல துறைகளில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. அவருடைய உற்ற நண்பரும், சிறந்த வீரருமான பிரேம் குமாருக்கும் வேலை தந்தால் நானும் வருகிறேன் என்று சொல்லி ஐசிஎஃப்ல சேர்ந்தார்.”
ராஜரத்தினம் கபடி விளையாடுவதற்காகவே பிறந்தவர் என்றாலும், அந்த விளையாட்டு அவருக்கு உடல் முழுவதும் காயங்களைக் கொடுத்தது. அவர் உடலில் ஒரு பாகத்தில்கூட கபடியின் பாதிப்பு இல்லாமல் இல்லை. இப்போது ராஜரத்தினம் நடக்கும் போது படும் சிரமத்தைப் பார்த்தால், தனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும் என்கிறார் ராஜதுரை.
சிலரின் பொறாமையும் கட்டுப்பாடு விதிகளை மீறுபவர் என்கிற குற்றச்சாட்டும் ராஜரத்தினத்தின் கபடி வாழ்க்கையில் நிழல் போலப் பின்தொடர்ந்து வந்துள்ளன. “பயிற்சியாளரின் சொல்லை மீறாதவன் ஒரு கிரியேட்டிவ் பிளேயர் ஆக முடியாது. அவரோட வளர்ச்சியைத் தடுக்க நினைத்தவர்கள், சூரிய ஒளியை கை வைத்து மறைத்து விடலாம் என்று நினைத்தவர்களைப் போலத்தான்” என்று ஆக்ரோஷத்தோடு சொல்கிறார் ராஜதுரை.
சிறு வயதில் நண்பர்களுடன் திருவிழாக்களுக்குச் செல்லும்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கணியன் ஆட்டத்தைப் பார்த்தால் ஆட ஆரம்பித்து விடுவாராம் ராஜரத்தினம்.
“கபடியில் ரைடராக அவருடைய ஆட்டத்தை ரசித்துள்ளேன். அவரோட கபடி வீடியோ இப்ப இருந்தா, பார்த்துக் கவலையை மறக்கலாம். கபடி மைதானத்துக்கு வெளியேயும் ராஜரத்தினம் எல்லாரையும் கவரும் ஒரு மேக்னெட்தான்” என்றார் ராஜதுரை.
கணபதிபுரத்திற்கு அருகே இருக்கும் மண்டைக்காட்டில் வசித்து வரும் ராஜதுரை, ராஜரத்தினத்துடன் அடிக்கடி பேசுவதையும் நேரில் சந்திப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். “அவரு கிட்ட எப்போதும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும், அது எனக்குத் தேவை” என்று சிரிக்கிறார் ராஜதுரை.
- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர்.
தொடர்புக்கு: tnrags@gmail.com