கபிலும் ராஜரத்தினமும் சிறந்த தலைவர்கள்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 9

கபிலும் ராஜரத்தினமும் சிறந்த தலைவர்கள்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 9
Updated on: 
3 min read

வேகம், விவேகம், விடாமுயற்சி, திறமை இவையெல்லாம் கபடியில் ஜொலிக்கத் தேவையென்றாலும், தைரியம் இல்லை என்றால் இந்த வீர விளையாட்டில் எதுவும் செய்ய முடியாது. ஒரு ரைடர், ஏழு தடுப்பாட்டக்காரர்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டும். பயந்தவர்கள் கபடியைப் பார்க்கலாம்; விளையாட முடியாது. சில நேரத்தில் அருகிலிருந்து கபடியைப் பார்ப்பதற்கே மன உறுதி வேண்டும்.

அம்மாவும் மனைவியும் கபடியில் ஏற்படும் காயங்களை நினைத்துப் பயப்படாமல் இருந்ததால்தான், ராஜரத்தினம் கபடியில் புலியாகப் பாய முடிந்தது. “என்னோட ஆரம்ப குரு, துரோணாச்சாரியார் எல்லாமே அம்மாதான். அடிபட்டு வீடு திரும்பினாலும், விளையாடுன்னு சொல்வாங்க. அவங்களுக்கு விளையாட்டு மேல அவ்வளவு ஆர்வம்” என்கிறார் ராஜரத்தினம்.

திருமணத்துக்குப் பிறகு அம்மா பொன்னம்மாளின் பணியை மனைவி கிளாடிஸ் தொடர்ந்தார். “கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எல்லாமும் அவங்க அம்மாதான். அவங்களுக்கு விளையாட்டின் மீதிருந்த இன்டரெஸ்ட் என்னை ஆச்சரியப்பட வைக்கும். எனக்கு ஸ்போர்ட்ஸ் பின்னணி இருந்ததால, என்னோட மாமியார் அவருக்குக் கொடுத்த சப்போர்ட்டை ஈசியா தொடர்ந்து கொடுக்க முடிஞ்சுது” என்கிறார் கிளாடிஸ்.

புலிக்குப் பிறந்தவை பூனைகளாகுமா? ராஜரத்தினம், கிளாடிஸ் தம்பதியரின் இரண்டு மகள்களும் கபடியில் சிறந்து விளங்கினார்கள்.

<div class="paragraphs"><p>மகள்களுடன் கிளாடிஸ் - ராஜரத்தினம்</p></div>

மகள்களுடன் கிளாடிஸ் - ராஜரத்தினம்

“அவரு ஐசிஎஃப்ல் வேலை பார்க்கும் போது, ஒரு பெண்கள் அணிக்கு கோச்சாக இருந்தார். அதைப் பார்த்து, அவங்களுக்கு கபடி ஆர்வம் வந்தது. ஜீன்லயே இருக்கும் இல்லையா? ரெண்டு பேரும் ரைடர்ஸ்தான். பெரியவ நிவேதா நேஷனல் கேம்ஸ் வரைக்கும் போனா. நல்லா அலசித் தொடுவா. சின்னவ ஜீவிதா இந்திய அணிக்கே விளையாடிருக்கா. வேகமா விளையாடுவா. பீச் கபடியிலும் பேர் வாங்கினா. தன்னுடைய மகள்கள் இருவரும் கபடியைத் தேர்ந்தெடுத்ததில் அவருக்கு ரொம்ப சந்தோஷம்; எனக்கும்தான்” என்று பெருமிதத்துடன் சொன்னார் கிளாடிஸ்.

ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற கிளாடிஸ், இரு மகள்களும் படிப்பிலும் சிறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். “நிவேதாவும் ஜீவிதாவும் ப்ரில்லியன்ட் ஸ்டூடண்ட்ஸ். விளையாட்டின் மூலமே அவர்களுக்கு இங்கே வேலை கிடைச்சிருக்கும்; ஆனால் அவங்க நல்லா படிச்சு வேலை தேடிக்கிட்டாங்க. இரண்டு பேரும் அமெரிக்கால செட்டில் ஆயிட்டாங்க” என்றார் கிளாடிஸ்.

உலகமே கொண்டாடும் ராஜரத்தினம், நிவேதாவுக்கும் ஜீவிதாவுக்கும் பெரிய ஹீரோ என்பதில் ஆச்சரியமில்லை. “அவங்க அப்பா விளையாடியதைப் பார்த்திருக்காங்க. அவரோட அருமை, பெருமையெல்லாம் அவங்களுக்குத் தெரியும். இப்ப ஊருக்கு வந்தாலும், அவரோட ஸ்போர்ட்ஸ் பத்திதான் பேசிட்டு இருப்பாங்க. நாலு பேரப் புள்ளைங்களுக்கும் தாத்தா பெரிய ஸ்டார்னு தெரியும்; அவங்க எல்லாரும் டென்னிஸ், ஸ்விம்மிங் விளையாடுறாங்க. என்ன, அமெரிக்கால கபடி ஃபேமஸ் இல்லையே” என்று சிரிக்கிறார் கிளாடிஸ்.

கபடி மூலமாக கிளாடிஸுக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை கிடைத்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேசமணி போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிவிட்டு, தலைநகரில் பல்லவனிலும் வேலை செய்துவிட்டு, குழந்தைகளின் படிப்பைக் கவனிப்பதற்காக விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

கிளாடிஸ் பட்டப்படிப்பு படித்தவர் என்பதாலேயே, ராஜரத்தினம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நான்காம் நிலை வேலையை விட்டுவிட்டு, ஐசிஎஃபில் கிளார்க் கேடரில் பணியில் சேர்ந்தார்.

ராஜரத்தினம் சென்னை ஐசிஎஃப் குவார்ட்டர்ஸில் இருக்கும்போது அவரது வீடு, பல கபடி வீரர்களின் வருகையால் எப்போதும் கலகலப்பாக இருக்கும். கிளாடிஸின் கைமணமும் அவர்களைக் கட்டிப்போடும். “அண்ணி, இவ்வளவு நல்லா சமைச்சு கவனிக்கிறீங்க; ஆனா அண்ணன் அந்தச் சாப்பாட்டையெல்லாம் கிரவுண்ட்ல அடிச்சு வெளில எடுத்துடுவாருனு சொல்லிச் சிரிப்பாங்க. அப்ப அவரு அடிக்கிற அடியெல்லாம் டம்டம்முன்னு கேட்கும்” என்கிற பழைய நினைவுகளை அசைபோட்டார் கிளாடிஸ்.

<div class="paragraphs"><p>கிளாடிஸ் - ராஜரத்தினம்</p></div>

கிளாடிஸ் - ராஜரத்தினம்

ராஜரத்தினம் தன்னுடைய ஆட்டத்தின், புகழின் உச்சியில் இருக்கும் போது கிளாடிஸ் பக்கத்தில் இருந்துள்ளார். “சேலம் மாவட்டத்தில் அவருக்கு ரசிகர் மன்றங்களே இருந்தன. கிரிக்கெட்ல கபில் தேவ் எப்படி ஆல்-ரவுண்டராக, கேப்டனாகக் கலக்கினாரோ, அதே போன்று கபடியில் இவர். எல்லா நல்ல வீரர்களும், நல்ல லீடர்ஸ் ஆவதில்லை. ஆனால், கபில் சாரும் என் கணவரும் இரண்டிலும் டாப்” என்று பெருமை பொங்கச் சொன்னார் கிளாடிஸ்.

வெறும் திறமை மட்டும் ராஜரத்தினத்தைக் கபடியின் உச்சிக்கு எடுத்துச் செல்லவில்லை என்கிறார் கிளாடிஸ். “கபடிதான் அவருடைய உயிர்மூச்சு. நாளைக்கு மேட்ச் இருந்தா முத நாள் நைட் தூங்கவே மாட்டார். கொஞ்சம் தூங்கினாகூட அடி, புடின்னு கபடியைப் பத்தியே உளறுவார். இளம் வயதில் விடிகாலை நாலரை மணிக்கு எழுந்து பயிற்சிக்குச் செல்லும் பழக்கம் இன்று வரை தொடர்கிறது.”

1994 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன் பெங்களூருவில் நடந்த இந்திய அணி முகாமுக்குச் சிறப்பு அனுமதி வாங்கி, கிளாடிஸையும் அழைத்துச் சென்றார் ராஜரத்தினம். “அவங்க பக்கத்தில இருந்தா அது எனக்குப் பெரிய பலம்” என்கிறார் கபடிப் புலி.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், விளையாட்டு வர்ணனையாளர்.

தொடர்புக்கு: tnrags@gmail.com

கபிலும் ராஜரத்தினமும் சிறந்த தலைவர்கள்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 9
கபடி, காதல், கல்யாணம் | ‘டைகர்’ ராஜரத்தினம் 8

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in