

கொங்கு மண்டலத்தில் அடங்கியுள்ள ஒரு முக்கியமான மாவட்டம் நாமக்கல். அதற்கு கொல்லிமலை ஒரு பெரும்பேறு. அதன் அடிவாரத்தில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் ராசிபுரம். சங்க காலத்தில் 'ராஜாபுரி' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் ராசிபுரமாக உருமாறிய இந்நிலப்பரப்பு கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வரலாற்றுச் சிறப்பைக் கொண்டது.
சோழர்கள், விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் ஆன்மிகமும் வணிகமும் தழைத்தோங்கிய மையமாக விளங்கிய இவ்வூரில், பல நூற்றாண்டுகள் பழமையான ‘மாதொரு பாகன்’ என்று அழைக்கப்படும் கைலாசநாதர் கோயில், மன்னர்களின் கொடைச் சான்றுகளாகப் பல கல்வெட்டுகள் எனப் பல வாழும் வரலாற்றுச் சுவடுகள் இன்றும் இங்கே நிலைத்து நிற்கின்றன.
இன்று ராசிபுரம் ஒரு சட்டமன்றத் (தனி) தொகுதி. தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நகராட்சி. ராசிபுரம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது அங்கு உற்பத்தியாகும் அழகிய பட்டுச் சேலைகளும் கைத்தறி நெசவு ஆடைகளும்தான்.
ராசிபுரத்தில் எப்போதும் காதில் விழும் தறிகளின் ஓசைக்கு அப்பால், அசலான மற்றொரு வாசனை ஊர் முழுவதும் நிறைந்திருக்கிறது. அந்த வாசனையை முகர்ந்துபார்க்க விரும்பும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை அந்த ஊர் சம்பாதித்து வைத்திருக்கிறது.
ஆமாம்! ராசிபுரத்தைப் பட்டு நகரம் என்று அழைப்பதைவிட, 'ருசிபுரம்' என்று அழைப்பது சாலப் பொருந்தும். ராசிபுரம், ஊத்துக்குளி, ஒட்டன்சத்திரம் இந்த ஊர்க ளெல்லாம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப் படும் தனித்துவமான நெய் வகைக்கு மிகவும் பிரபலம்.