

பவானி என்றதும் கூடுதுறைதான் முதலில் நினைவுக்கு வரும். காவிரியும் பவானி ஆறும் சந்தித்துக்கொள்ளும் கூடுதுறையில் சங்கமேஸ்வரராகக் கோயில் கொண்டுள்ள சிவாலயம் புகழ்பெற்ற ஒன்று. ஆனால், பவானிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.
ஒரு திருமணத்துக்கு மணமக்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பவானி ஜமக் காளம். ‘சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுவிடுமா?’ என்கிறமரபுத் தொடர் ஏற்புடையது. அதுபோல், பவானி ஜமக்காளத்தைச் சீப்பின் இடத்தில் வைக்க முடியாது.
அந்த அளவுக்குத் திருமணம், அனைத்துவிதமான நிகழ்வுகளிலும் ஜமக்காளத்தை நேர்மறை எண்ணத்தை உருவாக்கும் அடையாளமாகவும் விருந்தோம்பலின் சின்னமாகவும் கடந்த 100 ஆண்டுகளைக் கடந்து தமிழர்கள் பயன் படுத்தி வருகின்றனர்.
ஜமக்காளத்தின் தனித்துவம் என்பது அதன் அடர் வண்ண அடையாளம். சிவப்பு - பச்சை - மஞ்சள் - நீலம் ஆகிய அடர்த்தியான வண்ணங்களில் நீள் சதுர வானவில்போல் பருத்தி நூல் கொண்டு ஈரோட்டிலிருந்து 25 நிமிடப் பயணத்தில் வந்துவிடும் பவானியில் கைத்தறி நெசவாளர் களின் கைவண்ணத்தில் உருவாகிறது.
ஒரு காலத்தில் திருமணம் உள்பட சுப நிகழ்வு எதுவாக இருந்தாலும் அங்கே கூடும் உறவினர்களும் நண்பர்களும் அமர்வதற்கு, பவானி ஜமக்காளங்கள் தான் வரிசையாக விரிக்கப்படும். ஆனால், இன்று கிராமம் முதல் நகரம்வரை மகால்களில் நடைபெறும் திருமணங்களில் உறவினர்களும் நண்பர்களும் உட்கார பிளாஸ்டிக் இருக்கைகள் போடப்படுகின்றன.