

கிணற்றில் தண்ணீர் எடுத்தவர்களுக்குப் பாதாளக் கரண்டி என்றால் என்ன என்று தெரிந்திருக்கலாம். வீடுகளில் கிணறு வைத்திருப்பவர்கள், கப்பிப் போட்டு அதில் வாளி, குடம் போன்றவற்றை இணைத்துத் தண்ணீர் இறைப்பார்கள். குடம் உள்ளே விழுந்துவிட்டால் யாராவது இறங்கித்தான் எடுக்க வேண்டும். அல்லது கோடைக்காலத்தில் தூர்வாருவதுவரை காத்திருக்க வேண்டும்.
வாளி என்றால் அதன் மேலிருக்கும் வளையம் எதிலாவது சிக்கினால் மேலே எடுத்துவிடலாம். அதற்குப் பயன்படுவதுதான் இந்தப் பாதாளக் கரண்டி. இது பல கொக்கிகளைக் கொண்டிருக்கும் இரும்பு வளையம். கொக்கிகள் சிறிதும் பெரிதுமாக இருக்கும். இதில் உள்ள வளையத்தில் கயிறு கட்டிக் கிணற்றுக்குள்ளே விட்டுத் துழாவினால் வாளி சிக்கும். மேலே எடுக்கலாம். குடம் போன்ற பொருட்கள் கயிற்றுடன் விழுந்தால், கயிறு சில நேரம் சிக்கும்.