சமுகப் பொறியாளர்கள் 03: செரினா ‘அலை’ ஓய்வதில்லை!

சமுகப் பொறியாளர்கள் 03: செரினா ‘அலை’ ஓய்வதில்லை!
Updated on
3 min read

கல்பாக்கம் அருகே காரத்திட்டு கிராமத்தில் இருக்கிறது ‘அலை குழந்தைகள் குடில்’. அங்கே 50க்கும் அதிகமான இருளர் பழங் குடிச் சிறார்களுக்கு மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 6 வயது முதல் 15 வயது வரையிலான சிறார்கள் அங்கே படிக்கிறார்கள். இந்தக் குடில், அங்கே வாழும் இருளர் பழங்குடி மக்களிடம் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது.

பள்ளிக் கல்வியைப் பெறுவதற்கு முன்வராத இந்தச் சமூகத்திலிருந்து முதல் தலைமுறையாக 30க்கும் அதிகமான சிறார்களைப் பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் செரினா. இவர்தான் இந்த ‘அலை குழந்தைகள் குடி’லை உருவாக்கி நடத்திவருகிறார்.

வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் சமூகமாக இங்கே இருக்கும் இருளர் குழந்தைகளுக்கு உடைகள், நோட்டுப் புத்தகங்கள் கொடுத்து, சுவையான ஊட்டச்சத்துக் கஞ்சியை வழங்கி, அன்றாடத் தூய்மை பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொடுத்து வருகிறார்.

சிறார் எழுத்தாளரான யுவராஜ், குழந்தை களுக்குப் பாடங்களைப் பயிற்றுவித்துவருகிறார். செரினாவுடன் தற்போது திவ்யா, ஹரி குமார், சங்கர் எனப் பல தன்னார்வலர்களும் கை கோத்துக்கொண்டுள்ளனர். அன்றாடப் பாடங் களுடன் பாடல், ஆடல், கதை சொல்லல் என இனிமையாக வகுப்புகளை நடத்திவருகிறார்கள்.

‘அலை குழந்தைகள் குடி’லின் முயற்சியால் பள்ளியில் சேர்ந்து படித்தும் மாலையில் தொடர்ச்சியாக நடத்தப்படும் சிறப்பு வகுப்பு களில் கற்றும் இன்று 10, 12ஆம் வகுப்புகளை நோக்கிப் பலர் முன்னேறிவந்திருக்கிறார்கள். சேலத்தைச் சேர்ந்த செரினா கல்பாக்கத்துக்கு வந்து இந்தக் குழந்தைகளின் கல்விக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார்.

“அப்பாவின் சொந்த ஊர் சேலம். நான் கல்லூரிப் படிப்பை நெருங்கியபோது அப்பாவுக்குத் தொழில் நஷ்டம். அந்த நேரத்தில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அளித்த ஸ்பான்ஸர்ஷிப் மூலம்தான் என் கல்லூரிக் கல்வியைத் தடங்கலின்றித் தொடர முடிந்தது. பட்டதாரி ஆனதும் எனது ஸ்பான்ஸருக்கு நன்றி தெரிவித்தேன்.

அப்போது அவர்கள், “நாங்கள் உனக்குச் செய்த உதவியை நீ இந்தச் சமூகத்தில் யாருக்குத் தேவை இருக்கிறது என்று நினைக்கிறாயோ அவர்களுக்குச் செய். இந்த உதவிச் சங்கிலிதான் உலகத்தை இயக்குகிறது” என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது என் மனதுக்குள் ஆழமாகப் பதிந்துபோனது.

“என் பெரியம்மா வீடு கல்பாக்கத்தில் இருப்பதால் அடிக்கடி வருவேன். 2016இல் ஒருநாள் வயலூருக்குச் சென்றுகொண்டிருந்த போது, வழியில் காரத்திட்டில் இருந்த பெட்டிக் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கினேன். அந்த ஊரில் அரசு கட்டிக்கொடுத்திருந்த தொகுப்பு வீடுகளில் 68 இருளர் குடும்பங்கள் வசித்து வருவதைத் தெரிந்துகொண்டேன்.

அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறார்களைப் பார்த்தபோது கண்கள் கலங்கிவிட்டன. ஊட்டச் சத்துக் குறைபாடு காரணமாக மெலிந்த நிலையில் குழந்தைகள் இருந்தனர். முன்பின் தெரியாத என்னை நோக்கி ஓடிவந்த சிறுவன், கண்களில் அவ்வளவு அன்பையும் ஏக்கத்தையும் தேக்கி வைத்திருந்தான்.

உடலில் துணியில்லை. புழுதி மட்டுமே அவனது ஆடையாக இருந்தது. தலைமுடி சிக்குப்பிடித்துக் கிடந்தது. அந்த ஒரு குழந்தை, அங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒட்டுமொத்தச் சமூகத்தின் நிலையையும் பிரதிபலித்தது. அவர்களின் தேவை என்ன என்பதை உணர்ந்தேன்.

செரினா
செரினா

‘குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதில் லையா?’ என்று கடைக்காரரிடம் கேட்டபோது, ‘அப்பா, அம்மா யாரும் படிச்சவங்க கிடையா தும்மா. அப்புறம் எப்படிப் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவாங்க?’ என்றார். மலை மீது வாழும் பழங்குடிச் சமூகங்களே கல்விக்காகக் கீழே இறங்கி வரத் துணிந்துவிட்ட இந்தக் காலத்தில், சமவெளியில் வாழும் இந்த மக்கள், ஏன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவில்லை என்று தெரிந்துகொள்ள விரும்பினேன்.

அங்கிருந்த மக்களிடம் பேசியபோது, அன்றாட வயிற்றுப்பாட்டுக் கான ஓட்டமே அவர்களுக்குப் பெரும் போராட்டமாக இருப்பது புரிந்தது. அந்த நிமிடமே நான் அவர்களுக் காகக் களப்பணி செய்வது என்று முடிவெடுத்து, ‘அலை குழந் தைகள் குடி’லை உருவாக்கிச் செயல்படத் தொடங்கினேன்.

முதலில் களிமண் சுவர் மீது கீற்று வேய்ந்து உருவாக்கினேன். குளியலறை, கழிவறை வசதியை ஏற்படுத்தி, சிறார்களுக்குத் தூய்மை யான பழக்க வழக்கங் களைச் சொல்லிக் கொடுத்தேன். அடுத்த சில வருடங்களில் இந்தச் சிறார்களில் பலரைச் சமூகத்தின் உயர்ந்த பதவிகளுக்குத் தயார் செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் என் குறிக்கோள்” என்கிறார்.

‘அலை குழந்தைகள் குடில்’ மழை, கடற்காற்றினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தபோது, செரினாவின் பணி குறித்துக் கேள்விப்பட்டு, நடிகர் கார்த்தி சிவகுமார் 1 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறார். “இந்தக் குடிலை ஒரு நிரந்தரக் கட்டிடமாக மாற்ற முயற்சி எடுத்துள்ள நேரத்தில் இந்த உதவி மிகப் பெரியது.

அவர் மட்டுமல்ல, நாங்கள் முன்பின் பார்த்திராத பல நல்ல உள்ளங்கள், எங்கள் பணியைப் பார்த்து மனமுவந்து உதவிகளைச் செய்கிறார்கள். முகம் தெரியாத அந்தக் கருணை மிக்க மனிதர்கள் செய்யும் உதவியால்தான், இந்தக் குழந்தைகளுக்கு நாங்கள் என்ன செய்ய நினைக்கிறோமோ அதை எங்களால் செய்ய முடிகிறது” எனும் செரினாவை இங்குள்ள பெற்றோர் முதலில் நம்பவும் இல்லை, ஒத்துழைக்கவும் இல்லை.

அந்த நேரத்தில் சந்தோஷ் என்கிற 12 வயதுச் சிறுவனுக்குப் பல் விழுந்த இடத்திலிருந்து வெளியான ரத்தம் நிற்கவேயில்லை. அவனை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, 15 நாள்கள் மருத்துவமனையில் அவனோடு தங்கியிருந்து, சிகிச்சையளித்துத் திரும்பியிருக்கிறார் செரினா. அதற்குப் பிறகு காரத்திட்டு மக்களில் ஒருவராக மாறிவிட்டார். அந்தச் சிறுவனுக்கு உரிய மருத்துவம் கிடைக்கச் செய்ததுடன் அவரைப் பத்தாம் வகுப்புத் தேர்வுக்கும் தயார் செய்துவிட்டார். செரினா என்கிற அலை ஒருபோதும் ஓய்வதில்லை!

(பொறியாளர்களைக் கண்டறிவோம்)

- jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in