கலை: ஓவியங்களில் 1330 திருக்குறள்!

கலை: ஓவியங்களில் 1330 திருக்குறள்!
Updated on
3 min read

நல்வாழ்வுக்கான அறத்தைத் திருக்குறள் மூலம் இரண்டடியில் எளிதாகச் சொல்லி விளங்க வைத்தவர் திருவள்ளுவர். ‘உலகப் பொதுமறை’ எனக் கொண்டாடப்படும் திருக்குறளுக்கு ஓவிய வடிவம் தந்திருக்கிறார் ஓவியர் செளமியா இயல். வரலாற்றில் முதல் முறையாக நாள் ஒன்றுக்கு ஒரு குறள் என மொத்தம் 1,330 குறள்களுக்கு ஓவியம் வரைந்து சாதனை படைத்திருக்கிறார்!

ஒரு நாள் ஒரு குறள்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செளமியா, சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த பத்தாண்டுகளாக ஈடுபாட்டுடன் ஓவியம் வரைந்துவரும் அவர், வெற்றிகரமாக ‘திருக்குறள்’ திட்டத்தை நிறைவு செய்திருக்கிறார். தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்ட திருக்குறள் ஓவியங்களுக்குக் கிடைத்த வரவேற்பை ஒட்டி அதைப் புத்தகமாக வெளியிடும் முயற்சியில் இருக்கிறார்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்<br />கண்ணென்ப வாழும் உயிர்க்கு
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

“சிறு வயது முதலே பார்க்கும் அனைத்தையும் பேனாவில் வரைந்து விடுவேன். முதுகலைப் படிப்பின்போது சுயமாக ஓவியம் தீட்டக் கற்றுக்கொண்டேன். ஓவியம் தொடர்பான பல பரிமாணங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. சங்க இலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்கிற ஆசையும் இருந்தது.

இரண்டும் ஒரு சேர உருவானவைதாம் திருக்குறள் ஓவியங்கள். 200க்கும் மேற்பட்ட திருக்குறள் உரைகளை அலசி, விளக்கம் புரிந்து, குறள்களுக்கான ஓவியங்களை வரையத் தொடங்கினேன். நாளொன்றுக்கு ஒரு குறள், ஒரு ஓவியம் என்பதுதான் எனது இலக்காக இருந்தது. இடைவெளி இல்லாமல் 1,330 குறள்களுக்கும் ஓவியங்கள் வரைய வேண்டும் என்கிற திட்டத்துடன் தொடங்கி, அதை முழுமையாக நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி தருகிறது” என்கிறார் செளமியா.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்<br />செய்யல மன்இவள் கண்.
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

திருக்குறளின் சிறப்பு: கிட்டத்தட்ட 900 குறள்களுக்குக் கையால் ஓவியங்கள் வரைந்திருக் கும் செளமியா, மீதமிருந்த குறள்களுக்கு டிஜிட்டலில் ஓவியங்களை வரைந்திருக்கிறார். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் புரியும் வகையில் ஓவியங்கள் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்ததாகச் சொல்லும் இவர், இது சமூக வலைதளத்தில் திருக்குறளை ஆவணப்படுத்தும் முயற்சியும்கூட என்கிறார்.

“தினம் ஒரு குறளை வாசித்துவிட்டு அந்தக் குறளுக்கான ஓவியங் களை அசைபோடத் தொடங் கிடுவேன். இந்தக் குறளுக்கு இதுதான் ஓவியம் என முடிவு செய்த பின் வரைய உட்காருவேன். ஒரு ஓவி யத்தை முழுதாக வரைந்து முடிக்க 3-4 மணி நேரம் ஆகும். பெரும்பாலான குறள்களின் கருத்துகளோடு உடன்பாடு இருந்தாலும் சில குறள்களின் கருத்துகளை என்னால் ஏற்க முடியாது.

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்<br />கட்காதல் கொண் டொழுகு வார்
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண் டொழுகு வார்

எனினும் தனிப்பட்ட கருத்தைத் திணிக்காமல், வள்ளுவரின் இடத்திலிருந்து அதை உள்வாங்கிக்கொண்டு ஓவியங்களை வரைந்திருக்கிறேன். ஒரு நாள்- ஒரு குறள் - ஒரு ஓவியம் என்பதே மிகவும் சவாலான வேலையாக இருந்தது. என் மகளும் குடும்பமும் கொடுத்த உத்வேகத்தால் செய்து முடிக்க முடிந்தது” என்கிறார் செளமியா.

சமூக வலைதளத்தில் குறள்: இன்ஸ்டகிராமில் பதிவு செய்ததன் மூலம் திறன்பேசியும் கையுமாக இருக்கும் இந்தக் காலத்து தலைமுறையினரிடம் திருக்குறள் சென்றடைந்திருக்கிறது. டிஜிட்டலிலும் சங்க இலக்கியம் பதிவு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசிய செளமியா, “பள்ளியில் பாடமாகத் திருக்குறளைப் படித்ததைத் தாண்டி வெகு சிலரே மற்ற குறள்களைத் தேடிப் படிப்பதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் <br />பெட் டாங்கு ஒழுகு பவர்
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட் டாங்கு ஒழுகு பவர்

இந்த நிலையை மாற்ற சமூக வலைதளத்தின் உதவியை நாடினேன். எந்நேரமும் திறன்பேசியோடு இருக்கும் காலம் இது என்பதால், நாளொன்றுக்கு ஒரு குறளை, விளக்கம், ஓவியத்துடன் படிப்பது எளிதாக இருக்கிறது. சாமானியருக்கும் புரியும் வகையில் இருக்கும் கலைஞரின் உரையைத்தான் எனது பக்கங்களில் பதிவு செய்திருக்கிறேன். இணையவாசிகளின் ஆர்வம் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்ததால்தான் திருக்குறள் ஓவியங்களை வரைய முடிந்தது” என்கிறார் செளமியா.

செளமியா இயல்
செளமியா இயல்

- karthiga.rajendran@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in