சாலை சாகசங்கள் - ‘பயப்படறவங்க எதுக்கு முன்னாடி உட்காரணும்?’

சாலை சாகசங்கள் - ‘பயப்படறவங்க எதுக்கு முன்னாடி உட்காரணும்?’
Updated on
2 min read

ஒருமுறை, தனது மாமியார் நதியில் விழுந்துவிட்டதாக முல்லா நஸ்ருதீனுக்குத் தகவல் வரும். அடித்துப்பிடித்து ஓடிவரும் முல்லா, நதியில் குதித்து நீரோட்டத்துக்கு எதிராக நீச்சல் அடிக்கத் தொடங்குவார். அக்கம்பக்கத்தார் என்ன ஏது என விசாரிப்பார்கள். “என் மாமியார் நாம் என்ன சொன்னாலும் அதுக்கு எதிராகத்தான் பேசுவார். நிச்சயம் நீரோட்டத்துக்கு எதிராகத்தான் போயிருப்பார்” என்பார் முல்லா.

நம் அன்றாட வாழ்க்கையில் குறிப்பாக, சாலைகளில் இப்படி ஏராளமான ‘எதிர்திசை மாமியார்’களைப் பார்த்திருப்போம். இன்றுகூட நீங்கள் அலுவலகம் வரும்போது, ஒன்வேயில் உங்களை மோத வருவதுபோல் ஐந்தாறு ‘மாமியார்’களேனும் அசுர வேகத்தில் எதிர்திசையில் கடந்துசென்றிருப்பார்கள் (மாமியார் என்பது இங்கு குறியீடுதான்).

சவடால் சாகசங்கள்: எந்த விதியையும் பின்பற்றாமல் எக்குத்தப்பாக வாகனம் ஓட்டுவதுதான் இளமையின் அடையாளம், முதிர்ச்சியின் முத்திரை என இருமுனைச் சிந்தனையுடன் இங்கு பலர் உலவுகிறார்கள். ஒன்வேயில் உங்களுக்கு எதிராக வருபவரின் முகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? சந்திரயான் சரியாகத்தான் வேலை செய்கிறதா என்கிற சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் விஞ்ஞானி போல் விஷய பாவனை காட்டுவார்.

அல்லது, ‘ரோடுன்னா இப்படித்தான் முன்னபின்ன இருக்கும். நீ திறமையான ஆளுன்னா இதையெல்லாம் சகஜமா எடுத்துக்கிட்டு சல்லுன்னு போய்க்கிட்டே இருக்கணும்’ எனக் குறிப்பால் உணர்த்தும் குருநாதர்போலத் தென்படுவார்.

திருப்பங்களில் ஒலிப்பானையோ குறிப்பானையோ (இண்டிகேட்டர்) பயன்படுத்தாமல் திடீரெனத் திரும்புவது, ஒலிப்பானை அழுத்தாமல் இடதுபுறத்திலிருந்து ஓவர்டேக் செய்து நம்மை நடுங்கவைப்பது என்று சாலையில் நம்மவர்கள் செய்யும் சவடால் சாகசங்களுக்கு எல்லையே இல்லை.

திகில் பயணம்: ஒருமுறை என் நண்பருடன் பைக்கில் உடுமலையிலிருந்து வால்பாறைக்குச் சென்றேன். அதீத உற்சாகத்தில் மனிதர் அங்கிருந்து அதிரப்பள்ளிக்கு வண்டியை அழுத்திவிட்டார். போகும் வழியெல்லாம், “இங்கேதான் சார்... போன வாரம் ஒரு ஒத்தை யானை நின்னுட்டு இருந்துச்சு”, “இப்படித்தான் சார்... திடீர்னு ஒரு காட்டுப்பன்னி குறுக்க வந்துடுச்சு” என்று கலவரமூட்டும் கானகக் கதைகளாகச் சொன்னார்.

பிரச்சினை அது மட்டுமல்ல. ஏகப்பட்ட வளைவுகள் நிறைந்த அந்தத் தடத்தில் ஓரிடத்தில்கூட நண்பர் ஒலிப்பானை அமுக்கவில்லை. பில்லியனில் அமர்ந்திருந்த எனக்கோ பீதியோ பீதி. எதிர்த்தாற்போல் வந்த வண்டிகளும் சொல்லி வைத்ததுபோல ஒலிப்பானை ஒலிக்கவிடவில்லை. ‘காஞ்சனா’ படங்களில் மூஞ்சிக்கு அருகே திடீரெனத் தோன்றி திகில் ஏற்படுத்தும் கோரமுகப் பேய்களைப் போல, சடுதியில் எதிர்பட்டு, சட்டென விலகிச் சென்றன. ஒழுங்கீனத்திலும் ஓர் ஒத்திசைவு இருந்தாக வேண்டும்.

அதில் இம்மி தவறினாலும் விளைவு, விபத்துதான். எனக்கோ, எங்கோ கண்காணாத தூரத்தில் கஜேந்திர மோட்சம் கிட்டிவிடுமோ என்கிற அச்சம் ஆட்டுவித்தது. “தயவுசெஞ்சு ஹார்ன் அடிங்க சார்” என்று எண்ணற்ற முறை எச்சரிக்க வேண்டியிருந்தது. நண்பர் அதை ரசிக்கவில்லை. “சரியான நொச்சு. ஹார்ன் அடிங்க… பிரேக் அடிங்கன்னு அலறிக்கிட்டே இருந்தார்” எனப் பின்னாளில் இன்னொரு நண்பரிடம் சொல்லிச் சங்கடப்பட்டாராம். என்னத்தச் சொல்ல!

கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் ஓவர் கான்ஃபிடன்ஸுடன் ஓவர்டேக் செய்ய முயலும் கார்க்காரர்கள் தனிக் கணக்கு. இவர்களாவது பரவாயில்லை. ஒருமுறை அரசுப் பேருந்தின் முன்வரிசை சீட்டில் அமர்ந்திருந்தேன். ஓட்டுநர் ‘ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ்’ படங்களின் பரம ரசிகர் போலும்.

பள்ளம் மேடு பார்க்காமல் படு வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தார். பேருந்தின் பேனட்டில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அருகில் ஒரு மூதாட்டி. அவர்கள் மட்டுமல்ல, சீட்டில் அமர்ந்திருந்த எனக்கே அந்த வேகம் அச்சம் தந்தது. “சார், கொஞ்சம் நிதானமாப் போகலாமே?” என்று வாய்விட்டுக் கேட்டுவிட்டேன்.

ஓட்டுநரும் நடத்துநரும் ஒருசேர என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு, பின்னர் ஒருவரை இன்னொருவர் பார்த்துப் புன்னகைத்தனர். ஓட்டுநர் சொன்னார், “பயப்படறவங்க எதுக்கு முன்னாடி உட்காரணும்?”

- chandramohan.v@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in