

நவீன அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்துக்கு இரண்டு பெரிய அடையாளங்கள் உண்டு. உலக சினிமா சந்தையைக் கட்டுப்படுத்தும் ஹாலிவுட், மாநிலத்தின் தெற்கே லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் அமைந்திருக்கிறது. மாநிலத்தின் வடக்கில் உள்ள சான்பிரான்சிஸ்கோவுக்கு அருகே அமைந்திருக்கிறது ‘சிலிக்கான் வேலி’.
உலக மென்பொருள் மற்றும் இணையச் சேவைச் சந்தைகளை ஆட்டிப் படைக்கும் ஒரு ‘குட்டி இந்தியா’. இதைத் ‘தங்கக் கூண்டு’ என்றும் வர்ணிக்கிறார்கள். அதன் பின்னணியில், இங்குள்ள பில்லியன் டாலர் கணிப்பொறி நிறுவனங்களில் இந்தியர்களின் மூளைக்கே அதிக மவுசும் பங்கும் இருக்கிறது.
இதை மெய்ப்பிக்கும் விதமாக 22 வயதே நிரம்பிய மூன்று இளைஞர்கள் இணைந்து, 2026-ன் தொடக்கத்தில் சிலிக்கான் வேலியின் வரலாற்றையே மாற்றி எழுதியிருக்கிறார்கள்.
அவர்கள் உருவாக்கிய 'மெர்கார்' (Mercor) என்கிற புத்தொழில் நிறுவனம் (ஸ்டார்ட்அப்), 1000 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83,000 கோடி) மதிப்புள்ள ஒரு மாபெரும் சேவைத் தொழில் சாம்ராஜ்யமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மிக இளம் வயதிலேயே சுயமாகச் சிந்தித்து முகநூலை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க்தான் இதுவரை அமெரிக்காவின் புத்தொழில் பில்லியனர் என்கிற மகுடத்தைச் சூடியிருந்தார்.
தற்போது ‘மெர்கார்’ நிறுவனத்தின் வளர்ச்சியை முன்வைத்து அதன் நிறுவனர்களான பிரிண்டன் ஃபுடி, சூர்யா மிதா, ஆதர்ஷ் ஹிரேமத் ஆகிய மூவரும், சிறந்த ஐடியாக்கள் வழியாக உருவாகும் புத்தொழில் நிறுவனங்களில் துணிந்து முதலீடு செய்யும் ‘ஃபெலிசிஸ்’ (Felicis Ventures) என்கிற முதலீட்டு நிறுவனத்தை 350 மில்லியன் டாலர்கள் நிதியைத் தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்து மார்க்கின் சாதனையை முறியடித்துள்ளனர்.
‘மெர்கார்’ நிறுவனத்தில் தலா 22 சதவீத மூலதனப் பங்குகளைக் கொண்டுள்ள இவர்கள், இன்று சிலிக்கான் வேலியின் புதிய வெற்றி முகங்களாகக் கொண்டாடப்படுகிறார்கள்.