

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) சமீபத்தில் ஒரு கலந்தாய்வு அறிக்கையை (Consultation Paper) வெளியிட்டுள்ளது. தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மியூச்சுவல் ஃபண்ட்களில் மூன்றாம் தரப்புப் பணம் செலுத்துதலை அனுமதிக்க பரிந்துரைக்கும் வரைவு சுற்றறிக்கை குறித்து, பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதே இந்த அறிக்கையின் நோக்கமாகும்.
கடந்த பல தசாப்தங்களாக, ஊழியர்களின் விருப்பக் கடிதத்தின் அடிப்படையில், முதலாளிகள்/நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் மாதாந்திர ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை சம்பளத்திலிருந்து பிடித்துச் செலுத்தி வந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். இந்த வசதி ஊழியர்களுக்கும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கும் மிகவும் பயனுள்ள வழிமுறை.
ஆனால் இதுவரை, எந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும் முதலீட்டாளரிடமிருந்து நேரடியாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, மேலும் அதற்கான நிதி அவரது வங்கிக் கணக்கின் மூலமாகவே செலுத்தப்பட வேண்டும். அதேபோல், முதலீட்டை திரும்பப் பெறும்போது கிடைக்கும் தொகையும், கட்டாயமாக அதே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.
இது மூன்றாம் தரப்புப் பணம் செலுத்துதலில் உள்ள அபாயங்களை குறைப்பதற்காகவும், பல்வேறு பணமோசடி தடுப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதற்காகவும் நடைமுறையில் உள்ளது.
பொதுவாக, இத்திட்டம் முதலாளிகள்/நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து, மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடுகளுக்கான தொகையை பிடித்தம் செய்து செலுத்த அனுமதிக்கிறது. இந்த முறை அடிமட்ட அளவிலும் முதலீட்டை அதிகரிக்க உதவும் வகையிலும் தற்போது உள்ள வருங்கால வைப்பு நிதி (Provident Fund) அல்லது தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) பங்களிப்புகளை போலவே செயல்படும்.
இந்த வசதி பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்களின் (AMCs) ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.