

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சில மாற்றங்களை செய்துள்ளது. முன்பு ஓய்வுக் காலம், குழந்தைகளின் கல்வி உட்பட தீர்வு சார்ந்த திட்டம் (Solution Oriented Schemes) என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த ரிடையர்மென்ட் ஃபண்ட்ஸ், சில்ட்ரென் ஃபண்ட்ஸ் போன்றவை செபியால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் நிறுத்தப்படுகின்றன.
இந்த ஃபண்ட்கள் பொதுவாக 5 வருடங்களுக்கு மேலான மூலதன திட்டமாகவும் அதனுடைய போர்ட்ஃபோலியோ அமைப்பு மற்ற ஈக்விட்டி/ஹைப்ரிட் ஃபண்ட்கள் போலவும் இருந்தன.
ஆனால் இவை குறிப்பிட்ட இலக்கை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், அதற்கான எந்த உறுதியையும் கொண்டது அல்ல என்பதால், தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு. இந்த ஃபண்ட்களின் பெயருக்கும் உண்மைத் தன்மைக்கும் வேறுபாடு இருப்பதாக செபி கருதியது.
எனவே, தற்போது 'வாழ்க்கை சுழற்சி நிதி' (லைஃப்-சைக்கிள் ஃபண்ட்) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. முக்கியமாக இது ஓர் இலக்கு அடிப்படையிலான ஃபண்ட். இவற்றில் ஒரு கால வரிசை இருக்கும்.