

இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்தும் சாத்தியமாகி வருகின்றன. பாரம்பரியமான அண்ணாச்சி கடைகளில் அன்றாடப் பொருள்களை வாங்க ஆரம்பித்த நுகர்வோர், இன்றைக்கு இருந்த இடத்தில் இருந்தே தேவையான பொருள்களை ஆர்டர் செய்கின்றனர்.
அடுத்த 10 நிமிடங்களில் வீட்டில் காலிங் பெல் சத்தம், திறந்து பார்த்தால் ஏதோவொரு `குயிக் காமர்ஸ்’ நிறுவனத்திலிருந்து ஆர்டர் செய்த பொருள்களோடு ஒருவர் நின்று கொண்டிருப்பார். அவசரமான உலகில் அன்றாடத் தேவைக்கானப் பொருள்களைக் கடைக்குச் சென்று வாங்கக்கூட நேரமில்லை.
பொருள்களை ஆர்டர் செய்த 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யும் சேவையை ஸ்விக்கி, சொமேட்டோ, இன்ஸ்டாமார்ட், ஸெப்டோ, பிக்பாஸ்கெட், பிளிங்கிட் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகின்றன.
ஆர்டர் செய்தவுடன் பொருள்களை டெலிவரி செய்வதற்கு ஏதுவாக இந்நிறுவனங்கள் `டார்க் ஸ்டோர்’ என்கிற பெயரில் பொருள்களை சேமித்து வைக்கும் கடைகளை அல்லது சேமிப்புக் கிடங்குகளை 3-5 கிமீ சுற்றளவுக்கு ஒன்று என்கிற நிலையில் தொடர்ந்து திறந்து வருகின்றன. இன்றைக்கு நாடு முழுவதும் சுமார் 5,000 டார்க் ஸ்டோர்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் எண்ணிக்கை 2024-ம் ஆண்டு நிதியாண்டு முடிவில் 1,800 தான்.
இந்தியாவில் இயங்கி வரும் டார்க் ஸ்டோர்களில் 15% டெல்லி – என்சிஆர் பிராந்தியத்திலும், 14% பெங்களூருவிலும், 11% மும்பையிலும், 8 % சென்னையிலும் இருக்கின்றன. டார்க் ஸ்டோர்களில் 68% முதல்நிலை (1st tier) நகரங்களிலும், 32% 2, 3-ம் நிலை நகரங்களிலும் இயங்கி வருகின்றன.
எப்படி செயல்படுகின்றன?
* நுகர்வோர் ஒருவர் செயலி மூலம் ஆர்டர் செய்த சில நொடிகளில் டார்க் ஸ்டோரில் இருப்பவரை அது சென்றடைந்து விடும், உடனே அவர் அதை டெலிவரி செய்வதற்கென குறிப்பிட்ட ஒரு நபருக்கு அதை ஒதுக்குவார்.
* அந்த ஸ்டோரில் பணியாற்றுபவர்களில் ஒருவர் ஆர்டரில் இருக்கும் பொருள்களை எல்லாம் 30 முதல் 120 நொடிகளில் எடுத்து, பேக்கிங் செய்வார்.
* யாருக்கு டெலிவரி செய்யும் வேலை ஒதுக்கப்பட்டதோ அவர் அந்த ஸ்டோரை அடைந்தவுடன் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதோடு பேக்கிங் செய்து வைக்கப்பட்டிருக்கும் பொருள்களை எடுத்துக் கொண்டு நுகர்வோருக்குத் தகவல் தெரிவிப்பார்
* ஆர்டர் செய்த பொருள்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் நுகர்வோரைச் சென்றடைவதற்கு இந்த டார்க் ஸ்டோர்களின் நெருக்கம் / எண்ணிக்கை முக்கியமாகும்.
* ஆர்டர் செய்தவர் 2-3 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும்பட்சத்தில் டெலிவரி செய்பவருக்குக் கிடைக்கும் நேரம் 7-8 நிமிடங்கள் ஆகும்.
* இதுவே தூரம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் ஆகும்.