Last Updated : 19 Dec, 2016 10:21 AM

 

Published : 19 Dec 2016 10:21 AM
Last Updated : 19 Dec 2016 10:21 AM

இலக்கு மாறும் கறுப்புப் பண ஒழிப்பு!

பணமதிப்பு நீக்க அறிவிப்பு வந்து 40 நாட்கள் நெருங்கி விட்டன. பிரதமர் மோடி 50 நாட்கள் மக்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று கூறினார். அதைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். ஆனால் மக்கள் ஏடிஎம் மையங்களில் நிற்பது இன்னும் குறைந்தப்பாடில்லை. மக்களிடம் சகஜமாக பணம் இன்னும் புழங்கவில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது.

இந்தத் திட்டத்தை அறிவித்ததற்கு பிரதமர் மோடி மூன்று காரணங்களை தெரிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பது, கள்ள நோட்டு புழக்கத்தை தடுப்பது, தீவிரவாத நிதியை ஒழிப்பது என்ற மூன்று காரணங்களைத் தெரிவித்தார். இந்த மூன்று காரணங்களையும் இந்த திட்டம் பூர்த்தி செய்யுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. ஆனால் இந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே மத்திய அரசு இந்த காரணங்களை தவிர்த்துவிட்டு இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிச் செல்வது என்று கூறியது. பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதற்கு இவ்வளவு பெரிய சுமை தேவையா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

ஆதார் முதல் யுபிஐ வரை

பணமில்லா பொருளாதாரத்துக்கு இப்போது தான் நாம் தயாராகிவருகிறோமா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஏழு வருடத்திற்கு முன்பே பணமில்லா பொருளாதாரத்திற்கான விதை விதைக்கப்பட்டுவிட்டது. நம்முடைய பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய நகர்வு ஆதாரில் ஆரம்பிக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2010-ம் ஆண்டு ஆதார் மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இதுவரை 108,95,44,612 ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆதார் மசோதாவை திருத்தம் செய்துவெளியிட்டது. இந்த மசோதாவின் கீழ் அனைத்து மானியங்களும் சேவைகளும் ஆதார் கார்டு வழியாக நேரடியாக வங்கி கணக்குக்கு வழங்க திட்டமிட்டு கொண்டுவரப்பட்டது. சமையல் எரிவாயு மானியம் இதன் மூலமே வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்ததாக ஜன் தன் யோஜனா திட்டம். வங்கி கணக்கு அல்லாத அனைவரையும் வங்கி அமைப்புக்குள் கொண்டு வரும் திட்டம். கிட்டத்தட்ட 25 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் இதுவரை தொடங்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் நிறைய வங்கி கணக்குகள் இயங்காமல் இருந்தாலும் இது மிகப் பெரிய முயற்சி என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்லாமல் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களும் வங்கி கணக்கு மூலமாகவே பணத்தை எடுத்து வருகின்றனர்.

யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த பண பரிவர்த்தனை முறையை மத்திய அரசு நிறுவனமான நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் பணப் பரிவர்த்தனையை செய்வது போல் உருவாக்கப்பட்டுள்ளது. யுபிஐ இண்டர்பேஸ் வடிவமைப்பு எளிதாக இல்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. ஆனால் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகர்வதில் இது மிகப் பெரிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இப்படி கடந்த ஏழு வருடங்களாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் இந்தியாவில் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நம்மை நகர்த்தி வருகின்றன. இது இயல்பான மாற்றமாகவும் இருந்து வருகிறது. இந்த மூன்று திட்டங்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் இது மக்களிடையே வெகுவாக சென்று சேர்ந்துள்ளது. ஆனால் தற்போது பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு பின் பணமில்லா பொருளாதாரத்துக்கு அனைத்து மக்களும் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஏழு வருடமாக செய்து வரும் மாற்றத்தை இரண்டு மாதங்களில் செய்ய முடியாது என்பதை அரசு விளங்கி கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பணமில்லா பொருளாதாரத்திற்கு உடனடியாக செல்வதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக இந்தியாவில் 24 கோடி பேர் மட்டுமே ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றனர். மீதம் பேரிடம் ஸ்மார்ட் போன் சென்றடையவில்லை. அதேபோல் இணையதள வசதியும் கிராமங்களை சென்றடையவில்லை. இப்படி இருக்கையில் யுபிஐ மாதிரியான பயன்பாடு எப்படி மக்களை சென்றடையும். மேலும் இந்தியாவில் வங்கிக் கிளைகள் குறைவு. 1 லட்சம் மக்கள் தொகைக்கு குறைவான வங்கிக் கிளைகளே உள்ளன. ஏடிஎம் மையங்களும் குறைவாக உள்ளன. இதனால் மக்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது கடினமாக இருந்து வருகிறது.

இதுபோன்ற உள்கட்டமைப்பு குறைபாடுகள் நிறைய உள்ளன. இவற்றை அரசு களைய வேண்டும். உதாரணமாக மைக்ரோ ஏடிஎம் மையங்களை கிராமங்கள் தோறும் அமைக்க வேண்டும். மொபைல் வங்கி கிளைகளை கிராமங்களுக்கு செல்ல வேண்டும். பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்களை வர்த்தகர்களுக்கு விலை குறைவாகவும் கட்டணம் இல்லாமலும் வழங்க வேண்டும். மேலும் செயலி போன்ற செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் அதே சமயத்தில் சாதாரண போன்களிலும் இந்தப் பயன்பாடுகளை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும்.

சைபர் பாதுகாப்பு முக்கியம்

இந்தியாவின் சைபர் பாதுகாப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. சமீபத்தில்தான் இந்திய வங்கிக் கணக்கு பற்றிய விவரங்கள் திருடப்பட்டு பல கோடிகளை மக்கள் இழந்தனர். தற்போது லெஜியான் என்ற தகவல்திருடுபவர்கள் பல்வேறு ட்விட்டர் கணக்கு விவரங்களை திருடியுள்ளனர். பணமில்லா பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மக்கள் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறி கொண்டுதான் இருக்கிறார் கள். டிஜிட்டல் யுகத்தில் பணமில்லா பொருளா தாரம் தவிர்க்க முடியாதது. மக்கள் ஏற்கெனவே பணப்புழக்கம் இல்லாமல் தவித்துவரும் சூழ்நிலையில் ஓரிரு மாதங்களில் அனைவரும் பணமில்லா பொருளாதாரத்துக்கு மாற வேண்டும் என்று நிர்பந்திப்பதால் அரசு எதையும் சாதித்துவிடமுடியாது. ஒவ்வொரு கட்டமாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே அடுத்த சில வருடங்களில் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கிய நகர்வு வெற்றிபெறும்.

devaraj.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x