Last Updated : 07 Nov, 2016 10:50 AM

 

Published : 07 Nov 2016 10:50 AM
Last Updated : 07 Nov 2016 10:50 AM

எல்லாம் எந்திர மயம்!

சுத்தமான சாலைகள், வானளாவிய கட்டிடங்கள், சீறிப் பாய்ந்து செல்லும் கார்கள், திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம். அனைத்துக்கும் முன்னுதாரணமாக விளங்கும் நாடு சிங்கப்பூர். இப்போது எந்திர மயமாக்கலிலும் பிற நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழப் போகிறது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உள்ள ரெஸ்டாரென்டுகளில் எல்லாம் எந்திர மயம். சிக்கன் ரைஸ், நூடுல்ஸ் என உங்களது வயிற்றுக்கு ருசியான உணவு தேவையெனில் கிரெடிட் கார்டை செலுத்தி உங்களுக்குத் தேவையான உணவை பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஆர்டர் செய்த உணவை எந்திரமே உங்களுக்கு அளித்துவிடும்.

ஏன் இந்த நிலை? தொழில் நுட்ப மாற்றத்துக்குத் தங்களை தகவமைத்துக் கொள்வதில் சிங்கப்பூர் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் காரணம் என்றால் அதுதான் இல்லை. அதிகரித்துவரும் ஊழியர் பற்றாக்குறை அந்த நாட்டை முற்றிலும் எந்திரமயமாக்கலுக்குத் தள்ளிவிட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கவும் தானியங்கி முறையே பின்பற்றப்படுகிறது. டாக்சிகளை தாங்களே ஓட்டிச் செல்ல வேண்டிய முறையும் அங்கு பரவலாக பின்பற்றப்படுகிறது.

டிக்கெட் விநியோகிக்கவும், டாக்சி ஓட்டவும் ஆள்கள் கிடைக்கவில்லை என்பதுதான் இவை உணர்த்தும் செய்தி.இப்போதைக்கு சிங்கப்பூர் அரசின் முன்பு உள்ள மிகப் பெரிய சவால், அங்கு அதிகரித்துவரும் முதியவர்களின் பெருக்கம்தான். இனப் பெருக்க விகிதம் குறைந்துபோனதும் இதற்கு முக்கியக் காரணம். வெளி நாடுகளிலிருந்து தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம் எனில் அதற்கும் கட்டை போட்டுள்ளது அங்கு கொண்டு வரப்பட்டுள்ள குடியேற்ற சட்டங்கள். வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்கியதன் விளைவாக எந்திரமயத்துக்கு மாற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதியத்தைக்காட்டிலும் குறைவான செலவில் எந்திரமயமாதல் சாத்தியமாகி வருவதும் இதற்கு முக்கியக்காரணமாகும்.

சிங்கப்பூர் போன்ற வளர்ந்த பொருளாதார நாடுகளின் பொருளாதாரத்தில் தொழிலாளர் மூலமான உற்பத்தி மிக முக்கியமான காரணியாகும். ஆனால் அது சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக இறங்குமுகமாகவே உள்ளது. இதனாலேயே தானியங்கி பணியாளர் முறைக்கு பெரும்பாலான துறைகள் மாறி வருகின்றன. அதில் உணவுத் துறையும் விதி விலக்கல்ல என்பதற்கான சான்றுதான் சாங்கி விமான நிலைய உணவு விடுதி.

இதேபோன்று புதிதாக அடுத்த ஆண்டு செயல்பட உள்ள புதிய விமான நிலையத்திலும் தானியங்கி உணவு விடுதியை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.சாங்கி விமான நிலைய ரெஸ்டாரெண்டில் தானியங்கி முறையை அமல்படுத்தியதால் தங்களது செலவு கணிசமாகக் குறைந்துள்ளதாக அதை நடத்தும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முறையை சிங்கப்பூர் அரசும் வரவேற்றுள்ளது. இதேபோன்ற முறையை பிற உணவு விடுதிகளில் அமல்படுத்த சிங்கப்பூர் அரசு டெண்டர் விடுத்துள்ளது.

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் மிகக் குறைந்த பங்களிப்பை அளிப்பது உணவுத் துறைதான். அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்களிப்பு வெறும் 0.8 சதவீதம்தான். ஆனால் இத்துறையில் 1.60 லட்சம் பேர் பணி புரிகின்றனர். இதில் சிங்கப்பூர் வாசிகளின் எண்ணிக்கை 4.5 சதவீதம்தான். அந்நாட்டில் மனிதவளம் பெருகியுள்ள போதிலும் உள்நாட்டு மக்களின் பங்களிப்பு வெகு குறைவே. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் மனிதவள வளர்ச்சி அதிகமாக உள்ளது. இது வெளிநாட்டு பணியாளர்களால் நிரப்பப்படுவதால் அதைக்குறைக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.

உடனடி உணவு வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிங்கப்பூர் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான உடனடி உணவு வழங்கும் இயந்திரங்களை நிறுவி, ஆள்குறைப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஜேஆர் குழும நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தானியங்கி காபி வழங்கும் இயந்திரத்தை நிறுவியது. இந்நிறுவனம் குடியிருப்புகள் அருகில் உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் இயந்திரத்தையும் நிறுவியுள்ளது. இதனால் ஊழியர்களின் தேவை 20 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளதாக ஜேஆர் குழுமம் தெரிவித்துள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் இதேபோன்ற உணவு பொட்டலம் வழங்கும் இயந்திரங்களை பல பகுதிகளில் நிறுவத் திட்டமிட்டுள்ளது.

இத்தகைய இயந்திரமயமாக்கலால் வேலை வாய்ப்பு குறையும் என்பதை சிங்கப்பூர் அரசு உணர்ந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை விகிதம் உலகிலேயே மிகக் குறைந்த அளவான 2.1 சதவீதமாக சிங்கப்பூரில் உள்ளது. 2009-ம் ஆண்டில் சர்வதேச அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது வேலை வாய்ப்பின்மை சிங்கப்பூரில் குறைந்தது. தற்போது அதே அளவுக்குக் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது வளர்ச்சி 1 சதவீதம் முதல் 2 சதவீத அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை அடுத்த ஆண்டு சற்று உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுகளின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் மிகவும் சுத்தமாக தயாரித்து தானியங்கி முறையில் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். உணவு விடுதிகளில் பொதுவாக ஒவ்வொன்றிலும் அதிகபட்சம் 9 பணியாளர்கள் தேவைப்படுவர். இதே எண்ணிக்கையில் காசாள ரும் தேவை. ஆனால் தானியங்கி முறை வந்தபிறகு காசாளருக்கு தேவையில்லாமல் போய்விட்டது. ஆள்குறைப்பின் முதல் களபலி காசாளர்தான்.

பரவலாக வாய்ப்பு கிடைக்கும் துறைகளிலெல்லாம் தானியங்கி முறையை சிங்கப்பூர் அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

என்ன, இனி சிங்கப்பூர் உணவு விடுதிகளுக்குச் செல்வோர் கொஞ்சம் வெங்காய ரைத்தா தேவை என்றோ, சில்லி சாஸ் தேவையென்றோ கேட்டுப் பெறுவதற்கு சர்வர் இருக்கமாட்டார். எந்திரம் தரும் அளவான உணவை சாப்பிட்டுவிட்டு வெளியேற வேண்டியதுதான். எதெற்கெடுத்தாலும் சிங்கப்பூரை உதாரணமாகக் கொள்ளும் நாம், அதிக மனிதவளம் மிக்க இந்தியாவில் இம்முறையைக் கைக்கொண்டால் இங்குள்ள உணவு விடுதிகளிலும் ரோபோக்களின் சேவையைப் பெறலாம்.

ரோபோ வரவால் வேலைவாய்ப்பு பறிபோகுமா?

கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில் வேலை வாய்ப்பு பறிபோகும் என்ற கூக்குரல் எழுந்தது. ஆனால் இன்று மனிதருக்கு சுவாசம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு கம்ப்யூட்டர் முக்கியமான அங்கமாகிவிட்டது.

இப்போது ரோபோக்களின் பெருக்கம் வேலை வாய்ப்பைக் குறைக்கும் என்ற அச்சம் பெரும்பாலானோரிடம் தொற்றிக் கொண்டுள்ளது. இப்போது தொழில்துறையில் பெருமளவில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவத்துறையிலும் ரோபோ டாக்டர்கள் வந்துவிட்டனர். காட்ராக்ட் எனப்படும் கண் புரை அறுவை சிகிச்சையில் ரோபோக்களின் பங்கு அபரிமிதமாக உள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் ரோபோதான் பிரதான நாயகன். ஆஸ்திரேலியாவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ரோபோக்களின் புழக்கம் அதிகம். சிங்கப்பூரில் இப்போது உணவு வழங்கும் பிரிவில் தானியங்கி முறை கொண்டு வரப்பட்டுவிட்டது.

ரோபோ, செயற்கை நுண்ணறிவு மனிதன் ஆகியவற்றை மனிதர்கள்தான் உருவாக்குகின்றனர். இவை அனைத்தும் மனிதர்கள் ஆணையிடும் வேலையை மட்டுமே நிறைவேற்றும். ஆனால் அடுத்த கட்டத்துக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை மனிதர்களால்தான் தீர்மானிக்க இயலும். இதை உணர்ந்தால் வேலை வாய்ப்பு குறையும் என்ற கூக்குரல் அர்த்தமற்றதாகிவிடும்.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x