Last Updated : 21 Dec, 2015 10:02 AM

 

Published : 21 Dec 2015 10:02 AM
Last Updated : 21 Dec 2015 10:02 AM

விமான பயணம் தொட்டுவிடும் தூரம்தான்!

விமானத்தில் ஒரு தடவையாவது பயணிக்க வேண்டும் என்பது பலருக்கு கனவாக உள்ளது. ஆனால் மலைக்க வைக்கும் விமான கட்டணம் அதற்கு இடம் கொடுப்பதில்லை. உயர் மற்றும் மத்திய தர வர்க்கத்தினர் மட்டும் பயணம் செய்யும் வகையிலேயே விமான போக்குவரத்து சேவை இருந்து வந்தது. ஆனால் தற்போது விமான நிறுவனங்கள் பல சலுகை திட்டங்களை அறிவித்து வருவது எல்லோர் மனதிலும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிடுகிறது. ஆனால் இது சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கிறதா என்பதை பார்ப்போம்.

அசரவைக்கும் ஆபர்கள்

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ், விஸ்தாரா, கோ ஏர், ஏர் ஆசியா, ஏர் இந்தியா, ஏர் கோஸ்டா, ஏர் பேகஸாஷ் என இந்தியாவில் மொத்தம் ஒன்பது விமான நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சில நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் இயங்குகின்றன.

பெரும்பாலான நிறுவனங்கள் நஷ்டத்தையே சந்திக்கின்றன. 2013-14 ஆம் ஆண்டில் விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் 170 கோடி டாலர்.

விமான நிறுவனங்கள் அவ்வப்போது சில சலுகைகளை அறிவித்து வந்தாலும் கடந்த வருடம் மிகப் பெரிய சலுகை கட்ட ணத்தை அறிவித்தது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்தான்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தன்னுடைய போட்டி நிறுவனங்களை சமாளிக்கவும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செயலியை பிரபலப் படுத்தவும் 1 ரூபாய்க்கு இந்தியா முழுவதும் பயணிக்கலாம் என்று அறிவித்தது. வழக்கமான விமான பயணிகள் மட்டுமல்லாது புதிய சாதா ரண பயணிகளையும் ஸ்பைஸ்ஜெட் ஈர்த்தது.

ஏர் டெக்கான் நிறுவனம்தான் 500 டிக்கெட் களை 1 ரூபாய்க்கு பயணிக்கலாம் என்று சலுகையை தொடங்கி வைத்தது. பின்னர் ஏர் டெக்கான் நிறுவனத்தை கிங்பிஷர் நிறுவனம் வாங்கியது. கிங்பிஷர் நிறுவனம் கடன் பிரச்சினையின் காரணமாக சில வருடங்களாக இயங்கவில்லை.

அதற்கு பிறகு ஏர் இந்தியா, இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆபர்களை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. மகளிர் தினத்தில் பெண்களுக்கு சலுகை, சிறு குறு முதலீட்டாளர்களுக்கு சலுகை, ஹாப்பி டியூஸ்டே, கிறிஸ்துமஸ் ஸ்பெஷல், என சலுகைகள் பெருகிக் கொண்டே இருக்கிறது. பொதுவாக விழாக்காலங்களில்தான் விமான நிறுவனங்கள் அதிகமான சலுகைகளை வழங்குகிறார்கள்.

சலுகை என்றாலே அதை மேலோட்டமாக பார்த்து பழகி விட்டோம். இது போன்ற விமான நிறுவனங்கள் முதலில் பொதுமக்களை ஈர்க்க சலுகைகளை வழங்கும் போது நிறைய மறைமுக சிக்கல்கள் இருக்கின்றன. சலுகை கட்டணம்தான் என்று உள்ளே முன்பதிவு செய்யப் போனால் சீட்டை தேர்வு செய்துக் கொள்ள கட்டணம், பிறந்த குழந்தையாக இருந்தாலும் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம், வரி எல்லாம் சேர்த்து அதுவே மிகப்பெரிய தொகை வந்துவிடுகிறது என்று சில பேர் கூறுகின்றனர்.

திட்டமிடுதல்

விமான நிறுவனங்கள் அளிக்கும் சலுகை கட்டணங்களில் பெரும்பாலும் அவ்வப்போது பயணிக்க முடியாது. அறிவித்த காலத்திலிருந்து 2 மாதங்கள் அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகே பயணிக்க கூடியதாக இருக்கிறது. இது தொழிலதிபர்கள், பயணத் திட்டத்தை முன்கூட்டியே திட்டமிடுபவர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்து விடுகிறது. ஆனால் சாதாரண மக்கள் பயணத்திட்டங்களை முன்கூட் டியே திட்டமிடுவதில்லை. அவ்வப்போது பயணத்திட்டத்தை மேற்கொள்வதால் இந்த சலுகைகளை பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது. ஆனால் பயணத்திட்டத்தை முன் கூட்டியே திட்டமிட்டவர்களுக்கு இந்தச்சலுகை கள் வரப்பிரசாதம் தான்.

வரிகள் அதிகம்

சாதாரணமாக விமான பயணக் கட்டணத்தில் அடிப் படைக் கட்டணம், எரிபொருள் கட்டணம், பயன்பாட் டாளர் மேம்பாட்டு கட்டணம், பயணி சேவை கட்டணம், அரசாங்க சேவை வரி கட்டணம் என உள்ளடக்கியதுதான் மொத்த விமான கட்டணமும். விமான நிறுவனங்கள் பெரும்பாலும் அடிப்படைக் கட்டணத்திற்கு மட்டுமே சலுகை வழங்குகிறார்கள். அடிப்படைக் கட்டணம் நீங்கலாக மற்ற வரிகளே அதிகமாக இருப்பதால் பயணிக்க முடிவதில்லை என்கின்றனர். ஆனால் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ஒரு முறையாவது விமானத்தில் பறந்து விட வேண்டும் என்று முன்பதிவு செய்து நிறைய பேர் பறக்கிறார்கள்.

முந்துபவருக்கே முன்னுரிமை

விமான நிறுவனங்கள் அளிக்கும் இது போன்ற சலுகையில் இன்னொரு மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பது அறிவித்த நாளிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று விடுவது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சலுகை விலையில் 499 ரூபாய்க்கு டிக்கெட் அறிவித்த போது ஒரே நாளில் 1 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. சில நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இந்த சலுகைகளை வழங்கு கிறது அதனால் குறிபிட்ட நேரத்தில் டிக்கெட்டுகளை பெற முடியாத சூழல் ஏற்படுகிறது.

பொதுவாக விமான நிறுவனங் கள் சலுகை கட்டணங்களை அறிவிக்கும் போது ஒரு வழிப் பயணத்திற்கு மட்டுமே சலுகை வழங்கிறது. சரி நமக்கு நல்ல ஆபர்தான் என்று முன்பதிவு செய்ய நினைத்தால் அங்கேதான் நமக்கு மிகப்பெரிய திருப்பம் காத்துக் கொண்டிருக்கிறது. சலுகை கட்டணங்களை அறிவிக்கும் போது சில நிறுவனங்கள் இரு வழிப் பயணம் செய்தால்தான் இந்தச் சலுகை கட்டணம் பொருந்தும் என்று அறிவித்து விடுகின்றன. அதிலும் செல்வதற்குரிய கட்டணத்தை சலுகை கட்டணமாகவும் திரும்பி வருவதற்குரிய கட்டணத்தை வழக்கமாக என்ன கட்டணம் உள்ளதோ அதை வசூலித்துவிடுகிறார்கள். இந்த பிரச்சினையின் காரணமாக சலுகைகளை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி விடுகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட சூழ்நிலையில் எதுவுமே சாத்தியம்தான். இது போன்ற சலுகை கட்டணங்களை மொபைல் செயலியிலேயே முன்பதிவு செய்ய முடியும் என்று நிறுவனங்கள் அறிவிக்கின்றன. ஸ்மார்ட் போன்கள் பெருகி விட்ட காலத்தில் செயலி மூலம் அனைத்து மக்களாலும் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்பது சாதகமான விஷயமே.

மொத்தத்தில் விமானத்தில் பயணிக்கும் ஆசையும் முறையான பயணத் திட்டமிடுதலும் இருந்தாலே இது போன்ற சலுகை கட்ட ணங்களை நடுத்தர வர்க்கதினரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சலுகை என்றாலே அதை மேலோட்டமாக பார்த்து பழகி விட்டோம். இது போன்ற விமான நிறுவனங்கள் முதலில் பொதுமக்களை ஈர்க்க சலுகைகளை வழங்கும் போது நிறைய மறைமுக சிக்கல்கள் இருக்கின்றன.

devaraj.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x