Published : 30 Nov 2020 12:32 PM
Last Updated : 30 Nov 2020 12:32 PM

மீண்டெழுகிறது இந்தியாவின் பொருளாதாரம்

karthikeyan.auditor@gmail.com

உலக நாடுகள் தற்போது கரோனா வைரசின் இரண்டாவது அலையில் தத்தளிக்கின்றன. நமது தலைநகர் புதுடில்லியிலும்கூட அதன் தாக்கம் தொடங்கிவிட்டது. இந்தியா போன்று பல்வேறு கலாச்சாரம், பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில், கரோனா போன்ற பேரழிவு நோய்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்று. பொருளாதாரத்தையும் பாதிக்காமல், மக்கள் உயிரையும் காப்பாற்ற வேண்டியது சாதாரண காரியமல்ல.

இந்தியாவில் ஊரடங்கு தொடங்கி, கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிவிட்டது. தற்போது பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, 90 சதவீதம் தொழில், வர்த்தகத்துறை இயங்க தொடங்கிவிட்டன. உலகப் பொருளாதாரத்தில் கவனிக்கத்தக்க இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம், கரோனா பாதிப்பு காரணமாக, ‘யு-டர்ன்’ அடித்து தற்போது அதன் ஜி.டி.பி. மைனசில் இருக்கிறது.

இருந்தபோதிலும், இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீள்வதற்கான பிரகாசமான அறிகுறிகள் தென்படுகின்றன. கரோனா ஒழிப்பில், உயிரை பணயம் வைத்து, முதல் நிலை வீரர்களாக, மருத்துவர்கள் பணியாற்றுவதுபோல, தொழில் கடன், உற்பத்தி இழப்பு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற வற்றுக்கு மத்தியிலும், மனதை திடப்படுத்திக்கொண்டு, நமது தொழிலதிபர்கள் , வர்த்தகர்கள் புது உத்வேகத்துடன் பல மடங்கு உழைத்து, பொருளாதாரத்தை காப்பாற்றி இருக்கிறார்கள்.

தண்ணீரில் ஒரு பந்தை அழுத்தினால், அது எவ்வாறு வேகமாக மேலெழும்புமோ அதுபோன்று, ஊரடங்கிற்கு பிறகு பல தொழில்துறைகள் விஸ்வரூபமாக மேலெழுந்துள்ளன. தொழிலுக்காக வாங்கிய கடன், எதிர்காலம் குறித்த அச்சமும்கூட தொழில்துறை மீண்டும் எழுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எப்போதும் அச்சம்தான் புதிய அத்தியாத்தை தொடங்கி வைக்கும் போலும்.

ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய ஜிஎஸ்டி வசூல் நாடு முழுவதும் சரக்­குகள் கொண்டு செல்வதற்கு ‘இ – வே’ பில் அவசியம். ‘இ –வே’ பில் நடை­முறைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. மிக அதி­க­பட்­ச­மாக, கடந்த அக்­டோ­ப­ர் மாதத்தில்­தான், 6 கோடியே 41 லட்­சம் ‘இ-வே’ பில்­கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அதேபோல, அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூபாய் ஒரு லட்சம் கோடியை கடந்திருக்கிறது.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 35.37 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடு வந்திருக்கிறது. இது 13 சதவீத வளர்ச்சி ஆகும். அன்னிய செலாவணி கையிருப்பு 560 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. வங்கிக் கடன்கள் 5.1 சதவீதம் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அக்டோபர் மாதத்தின் மின் நுகர்வு 12 சதவீதம் அதிகரித்திருக்கிறது. உற்பத்தி அலகு நிர்ணயிக்கும், ‘‘பர்ச்சேஸ் மேனேஜர் இன்டக்ஸ்’’ 59 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2010ம் ஆண்டுக்குப்பிறகு தற்போது தான் இந்த அளவு அதிகரித்திருக்கிறது. இந்தக்காரணிகள் எல்லாம் உற்பத்தி துறை மீண்டும் இயல்பு நிலை நோக்கி திரும்புவதையே உணர்த்துகிறது.

இந்த உயர்வு தொடருமா?

அடுத்தடுத்து வந்த பண்டிகை நாட்களால் நமது உள்நாட்டு நுகர்வு அதிகரித்திருக்கிறது. மாருதி, ஹூண்டாய் போன்றஆட்டோமொபைல் துறைகளில்கூட விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால், பொழுதுபோக்கு, திரைத்துறை, சுற்றுலா, ஓட்டல்கள், ரிசார்ட்கள் போன்ற துறைகள் இன்னமும் முடங்கித்தான் கிடக்கின்றன.

அக்டோபர் மாதத்தில் பணவீக்கமும் 7% ஆக உள்ளது. நடுத்தர மக்கள், அதற்கும் கீழே உள்ளவர்களில் பெரும்பாலானோர், கரோனா காரணமாக, வேலையை இழந்துள்ளனர். புதிய வேலைவாய்ப்பும் உருவாகவில்லை. சிறு நிறுவனத்தின் முதலாளிகளாக இருந்த பலர், தொழிலை மூடிவிட்டு வேலைக்குச் செல்லும் தொழிலாளி ஆகிவிட்டார்கள். இப்படிஒருபுறம் நுகர்வு அதிகரித்து, வாங்கும் சக்தியும் பழைய நிலைக்கு திரும்பி, உற்பத்தி துறை இயல்பு நிலைக்கு திரும்பினாலும்கூட, அது ஒட்டு மொத்த வளர்ச்சியாக அமையவில்லை.

நடப்பு நிதி ஆண்டில் முதல் காலாண்டில், மைனஸ் 23.9 சதவீதம் ஆக இருந்த இந்தியாவின் ஜி.டி.பி, இரண்டாம் காலாண்டில், மைனஸ் -7.5 சதவீதம் ஆனது. மூன்றாம் காலாண்டின் நிலவரம் எப்படியோ, ஆனால் நான்காவது காலாண்டில் ஜி.டி.பி. நிச்சயம் உயரும் என நம்பலாம். அதற்குஅச்சாணியாக, சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூன்றாவது பகுதியை அறிவித்து, தொழில்துறை மீண்டெழுவதற்கு சில சலுகைகளும் அறிவித்தார்.

வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு ஊக்கமளிக்க, சுயசார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இபிஎஃப் சேமிப்புக்கு புதிய பணியாளர் செலுத்தும் 12 சதவீத சந்தா மற்றும் அவருக்கு வேலை வழங்கிய நிறுவனம் செலுத்தும் 12 சதவீத பங்குத்தொகையை சேர்த்து, 24 சதவீத தொகையை 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு செலுத்தும். இபிஎஃப் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கம்பெனிகளில், அக்டோபர் முதல் தேதிக்குப் பின்னர், ரூ. 15 ஆயிரத்துக்கு குறைவான மாதச் சம்பளத்தில் வேலைக்கு சேரும் புதிய பணியாளர்கள் மற்றும் மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் வேலை இழந்து மீண்டும் வேலையில் சேரும் இபிஎஃப் சந்தாதாரர் பணியாளர்கள் பலனடைவார்கள்.

பிணையில்லாத முழுவதும் உறுதியளிக்கப்பட்ட கடன்களுக்கான ‘அவசரகால கடன்வசதி உத்தரவாத திட்டம்’ 2021 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதனால், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வணிக நோக்கத்திற்காக கடன்பெறும் தனிநபர்கள், முத்ரா திட்ட பயனாளிகள் ஆகியோர் பலனடைவார்கள்.
ஜவுளி, மருந்து, டெலிகாம், வாகனங்கள், உணவுப்பொருள் உட்பட 10 தயாரிப்பு தொழில்களுக்கு, உற்பத்தி அடிப்படையில், ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.1.46 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்கள் கிடைக்க, உர மானியமாக ரூ.65 ஆயிரம் கோடி வழங்கப்படும். ரயில்வே,மின் உற்பத்தி மற்றும் வினியோகம், சாலைப் போக்குவரத்து, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு, சர்க்கரை தயாரிப்பு ஆகியவற்றுக்கு கூடுதல் முதலீடாக ரூ.10 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறாக, மூன்று சுயசார்பு இந்தியா திட்டங்களுக்கும் மொத்தம் ரூ.30 லட்சம் கோடிக்கு நிதியுதவி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது நாட்டின் மொத்த உற்பத்தியில் 15 சதவீதம் ஆகும்.

கரோனாவிற்கான தடுப்பூசி, விரைவாக உலகம் முழுவதும் சென்றுசேரும் வரையில் மாறிமாறி பல நோய் தொற்று அலைகளை மக்கள் சந்தித்தாக வேண்டும். அந்நிய படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகளால் செல்வங்கள் பெரும்பகுதியை இழந்த பிறகும், பொருளாதார பலத்துடன், சர்வதேச சமூகத்தின் முன் பாரதம் எழுந்து நின்றிருக்கிறது. இந்தியர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள, ‘‘எழு, விழி, இலக்கை அடையும் வரை நில்லாமல் செல்…’’ என்ற தாரக மந்திரம் நம்மை வீழ விடாது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x