Published : 29 Jun 2015 10:34 AM
Last Updated : 29 Jun 2015 10:34 AM

முதல் செலவு: முதலீடு வேறு; காப்பீடு வேறு!

உங்களில் பலர் திருவிளை யாடல் படத்தில் வரும் தருமியும் சிவபெரு மானும் உரையாடும் கேள்வி-பதில் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். புலமையை சோதிப்பதற்காக, பிரிக்க முடியாதது என்ன, பிரியக் கூடாதது என்ன, சேர்ந்தே இருப்பது என்ன, சேராதிருப்பது என்ன என்று கேள்விக் கணைகளைத் தருமி தொடுக்கும் பிரசித்தி பெற்ற காட்சி. இன்றளவும் சலிக்காமல் பார்க்கலாம்.

இதற்கும் நிதி நிர்வாகத்திற்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கட்டுரையில் அதை நினைவு கூர்வதற்கு என்ன காரணம்?

சென்ற ஒரு சில வாரங்களாக முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படித் திட்டமிட வேண்டும், எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதையெல்லாம் பார்த்தோம். இன்றைய பத்தியில் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்ற ரீதியில் சில விஷயங்களைப் பார்ப்போம்.

புரிதல் அவசியம்

இதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்த போது எனக்கு மேற்குறிப்பிட்ட உரையாடல் காட்சி நினைவுக்கு வந்தது. இன்றைய அளவில், எந்த ஒரு நல்ல நிதி ஆலோசகரிடமும் சென்று, ‘சேர்க்கக் கூடாதது என்னவோ?’ என்று கேட்டீர் களானால், அவர் ‘முதலீடும் காப்பீடும்’ என்று பதில் சொல்வார்.

தருமி காலத்தில் இந்தப் பிரச்சினை யெல்லாம் இல்லை என்பதால், அவரும் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை, பரமசிவனும் பதில் சொல்லவில்லை. ஆனால், நமக்கு இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது முக்கியம். அடிப்படையில் காப்பீடு என்பது நிகழக்கூடிய ஒரு இழப்பை ஈடுகட்ட நாம் எடுத்துக் கொள்ளும் தற்காப்பு முயற்சி. வள்ளுவர் எச்சரித்தது போல் ‘வரு முன்னர் காவாதான் வாழ்க்கை’ என்று வாழாமல் பாதுகாப்பாக வாழ்வதற் காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கருவி.

துரதிர்ஷ்டமான போக்கு

ஆனால், காலப்போக்கில், இந்தக் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீட்டு அம்சங்கள் மெல்ல மெல்ல நுழையத் தொடங்கி விட்டன. கூடாரத்துக்குள் புகுந்த ஒட்டகத்தின் கதையாக, இன்று காப்பீடு என்பதை விட, முதலீடு ரீதியாகவே இந்தத் திட்டங்கள் பார்க்கப்படுகின்றன, விற்கப்படு கின்றன, வாங்கப்படுகின்றன. இது ஒரு துரதிர்ஷ்டவசமான போக்கு. இது பல விதங்களில் ஒரு முதலீட்டாளருக்கு பங்கம் விளைவிப்பது.

முதலில், இத்தகைய முதலீடும் காப்பீடும் கலந்த சாதனங்கள் நீண்ட கால திட்டங்களாக இருந்தாலும், மிகக் குறைவான வட்டி அல்லது லாபத்தையே ஒரு முதலீட்டாளருக்குத் தருகின்றன.

உத்திரவாதமான வட்டி, போனஸ் என்று எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தாலும், முதலீட்டு லாபம் என்ற ரீதியில் 5-6% மட்டுமே தரும் சாதனங்களாக இவை இருந்து வருகின்றன.

எந்த திட்டம் எவ்வளவு தரும், நம் கையில் இருக்கும் முதலீட்டின் தற்போதைய மதிப்பு என்ன போன்ற விஷயங்களில் வெளிப்படைத் தன்மையும் (transparency) இல்லாமல் இருக்கின்றன.

பூட்டி வைக்கப்படும் முதலீடு!

இரண்டாவது, இவை பல வருடங்களுக்குப் ‘பூட்டி’ வைக்கப்பட்ட முதலீடுகளாக இருக்கின்றன. அதாவது, நீங்கள் விரும்பினால், உங்களுக்குத் தேவை என்றால், முதல் சில வருடங்களுக்கு மிக அதிகமான கழித்தல்களுக்குப் பிறகே உங்களுக்கு ஒரு தொகை வந்து சேரும்.

ஏனிந்த திட்டங்கள் இப்படி இருக்கின்றன - குறைந்த வட்டி, நீண்ட காலக் கட்டுப்பாடுகள், வெளிப் படையற்ற தன்மை என. இதற்குக் காரணம், இந்தத் திட்டங்களில் இருக்கும் கட்டணங்கள் மிக அதிகம். இந்தத் திட்டங்களை நுகர்வோர் களுக்குக் கொண்டு செல்லும் ஏஜெண் டுகளுக்குச் செல்லும் கமிஷன் தொகை இதில் கணிசமானது.

கடைசியாகச் சொன்ன இந்தக் காரணத்தினாலேயே இந்தத் திட்டங் கள் சந்தையில் அதிகம் விற்கப் படுகின்றன. அதுவும் மிகச் சாதுர் யமாக விற்கப்படுகின்றன. இதில் ஏன் லாபம் குறைவாக இருக்கிறது என்று கேட்டால், இதில் காப்பீடும் இருக்கிறதே என்று பதில் வரும்; இதில் காப்பீட்டுத் தொகை குறைவாக இருக்கிறதே என்று கேட்டால், இதில் போட்ட பணம் முதலீடாகிறதே என்று பதில் வரும்.

`இரண்டும் கெட்டான்’

ஆக மொத்தம், இத்தகைய திட்டங் கள் நல்ல காப்பீட்டுத் திட்டங்களும் இல்லை; நல்ல முதலீட்டுத் திட்டங்களும் இல்லை. இரண்டும்கெட்டான் என்ற அடைமொழிக்கு ஏற்ற திட்டங்கள் இவை.

எனது அனுபவத்தில், இது போன்ற திட்டங்களை வாங்கி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருப்பவர்களே மிக அதிகம். அது மட்டுமல்ல.

இவர் களில் பலர் ஏஜெண்டுகளாக இருக்கும் தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் ரொம்ப வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள் என்ற காரணத்திற்காகவே இத்தகைய முதலீடுகளைச் செய்திருக்கிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்கது. இதற்கு பதிலாக, அத்தகையவர்களுக்கு கொஞ்சம் ரொக்கமாக ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு நிம்மதியாக இருக்கலாம்.

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், அப்படிச் செய்யும் பட்சத்தில் பணம் போனாலும், உங்கள் நிதி நிர்வாகத் திட்டத்தில் குளறுபடி உண்டாகாது. உங்கள் திட்டங்கள் சீர்மையாகவும், தெளிவாகவும் இருக்கும். இங்கே கொஞ்சம் முதலீடு அதில் கொஞ்சம் காப்பீடு என்று சிதறிக் கிடக்காது. அந்த மட்டிலாவது உங்களுக்கு நல்லது.

காப்பீடு அவசியமே

ஆனாலும் காப்பீடு என்பது மிகவும் அவசியம். அப்படியென்றால் காப்பீட்டிற்கு என்ன செய்வது? எளிமை யாகச் சொல்ல வேண்டுமென்றால், எந்த ஒரு முதலீட்டுச் சாதனமும் கலக்காத வெறும் காப்பீடு மட்டுமுள்ள ‘டேர்ம் ப்ளான்' எனப்படும் திட்டங்களையே வாங்க வேண்டும்.

இதில் குறைந்த பணத்திற்கு அதிக காப்பீட்டுத் தொகை கிடைக்கும். உங்கள் குடும்பத்திற்குத் தேவையான பாதுகாப்பு கிடைக்கும். ஆனால், நீங்கள் கொடுக்கும் பணம் ஒரு முதலீடு போல உங்களுக்குத் திரும்பி வராது.

அதில் விசனப்படுவதற்கு எதுவுமில்லை. இன்று நாம் மருத்துவம், வாகனம் போன்ற விஷயங்களுக்கும் காப்பீடு எடுக்கிறோம். அதற்குக் கொடுக்கும் பணம் நமக்குத் திரும்பவா வருகிறது? ஆயுள் காப்பீட்டுக்கு கட்டும் பணம் மட்டும் திரும்ப வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏன்? அது ஒரு வெறும் கற்பிக்கப்பட்ட எதிர்பார்ப்பு மட்டுமே. அதைக் கடந்து வந்தால் தான் உங்களுக்கு நல்லது.

டேர்ம் திட்டம் ஏற்றது

ஆகையால், காப்பீடு என்று வரும் போது, எப்பொழுதும் டேர்ம் திட்டங்களை மட்டுமே தேர்ந்தெடுங்கள். யாராவது உங்களிடம் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை விற்க முனைந்தால், அவரிடம் போட்ட பணம் திரும்பி வருமா என்று கேளுங்கள். கட்டாயம் வரும் என்று சொன்னால், கட்டாயம் வேண்டாம் என்று சொல்லி விடுங்கள். ஏனெனில், கலக்க கூடாதவை எவை என்று கேட்டல், முதலீடும், காப்பீடும் என்பதே நமது பதில்.

முதலீடும் காப்பீடும் கலந்த சாதனங்களில் ஏன் லாபம் குறைவாக இருக்கிறது என்று கேட்டால், இதில் காப்பீடும் இருக்கிறதே என்று பதில் வரும்; இதில் காப்பீட்டுத் தொகை குறைவாக இருக்கிறதே என்று கேட்டால், இதில் போட்ட பணம் முதலீடாகிறதே என்று பதில் வரும். இத்தகைய திட்டங்கள் நல்ல காப்பீட்டுத் திட்டங்களும் இல்லை; நல்ல முதலீட்டுத் திட்டங்களும் இல்லை.

srikanth@fundsindia.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x