Published : 25 May 2015 01:18 PM
Last Updated : 25 May 2015 01:18 PM

முதல் செலவு: விற்பனையாளர் தேவையில்லை!

ஒரு நல்ல நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வது எப்படி என்று சொல்வதற்கு முன்பு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். ஒரு நிதி ஆலோசகராக, குறிப்பாக பரஸ்பர நிதிகளைப் பரிந்துரைக்கும் ஆலோசகராக நல்ல முறையில் செயல்படுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை.

பொதுவாகவே முதலீட்டுச் சாதனங்கள் என்பவை அரூபமானவை; அவற்றில் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. ஒரு தங்க நகை போல, ஒரு கிரவுண்ட் நிலம் போல இதைத் தொட்டுப் பார்க்கவோ, அளந்து பார்க்கவோ முடியாது. இரண்டாவது, அவற்றின் பலன் என்பது பின்னொரு நாளில் வரக்கூடியது - அதாவது உடனடி சந்தோஷம் தரக்கூடியவை அல்ல. மூன்றாவது, பரஸ்பர நிதிகள் என்று வரும்போது, அவை எந்த வித உத்திரவாதமும் இல்லாமல் இருக்கும் சாதனங்கள். இப்படி, அரூபமான, உடனடி பலன் தராத, உத்தரவாதமில்லாத முதலீட்டுச் சாதனங்களை உங்களுக்கு விளக்கி, அவை உங்கள் எதிர்காலத்துக்கு உகந்தவை என்று புரிய வைத்து நிலையாக முதலீடு செய்ய வைப்பது என்பது கடினமான விஷயம்.

அன்றாடம் புதுப்புது சிக்கல்களையும் வித்தியாசமான மனிதர்களின் வினோதமான சந்தேகங்களையும் எதிர்கொண்டு திறம்பட செயல்பட வேண்டிய பணி இது. இந்த சவால்களை ஒரு ஆலோசகர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே அவர் ஒரு முதலீட்டாளருக்கு எத்தகைய சேவையை வழங்குகிறார் என்று தீர்மானிக்கிறது.

இதையெல்லாம் ஒரு தகவல் ரீதியாகத்தான் சொல்கிறேன். ஒரு முதலீட்டாளர் என்ற முறையில் நீங்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை. ஒரு முதலீட்டாளருக்குத் தேவை ஒரு நல்ல ஆலோசகர், அவ்வளவுதான். அப்படிப்பட்ட ஒருவருக்கான சாமுத்ரிகா லட்சணங்கள் என்ன? அவரைக் கண்டு கொள்வது எப்படி?

இந்த கேள்விகளுக்குப் பதில் காண்பதற்கு முன் பிரச்சினை என்ன என்று பார்த்து விடுவோம். ஒருவர் தன்னை நிதி ஆலோசகர் என்று அழைத்துக் கொண்டு சேவைகளை வழங்குவதற்கான அடிப்படைத் தகுதியை அடைவது சற்று சுலபமானதுதான். ஓரிரு தேர்வுகளைக் கடந்து விட்டு, விண்ணப்பித்து, கொஞ்சம் கட்டணமும் கட்டி விட்டால், எவரும் தம்மை ஒரு நிதி ஆலோசகர் என்று அழைத்துக் கொள்ளலாம்.

இவர்களில் பெரும்பான்மை யானோர் உங்களுக்கு இலவசமாக ஆலோசனை சேவையை வழங்குவர். இவர்களுக்கான வருமானம் என்பது நீங்கள் எந்த நிதியில் முதலீடு செய்கிறீர்களோ அந்த நிதி நிறுவனம் தரும் சேவைக் கட்டணத் தொகைதான். நீங்கள் எவ்வளவு முறை முதலீடு செய்கிறீர்களோ, எவ்வளவு அதிகம் முதலீடு செய்கிறீர்களோ அதற்கேற்ப ஒரு ஆலோசகருக்கு வருமானம் அதிகரிக்கும். உங்கள் முதலீடு நன்கு வளர்ந்தால், அவர்களது வருமானமும் வளரும்.

இப்படி இருப்பதால், ஒரு சிலர் உங்களை எப்பாடுபட்டாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து விட வேண்டும் என்று மெனக்கெட்டு, உங்களிடமிருந்து முதலீட்டினை வாங்கி விட்டு, அதற்கான ஊதியத்தையும் பெற்று விட்டு, பின்னர் உங்களை மறந்து விட்டு இன்னொருவரைத் தேடிச் சென்று விடுவார்கள்.

அவர்கள் பரிந்துரைக்கும் முதலீடு உங்களுக்கு உகந்ததா என்பதை விட அவர்களது வருமானத்துக்கு உகந்ததா என்பதிலேயே அவர்களது அக்கறை இருக்கும். இவர்களை ஆலோசகர்கள் என்று சொல்வதை விட, விற்பனையாளர்கள் என்று சொல்வதே பொருந்தும். இவர்களைத் தவிர்ப்பது எப்படி? மாறாக, ஒரு நல்ல ஆலோசகரை அடையாளம் காண்பது எவ்வாறு? இதற்கு ஒரு சில எளிய வழிமுறைகள் உள்ளன.

இவற்றில் முதன்மையானது, ஒரு ஆலோசகர் உங்களை ஆரம்பத்தில் அணுகும் முறை. ஒரு நல்ல ஆலோசகர் எந்த ஒரு பரிந்துரை செய்வதற்கு முன்பும் உங்களையும் உங்கள் நிதி நிலைமை, குடும்பச் சூழல், உங்கள் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முனைவார். அப்படிச் செய்யாமல், எடுத்த எடுப்பிலேயே, 'சார் ஒரு நல்ல ஸ்கீம் வந்திருக்கு மார்கெட்ல' என்று உரையாடலைத் தொடங்கினால் நீங்கள் ஒரு விற்பனையாளருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இரண்டாவது, முதலீடுகளுக்கு முன்பாக, உங்களது தற்போதைய நிதி நிலைமை குறித்து ஆராய்ந்து அவற்றில் சீர்செய்ய வேண்டியதைச் செய்ய முயற்சி செய்கிறாரா என்பதை நோக்க வேண்டும். உதாரணத்துக்கு நீங்கள் போதுமான அளவு சேமிக்கிறீர்களா, உங்களுக்குத் தேவையான காப்பீட்டுத் தொகை இருக்கிறதா என்பதையும் கருத்தில் கொண்ட பின்புதான் முதலீடுகளுக்கு வர வேண்டும்.

மூன்றாவது, முதலீடுகள் என்று வரும் போது, எத்தகைய சாதனங்களைப் பரிந்துரைக்கிறார் என்று பார்க்க வேண்டும். ஒரு நல்ல ஆலோசகர் பெரும்பான்மையும், சந்தையில் நன்கு நிலைத்து நின்று சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களையே பரிந்துரை செய்வார். ஆனால் பல சமயங்களில் புதிதாக வந்திருக்கும் திட்டங்களில் (NFO என்று அறியப்படுபவை) ஒரு ஆலோசகருக்கு ஊதியம் அதிகம். ஆகையால் அவற்றைப் பரிந்துரைக்க முனைவார்கள். அத்தகையவர் என் பார்வையில் உங்கள் நலனை கருத்தில் கொள்ளாத நிதித்திட்ட விற்பனையாளர் என்பதே.

நான்காவது, அவர் எத்தகைய சொற்களை பயன்படுத்துகிறார் என்பதை கவனிக்க வேண்டும். சந்தை சார்ந்த எந்த ஒரு முதலீட்டுத் திட்டமும் லாப உத்திரவாதங்கள் இல்லாதவை. ஆனால் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் உத்திரவாதங்களைப் பெரிதும் விரும்புபவர். ஆகையால் உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக ‘இது கண்டிப்பாக 20% கொடுக்கும் சார்' என்றோ, ‘நான் கேரண்டி சார்' போன்ற வாக்கியங்களைச் சிலர் பயன்படுத்துவார்கள். இவை யெல்லாம் விற்பனை உத்திகள். இவற்றைப் பயன்படுத்துபவர்கள் விற்பனையாளர்களே.

மாறாக ஒரு நல்ல ஆலோசகர் உங்களுக்கு ஒரு திட்டத்தில் இருக்கும் ஆபத்துகளை எடுத்துரைத்து விட்டு, அதில் ரிஸ்க் எடுப்பதன் ஆதாயத்தை விளக்கிக் கூறுவார். அதை நீங்கள் எந்த அளவுக்கு ஏற்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களது ரிஸ்க் தாங்கு சக்தியைத் தீர்மானித்து அதற்கேற்ப ஆலோசனை வழங்குவார். மேலும் ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் விளக்கிச் சொல்வார்.

இப்படியாக, உங்களைப் புரிந்து கொண்டு, உங்களுக்கேற்ற சிறப்பான செயல்பாடுடைய திட்டங்களை விளக்கிப் பரிந்துரைப்பவரே ஒரு நல்ல ஆலோசகர். இப்படிப்பட்ட ஒருவரைக் கண்டடைவதே உங்களுக்கான முதல் பணி. இப்படி ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர் சொல்படி செயல்பட்டு முதலீடுகள் செய்தீர்கள் என்றால் உங்கள் நிதிவளம் நிலையாக, நிறைவாக, நிம்மதியாக வளரும்.

ஒரு நல்ல ஆலோசகர் எந்த ஒரு பரிந்துரை செய்வதற்கு முன்பும் உங்களையும் உங்கள் நிதி நிலைமை, குடும்பச் சூழல், உங்கள் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முனைவார். அப்படிச் செய்யாமல், எடுத்த எடுப்பிலேயே,

srikanth@fundsindia.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x