Published : 08 May 2017 10:01 AM
Last Updated : 08 May 2017 10:01 AM

விபிஎப் தற்போதைய சிறந்த வாய்ப்பு

கடன் சார்ந்த திட்டங்களில் வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இருந்தாலும் இந்த பிரிவில் சில திட்டங்களில் கூடுதல் வட்டி கிடைக்கின்றன. வருங்கால வைப்பு நிதி (பிஎப்) மற்றும் விருப்ப வருங்கால வைப்பு நிதி (விபிஎப்) மிக குறைந்த அளவே வட்டி குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இருக்கும் மிக சில வாய்ப்புகளில் இது சிறந்ததாகும். தவிர இதில் செய்யப்படும் முதலீடு பாதுகாப்பானது மற்றும் வரிச்சலுகைகளும் இருக்கின்றன.

மாத சம்பளம் வாங்குபவர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப் படியில் 12 சதவீதம் பிஎப் கணக்கில் முதலீடு செய்யப்படும். நிறுவனமும் பணியாளர்களின் பிஎப் கணக்கில் இதே தொகையை முதலீடு செய்யும். 12 சதவீத தொகையை உயர்த்த முடியாது என்றாலும், விபிஎப் மூலமாக கூடுதல் தொகையை பிஎப் கணக்கில் முதலீடு செய்யலாம்.

அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி தொகை முழுவதையும் கூட பிஎப் கணக்கில் முதலீடு செய்ய முடியும். பிஎப் தொகைக்கு என்ன வட்டி கிடைக்குமோ அதே வட்டி விபிஎப் தொகைக்கும் கிடைக்கும். பிஎப் தொகைக்கு என்ன விதிமுறைகள், சலுகைகள் பொருந்துமோ அதே விதிமுறைகள் விபிஎப் தொகைக்கும் பொருந்தும். ஒரே வித்தியாசம் பணியாளர்கள் கூடுதலாக விருப்பப்பட்டு முதலீடு செய்யும் தொகை என்பதால் நிறுவனம் இந்த தொகையை முதலீடு செய்யாது.

வருமானம்

பிஎப் முதலீட்டுக்கான வட்டி விகிதம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டில் 8.80 சதவீதமாக இருந்தது. அதிலிருந்து மிக குறைந்த அளவில் மட்டுமே வட்டி குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் நிரந்தர வருமானம் கொடுக்கும் திட்டங்களில் பிஎப் மற்றும் விபிஎப் சிறந்ததாக இருக்கிறது.

வரிச்சலுகை

பிஎப் மற்றும் விபிஎப்-ல் இருக்கும் மற்றொரு சாதகம் வரிச்சலுகை. சிறந்த வருமானம் கொடுக்கும் அதே சமயம், இந்த பிரிவில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 80சி பிரிவில் வரிவிலக்கும் பெற்றுக்கொள்ள முடியும். தவிர முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டிக்கும் வரிவிலக்கு (இஇஇ பிரிவு) இருக்கிறது. ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரையில் முதலீட்டுக்கு வரிவிலக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் ரூ.1.50 லட்ச ரூபாய்க்கு மேலேயும் முதலீடு செய்ய முடியும். இதற்கு மேல் முதலீடு செய்யும் தொகைக்கு 80சி பிரிவில் வரி விலக்கு கிடையாது. ஆனால் இஇஇ பிரிவில் வருவதால் கிடைக்கும் வட்டிக்கு வரிவிலக்கு உண்டு.

பிஎப் மற்றும் விபிஎப்-க்கான வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்யப்படும். பிஎப் அறங்காவலர் குழு நிதி ஆண்டின் முடிவில் வட்டி விகிதத்தைப் பரிந்துரை செய்யும். இருந்தாலும் நிதி அமைச்சகம் ஒப்புதல் கொடுத்த பிறகே இந்த வட்டி விகிதம் இறுதி செய்யப்படும். தற்போதைய நிலையில் இருந்து வட்டி விகிதம் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் இருக்கிறது. ஆனால் கடந்த கால அனுபவங்களைப் பார்க்கும் போது அந்த வட்டி விகிதம் இதர திட்டங்களை (பிபிஎப் உள்ளிட்ட) விட அதிகமாகவே இருக்கும்.

தற்போது பிஎப் தொகையில் 10 சதவீதம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த அளவை 15 சதவீதமாக உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பங்குச்சந்தையில் கணிசமான தொகை முதலீடு செய்யப்படுவதால் வருங்காலத்தில் பிஎப்/விபிஎப் ஆகியவற்றின் வட்டியை விட மற்ற கடன் சார்ந்த திட்டங்களின் வட்டி குறைவாக இருப்பதற்கே வாய்ப்புகள் உள்ளன.

விபிஎப் முதலீடு எப்படி?

எளிமையான முறையில் விபிஎப் முதலீடு செய்ய முடியும். மாத சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், மாத சம்பளத்தில் கூடுதலாக தொகை பிடித்து பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும். விபிஎப் தொகை மாதந்தோறும் மாற்றிக்கொள்வதற்கு சில நிறுவனங்கள் அனுமதிக்கும். சில நிறுவனங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தொகையை மாற்ற முடியும்.

அதிகம் வேண்டாம்

விபிஎப் சிறந்த திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் மிக கூடுதல் தொகையை விபிஎப்-ல் முதலீடு செய்ய வேண்டாம். அதிக தொகை முதலீடு செய்யும் பட்சத்தில் கைக்கு கிடைக்கும் சம்பளம் குறையும். அதிக தொகை முதலீடு செய்து கடன் வாங்கும் சூழ்நிலைக்கு செல்ல வேண்டாம். தவிர முதலீடு என்பது பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தை இரண்டிலும் இருக்கவேண்டும். நிரந்தர வருமானம் கிடைக்கும் என்பதற்காக மொத்த முதலீடும் விபிஎப்-ல் செய்ய வேண்டாம். பங்குச்சந்தை மியூச்சுவல் பண்ட் முதலீடு ரிஸ்க் என்றாலும் பல பண்ட்கள், பிஎப்/விபிஎப்-யை விட அதிக லாபத்தைக் கொடுத்திருக்கின்றன என்பதையும் மறக்க வேண்டாம்.

- anand.k@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x