Last Updated : 17 Apr, 2017 11:28 AM

 

Published : 17 Apr 2017 11:28 AM
Last Updated : 17 Apr 2017 11:28 AM

விவசாயிகளின் வருமானம் இருமடங்காவது சாத்தியமா?

“என்னுடைய கனவு மீது நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய கனவுதான் உங்களுடைய கனவு. என்னுடைய கனவு என்ன? 2022-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்குவது. 75-வது சுதந்திரத்தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் விவசாயிகளின் வருமானம் இருமடங்காக்கப்பட வேண்டும். உத்தர பிரதேச மண்ணில் இருந்து கொண்டு சொல்கிறேன் என் கனவு நிச்சயம் நிறைவேறும்’’

- பிரதமர் மோடி (உத்தரபிரதேச மாநிலம், பரேலி 2016, பிப்ரவரி)

ஆம், ஒரு மாதமாக தலைநகர் டெல்லியில் அறவழியில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆறுதல் சொல்லகூட செல்லாத நம் பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதிதான் இது. பிரதமர் மோடியின் ஏராளமான வாக்குறுதிகளுள் இதுவும் ஒன்று. ஆனால் வாழ்வாதாரத்துக்கே வழியில்லாத விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இருமடங்காக்க முடியுமா? என்ற கேள்வி இயல்பாக நம்முன் எழுகிறது. இதை விவாதிக்கக் கூடிய சரியான தருணமும் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

விவசாயிகளின் வருமானத்தை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய மாதிரி ஆய்வு ஆணையம் கணக்கிட்டு வருகிறது. 2002-03 கணக்கெடுப்பின் படி ஒரு விவசாய குடும்பத்தின் உத்தேச மாத வருமானம் 2,115 ரூபா யாக இருந்தது. 2012-13-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 6,426 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதில் சராசரியாக விவசாய குடும்பத்திற்கு 6,223 ரூபாய் செலவு என்று தேசிய மாதிரி ஆய்வு ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஆக அவர்களுடைய மொத்த வருமானம் அவர் களுடைய செலவுகளை ஈடு செய்யக் கூடிய அளவுக்கே இருக்கிறது. அதாவது பத் தாண்டு களுக்கு முன் ஒரு கிலோ வெங்காயம், உருளை கிழங்கு, தக்காளி தோராயமாக 5 ரூபாய்க்கு விற்றிருந் தால் கிட்டத்தட்ட அதேவிலைக்கு தான் விவசாயி கள் தற்போதும் விற்று வருகின்றனர். அதாவது விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் 70% மக்கள் நேரடியாக வும் மறைமுகமாகவும் தங்கள் வாழ் வாதாரத்துக்காக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேரடி விவ சாயத்தில் ஈடுபடுவோரில் முக்கால் வாசி பேர் கடன் வாங்கியே சாகுபடி செய்துவருகின்றனர். ஒரு புறம் கடன், மற்றொருபுறம் அன்றாட செலவுகள், மீண்டும் சாகுபடி செய் வதற்கு உண்டான செலவுகள் என ஏராளமான பிரச்சினைகள் விவசாயி களை சூழ்ந்துள்ளன. இதில் சாகுபடி பொய்த்து போனால் விவசாயிகள் நிலைமை மிக மோசம்.

குறிப்பாக கடன் பிரச்சினைகள் விவசாயிகளை தொடர்ந்து இயங்கவிடாமல் செய் கிறது. இதனால் ஏற்படும் தற்கொலை கள் ஏராளம். ஆனால் மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ இந்த பிரச்சினையை நீண்ட கால நோக் கில் திட்டமிடுவதில்லை. விவ சாயிகளை தங்கள் பக்கம் வைத்துக் கொள்வதற்காக வும் வாக்குவங்கி அரசிய லுக்காகவும் கடன் தள்ளு படி மற்றும் வறட்சி நிவாரணம் போன்ற சலுகைகளை அவ்வப் போது அறிவிக்கின்றன.

கடன் தள்ளுபடி தீர்வா?

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்று என்பதால் சமீபத்தில் உத்தர பிரதேச மாநில அரசு ரூ.36,539 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 1 லட்சம் சிறு குறு விவசாயிகள் பயனடை வார்கள். இதற்குமுன் 2008-09-ம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் டில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 60,000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு மூலம் 3.7 கோடி விவசாயிகள் அப்போது பயனடைந்தனர்.

அதன் பிறகு விவ சாயிகளின் வருமானம் உயர்ந்திருக் கிறதா? இல்லை. மேலும் இதுபோன்ற கடன் தள்ளுபடியால் மத்திய பட்ஜெட் டிலோ அல்லது மாநில பட்ஜெட்டிலோ பற்றாக்குறை ஏற்படும். இதை சரிசெய் வதற்கு மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறையும். இவற் றிலும் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான்.

நூற்றாண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் விவ சாயிகளின் வாழ்க்கைத்தரம் மட்டும் மேம்படவில்லை. விவசாயத்தின் மூல பிரச்சினைகளை ஆராயாமல் அது சார்ந்த முதலீடுகளை செய்யாமல் வெறு மனே தேர்தல் காரணங்களுக்காக விவசாயிகளின் கடனை மட்டும் தள்ளுபடி செய்தார்கள்.இதன் பயனை அரசியல் கட்சிகள் அடிக்கடி அறுவடை செய்ததன் காரணம்தான் இன்று டெல்லியில் நடந்துவரும் போராட்டம். விவசாயி கள் கடனை அடைக்க முடியாததற்கு சூழலியல் காரணங்கள் இருந்தாலும் விலை நிர்ணயம் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

உதாரணமாக பீகாரில் ஒரு டன் அரிசி விளைவிப்பதற்கு உண்டாகும் செலவை விட கேரளாவில் மூன்று மடங்கு அதிகம் செலவாகிறது. கேரளாவில் விவசாய கூலிகளின் ஊதியம் மிக அதிகமாக இருக்கிறது. விவசாய செலவு மற்றும் விலை ஆணையம் இதுபோன்ற பிரச்சினைகளை கருத்தில் கொள்வதில்லை. விவசாய செலவு மற்றும் விலை ஆணையம் நிர்ணயிக் கும் அடிப்படை ஆதார விலையில் அதிகப்படுத்தி மாநில அரசுகள் வழங்கினாலும் கூட பல சமயங்களில் அது போதுமானதாக இல்லை.

இடம்பெயரும் விவசாய கூலிகள்

ரிசர்வ் வங்கியின் தகவல்களை எடுத்துப் பார்த்தால் புள்ளிவிவரம் வேறுவிதமாக இருக்கிறது. 2002-03 ஆண்டு முதல் 2012-13ம் ஆண்டுகளில் விவசாய கூலிகளுக்கான நுகர்வோர் விலைக்குறியீட்டை பார்த்தால் பணவீக்கம் 7.2 சதவீதமாக இருக்கிறது. ஆனால் இந்த கால கட்டத்தில் விவ சாய கூலிகளின் வருமானம் சராசரியாக 4-4.5 சதவீதமாக உள்ளது. ஆக உண்மையான வருமானம் என்பது எதிர்மறையாக இருக்கிறது. இந்த வருமானம் தொடர்ந்தால் விவசாய கூலிகளின் வருமானம் இருமடங்காக உயர 16 ஆண்டுகள் ஆகும்.

ஆக பிரதமர் மோடி உத்தேச வருமானத்தை அதிகப்படுத்தப் போகிறாரா அல்லது விவசாய கூலிகளின் வருமானத்தை இருமடங்காக்க போகி றாரா என்பது தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் ஊதியம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான விவசாய கூலிகள் கட்டுமானத் துறைகளுக்கு இடம்பெயருவது அதிமாகி வருகிறது. இன்னும் சில வருடங்களில் மிகப் பெரிய அளவில் விவசாய கூலிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இவை மட்டுமல்லாமல் வேளாண்மைக்கு ஏற்ற காலநிலை குறித்த தகவல்கள் விவசாயிகளுக்கு சென்று சேர்வதில்லை. மேலும் இந்திய விவ சாயம் பருவமழை சார்ந்து இயங்கு வதால் நீர் ஆதாரத்தை தக்கவைத்துக் கொள்வதில் அரசுகள் மெத்தனம் காட்டி வருகிறது. மேலும் தற்போது சாகுபடிக்கான முதலீடு மிக அதிக மாக இருக்கிறது. தரமான விதைகள் கிடைப்பதில் பிரச்சினை இருக்கிறது. இப்படி விவசாயிகளை சுற்றி பிரச் சினைகள் மட்டுமே காலம் காலமாக இருந்து வருகிறது. இவற்றையெல்லம் களையாமல் வாக்கு அரசியலுக்கு விடப்படும் வெற்று வாக்குறுதி ஒரு போதும் பலிக்காது என்பதை நினை வில் கொள்ள வேண்டும்.

என் பள்ளிக்கால நண்பன் ஒருமுறை மிக எதார்த்தமாக இப்படி கேட்டான். ``நம் வாழ்வாதாரத்துக்கு தேவையில்லாத செல்போன் தயாரிப்பவர்கள் பணக்காரர்களாக இருக்கிறர்கள். டிவி தயா ரிப்பவர் பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஏன் மனிதர்கள் உயிர் வாழத் தேவையான உணவைத் தயாரிக்கும் விவசாயிகள் மட்டும் ஏழைகளாக இருக்கிறார்கள்’’. அப்போது அந்த கேள் விக்கு என்னால் விடைசொல்லமுடிய வில்லை. ஆனால் அனைவரும் விடை தேட வேண்டிய தருணம் நெருங்கி விட்டது என்றே தோன்றுகிறது.

- devaraj.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x