Published : 13 Feb 2017 11:00 AM
Last Updated : 13 Feb 2017 11:00 AM

உங்களிடம் ஐடியா இருக்கா?

வெற்றிபெறும் ஐடியாக்களை வைத்துக் கொண்டு அதை செயல்படுத்திப் பார்க்க வாய்ப்பில்லாமல் முடங்கி இருப்பவர்கள் பலர். தவறான ஐடியாவில் முதலீடுகளை முடக்கியவர்களும் உண்டு. இந்த குழப்பங்களுக்கு இடையில்தான் தொழில் ஆலோசகர்களும், ஆலோசனை அமைப்புகளும் உள்ளன. வெற்றிபெறும் சரியான ஐடியாவை கணித்து அதை ஒரு செழுமைக்குள் கொண்டுவரும் பணியைச் செய்வது இவர்கள்தான். ``தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வமுடன் 400 பேர் வந்தாலும், அவர்களில் 40 பேர்தான் நிச்சயமான முயற்சிகளில் இருப்பார்கள். அதுபோலவே தொழிலுக்கான ஐடியாவும்’’ என்கிறார் ஆர்.எம்.பி. ஜவஹர்.

திருச்சிராப்பள்ளி மண்டல பொறியியல் கல்லூரி யில் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் (டிரக்-ஸ்டெப்) செயல் இயக்குநர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மையம் தொழில்முனைவோர் உருவாக்கத்தில் ஆற்றிய பணிக்காக 2016-ம் ஆண்டுக்கான தேசிய தொழில் முனைவோர் விருதை சமீபத்தில் பெற்றுள்ளது. புதிய தொழில்முனைவோர் உருவாக்கத்தில் இந்த மையத்தின் பங்கு என்ன என்பதற்காக அவரைத் தொடர்பு கொண்டோம்.

சரியான தொழில் முயற்சியை தேர்ந்தெடுத்து வளர்ப்பது சமூகத்துக்கு செய்யும் உதவியாக இருக்கும். இதன் மூலம் நேரடியான, மறைமுகமான வேலைவாய்ப்புகள் உருவாகும். அரசுக்கு வரிகள் மூலமான வருமானமும் கிடைக்கும். நாங்கள் தொழில்முனைவோர்களின் ஐடியாவைக் கணித்து அவற்றை சரியான வழியில் கொண்டு செல்ல உதவி செய்கிறோம். ஐடியாவோடு வருபவர்கள் தொழில்முனைவோர்களாக வெளியே செல்லலாம்.

எப்படியான கல்வி பின்புலத்திலிருந்து வந்தாலும், ஒரு தொழில் யோசனையை செயல்படுத்திப் பார்ப்பதற்கு பலவிதமான தடைகள் இருக்கின்றன. அதையெல்லாம் கடந்து ஒரு தொழில்முனைவோரை உருவாக்கும் பணியைத்தான் இந்த மையம் செய்து வருகிறது. குறிப்பாக உற்பத்தி துறை சார்ந்த தொழில்முனைவோர்கள் எங்களது இன்குபேசனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

மண்டல அளவில் செயல்பட்டுவரும் தொழில்முனைவோருக்கு சர்வதேச அளவிலான தொடர்புகளை உருவாக்கிக் கொடுப்பது, சர்வதேச அளவிலான தொழில்நுட்பங்களை தருவிப்பதிலும் இந்த மையம் உதவிகரமாக இருந்து வருகிறது. முக்கியமாக அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த புதிய தொழில்கள், மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.

தொழில் குறித்த சிறப்பான அனுபவம் இருக்கலாம், அல்லது தொழில் ஐடியாவும் சிறப்பாக இருக்கும். ஆனால் அதை செயல்படுத்தி பார்ப்பதற்கான சூழலும், கட்டமைப்பும் புதிதாக தொழில் தொடங்குபவர்களிடம் இருக்காது. அது போன்ற தொழில்முனைவோர்கள் இந்த இன்குபேசன் மையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆராய்ச்சி நிதி உதவி

இவர்களின் ஆரம்ப ஆராய்ச்சி களுக்காக ரூ.25 லட்சம் நிதியையையும் நாங்கள் ஒதுக்குகிறோம் என்று குறிப்பிடும் ஜவஹர், ``இங்குள்ள ஆராய்ச்சி கூடங் கள், இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்வது தவிர அனைத்து விதமான ஆலோசனைகளையும் அளிக்கிறோம். தொழில் முனைவோர் மாதிரி வடி வமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக தனியாக சொந்த உற்பத்திக் கூடத்தை தொடங்கு வது சாத்தியமில்லை.

ஆனால் இங்குள்ள இயந்திரங்கள், வசதிகளை பயன்படுத்தி அதை உருவாக்க முடியும். அவரது கண்டுபிடிப்புக்கு அறிவுசார் சொத்துரிமை பதிவு, தொழிலக தொடக் கத்துக்கான நிதி உதவி, அதற்கு பின்னர் வெளியில் கடன் திரட்டுவதற்கான உதவிகளுக்கும் பக்கபலமாக இருந்து வருகிறோம். ஐடியாவை மட்டும் வைத்துள்ள ஒருவரை ஒரு தொழில்முனை வோராக உருவாக்கி வெளியே அனுப்புகிறோம் என்கிறார்.

மார்க்கெட்டிங் உதவி

தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்படும் ஒருவர், அவரது உற்பத்தியை வாடிக்கையாளர் களுக்கு கொண்டு சேர்ப்பதிலோ, சந்தைப் படுத்துவதிலோ சிறப்பாக செயல் படுவார் என்று சொல்ல முடியாது. இந்த பணிகளில் அவர் நேரம் ஒதுக்கினால், ஆராய்ச்சி பணிகளில் கவனம் செலுத்த முடியாது. இதனால் அவர்களுக்கான மார்க்கெட்டிங் உதவிகளைக் கூட இந்த மையம் மேற்கொள்கிறது.

தொழில் முனைவோர் தனியாக தொழிலை தொடங்கி சொந்த இடத்துக்கு மாறுவது வரை இங்கே இயங்க அனுமதிக்கின்றனர். சுமார் 4 முதல் 5 ஆண்டுகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குகிறோம். அதற்கடுத்து கூடுதலாக ஒரு ஆண்டு வரையிலும் இங்கு இயங்க அனுமதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

உள்கட்டமைப்பு

இந்த மையம் 50 ஏக்கரில் செயல்படுகிறது, 48 ஆயிரம் சதுர அடியில் கட்டமைப்பு வசதிகளை வைத்துள்ளது. தொழில்முனைவோர்களுக்கு தேவையான மின்வசதி, நீர், இதர அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளது.

குறிப்பாக அறியியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எந்த ஒரு தொழிலுக்குமான ஐடியாவை இங்கு செயல்படுத்திப் பார்க்கலாம். கார் தயாரிப்பது தொடங்கி, சூட்கேஸ் தயாரிப்பது வரை அதற்கான முதல் மாதிரியை இங்கு தயாரிக்க முடியும். தவிர பேட்ச் புரொடக்‌ஷன் வரை மேற்கொள்ளும் அளவுக்குத் தேவையான அனைத்து இயந்திரங்களும், ஆராய்ச்சி கூடமும் உள்ளன என்கிறார் ஜவஹர்.

தனித்து இயங்கும் திறன்

தொழில்முனைவோர்கள் உருவாக்கத்துக்கு என்று 1985-ம் ஆண்டு இந்த மையம் தொடங்கப் பட்டது. அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து இந்த பிரிவை தனியாக ஒரு தொழில்முனைவு மைய மாகவே அரசு மாற்றியது. அதன் பிறகு மத்திய அரசு மற்றும் மாநில அரசுடன், திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியும் பங்குதாரராக இந்த மையத்தில் உள்ளன. ஐடிபிஐ வங்கி, ஐஎப்சிஐ, என்ஐடி போன்றவையும் இந்த மையத்துக்கு பக்க பலமாக இருந்து வருகின்றன.

இந்த மையம் உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல வற்றின் நிதி உதவியோடு பல சமூக திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது. இதனால் சர்வதேச அளவில் பல தொழில்முனைவு மையங்கள், அமைப்புகளுடன் இணைந்து தொழில்முனைவோர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

தொழில்முனைவோர்கள் இந்த மையத்தில் உறுப்பினராக கட்டணம் கிடையாது. அவர்களது ஐடியா மட்டும் இந்த மையத்தின் இன்குபேசன் குழுவால் தேர்வு செய்யப்பட வேண்டும். கல்வித் தகுதி எதையும் வரையறுக்கவில்லை. இதுவரையில் 250க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களை இந்த அமைப்பு உருவாக்கியுள்ளது. இதுவரையில் சர்வதேச அளவில் 25க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் விருதுகளையும் இந்த மையம் பெற்றுள்ளது. இங்கு தொழில் தொடங்க வந்த உறுப்பினர்களில் இதுவரையில் 5% தொழில்கள் மட்டுமே தோல்வியில் முடிந்துள்ளன. அதுவும் தொழில்முனைவோர்கள் சரிவர செயல்படாத காரணங்களால்தான் நடந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

ஐடியா உள்ளவர்கள் இந்த மையத்தை பயன் படுத்தினால் தொழில்முனைவோராவது நிச்சயம். உங்களிடம் ஐடியா இருக்கா? என்கிற ஒரு விளம்பரத்தில் கேட்கப்படும் கேள்விக்கு இப்போது வேறு அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

- maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x