Published : 24 Jun 2019 11:39 AM
Last Updated : 24 Jun 2019 11:39 AM

எண்ணித் துணிக! - பிரச்சினைக்கு  தீர்வு இல்லையேல், காப்பி!

ஸ்டார்ட் அப் ஐடியா பற்றி பேசிக் கொண்டிந்தோமே எதாவது கிடைத்ததா? கிடைத்தது என்றால் எதற்கு இதைப் படித்துக்கொண்டு? போய் தொழில் தொடங்கும் வேலையைப் பாருங்கள். மற்றவர்கள் மட்டும் இருங்கள். ஐடியா கிடைக்கும் வழி பற்றி பேசுவோம்.

உங்களை அனுதினம் வெறுப்பேற்றும் விஷயம் ஏதாவது இருக்கிறதா? அதற்கு தீர்வு தேடினீர்களா? ஏன் மெனெக்கெடுகிறீர்கள். நானே அப்படி ஒரு தினப்படி மேட்டரை நினைவுபடுத்துகிறேன்.

காலை உங்களை அலாரம் அலறி எழுப்பும் போது இன்னும் அஞ்சு நிமிஷம் தூங்கலாம் என்று அதை அணைத்து விட்டு லேட்டாய் எழுந்து தொலைத்து ‘சே, நாளை லேருந்தாவது சீக்கிரம் எழுந்துக்கனும்’ என்று கங்கனம் கட்டி அடுத்த நாளும் அதே அலாரம், அதே அஞ்சு நிமிஷம், அதே லேட்டாய் எழுந்து கடுப்பாகிறவரா நீங்கள்? ஒன்று சொல்வேன், தவறாய் நினைக்கக் கூடாது.

இரவில் மொடா குடி குடித்துவிட்டு மறுநாள் காலை மண்டை உடையும் தலைவலியோடு எழுந்து ‘இனிமே சத்தியமா குடிக்க மாட்டேன்’ என்று முடிவு செய்து அன்று இரவே குடிப்பவருக்கும் உங்களுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூற முடியமா? சரி, அதை விடுங்கள். அந்த அலாரம் விஷயம் உங்களுக்கு பிரச்சினையாகத் தெரியவில்லையா?

உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் தெரிந்தது அமெரிக்க கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த `கௌரி நந்தா’ என்ற இந்திய பெண்ணுக்கு. நீங்களும் நானும் சும்மா இருந்தோம். ஆனால், அவர் தீர்வு தேடினார். அதன் விளைவாகப் பிறந்தது ‘க்ளாக்கி’ என்ற சின்ன அலாரம். அல்ப அலாரம் தானே என்று நினைக்காதீர்கள்.

எமகாதக எந்திரம் அது. இன்னும் ஐந்து நிமிடம் தூங்குவோம் என்று அதன் பட்டனை அழுத்த நினைத்தால் டேபிளிலிருந்து குதித்து ஓடும். அதுவும் அலறிக்கொண்டே ஓடும். அச்சத்தம் பொறுக்க முடியாமல் அதை துரத்திக்கொண்டு ஓடினால் உங்கள்கையில் அகப்படாமல் அறை முழுவதும் அலறிக் கொண்டு ஓடி எங்காவது ஒளிந்துகொள்ளும். அதை தேடிப்பிடித்து அணைப்பதற்குள் தூக்கம் கலைந்து விடும்.

சரி, அடுத்த நாள் காலை அது ஓடும் திசை தெரிந்து தூக்கம் கலைவதற்குள் அதைப் பிடித்து அணைக்கலாம் என்று மனப்பால் குடிக்காதீர்கள். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திசை, வெவ்வேறு ஸ்பீடில் ஓடும்படி அதனுள் ஒரு மைக்ரோப்ராசஸர் வைத்திருக்கிறார்கள்.

யோசித்துப் பாருங்கள். தினம் சந்திக்கும் ஒரு பிரச்சினை. அதற்குத் தீர்வை கண்டுபிடித்து ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கி சுமார் 15 லட்சம் டாலர் வரை விற்பனை செய்து காட்டியிருக்கிறார் ஒரு மாணவி. நீங்கள் என்னடா என்றால், ஐடியா கிடைக்கவில்லை என்று அலாரம் வைத்து தினம் எழுந்திருக்க முடியாமல் என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்கள்!

கையில் ஒரு புத்தகம் வைத்துக்கொண்டு இது போல் தினம் உங்களை கடுப்பேற்றும் விஷயங்களை குறித்துக்கொள்ளுங்கள். நண்டு சிண்டாய் உள்ள விஷயத்தை தீர்க்கும் முயற்சிகள்தான் ஸ்டார்ட் அப் ஆகி உலகம் முழுவதும் பரவி வெற்றி பெற்றிருக்கின்றன என்பதை உணருங்கள். முடிந்தால் ‘ஊபர்’, ‘ஏர்பிஎன்பி’, ‘ரூம்பா’ போன்ற ஸ்டார்ட் அப் வெற்றி கதைகளை இணையத்தில் படியுங்கள்.

இணையம் என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. உங்களுக்கு ஐடியா தோன்றவில்லை என்றாலும் மற்ற நாடுகளில் தொடங்கப்பட்டு வெற்றி பெற்ற ஸ்டார்ட் அப் கதைகளை தேடிப் பிடியுங்கள். அவர்கள் வெற்றிபெற்ற விதங்களை ஆழப் படியுங்கள். அந்த ஐடியாக்களில் நம்மூருக்கு ஏற்றபடி இருக்கும் ஒன்றை செலக்ட் செய்து அதை இங்கு தொடங்கும் சாத்தியக்கூற்றை ஆராயுங்கள்.

‘என்னது, காப்பியடிக்க சொல்கிறாயா’ என்று கோபப்படாதீர்கள். காப்பி என்று ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள். அப்படி கூறாமல் அதற்கு உத்வேகம், இன்ஸ்பிரேஷன் என்று பெயர் வைத்து அதையே தொழிலாய் செய்யும் நம்மூர் சினிமாக்காரர்கள் சிலரை நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு தைரியம் வரும். அவர்களாவது தங்கள் பிழைப்புக்கு காப்பியடிப்பதை தொழிலாய் செய்கிறார்கள். நீங்கள் மக்கள் பிரச்சினை தீர்க்க செய்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்களேன்!

இதெல்லாம் கூட வேண்டாம் சார். உங்களுக்கு பிடித்த விஷயம் ஏதாவது இருக்கிறதா? அதை ஒரு ஐடியா ஆக்கி ஸ்டார்ட் அப் தொடங்க முடியுமா என்று ஆராயுங்கள். ‘ஹானா மையர்ஸ்’ என்ற இங்கிலாந்து பெண்ணுக்கு மலைகளில் சைக்கிள் ஓட்டிப் பழக பிடிக்கும். அந்நேரங்களில் அணிவதற்கான பிரத்யேக உடை ஆண்களுக்கு மட்டுமே இருப்பதை உணர்ந்தார். அதை வாங்கி அணிவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.

தனக்குப் பிரத்யேகமாக உடைகளை வடிவமைத்தார். அநியாயத்துக்கு சவுகரியமாய் இருப்பதை உணர்ந்து பெண்களுக்காக அவ்வகை ட்ரெஸ் செய்வதை தொழிலாக்கினார். ஒரு சில மலைகளையே காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு பணக்காரர் ஆகிவிட்டார்! உலகை வெல்லும் ஸ்டார்ட் அப் ஐடியாக்கள் ஐன்ஸ்டீன், நியூட்டன், எடிசன் போன்ற மேதை களுக்குத்தான் கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். சுமாரான ஆட்கள்  சிம்பிளாக சிந்தித்தால் சல்லிசாக கிடைப்பவை.

ஒன்றும் வேண்டாம். உங்களுக்கு நாய், பூனை வளர்க்க ஆசையா? ஆம் என்றால் ஊரெல்லாம் ஆர்கனைஸ்ட் பெட் ஸ்டோர் செயின் திறக்க முடியுமா என்று பாருங்களேன். பிடித்தமான விஷயமாகவும் ஆயிற்று. தொழிலாகவும் ஆயிற்று. இன்றைய நிலையில் அபரிமிதமான வளர்ச்சி கண்டு வரும் மார்க்கெட் அது. நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது? 

satheeshkrishnamurthy@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x