Published : 05 Mar 2018 11:57 AM
Last Updated : 05 Mar 2018 11:57 AM

விபிஎப் முதலீடு - ஒரு பார்வை

பாதுகாப்பாக இருக்க வேண்டும், மற்ற முதலீட்டு திட்டங்களை விட வருமானம் அதிகமாக இருக்க வேண்டும், வரி சேமிப்பு இருக்க வேண்டும். இவை அனைத்தும் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் விருப்ப வருங்கால வைப்பு நிதியில் (விபிஎப்) முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம். நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பட்சத்தில் உங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை பி.எப்-ல் செலுத்தியாக வேண்டும். இதற்கு ஈடாக உங்கள் நிறுவனமும் முதலீடு செய்யும்.

இதில் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினாலும் செய்யலாம். அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 100 சதவீதம் வரை முதலீடு செய்ய முடியும். பிஎப்-க்கு இருக்கும் விதிமுறைகள், வட்டி விகிதம் ஆகிய அனைத்தும் விபிஎப்-க்கும் பொருந்தும். ஆனால் உங்களது பிஎப் தொகைக்கு ஈடாக உங்கள் நிறுவனமும் முதலீடு செய்யும். ஆனால் நீங்களாக விரும்பி முதலீடு செய்யும் தொகைக்கு ஈடாக உங்கள் நிறுவனம் முதலீடு செய்யாது.

வட்டி விகிதம்

பிஎப் கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு 8.55 % (2017-18) வட்டி விகிதம் நிர்ணயம் (இன்னும் நிதி அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கவில்லை) செய்யப்பட்டிருக்கிறது. இது முந்தைய நிதி ஆண்டை விட 0.10 % குறைவாகும். இருந்தாலும் மற்ற முதலீட்டு திட்டங்களை விட விபிஎப்-ல் முதலீடு செய்வதன் மூலம் கூடுதல் வட்டியை பெறலாம்.

உதாரணத்துக்கு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கு பிபிஎப் வட்டி விகிதம் 7.6 % நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த நிதி ஆண்டில் சராசரியாக 7.8 % கிடைக்கும். தேசிய சேமிப்பு பத்திரத்தின் வட்டி விகிதமும் இதே அளவில்தான் இருக்கும். பெரும்பாலான வங்கி வட்டி விகிதம் 7 % என்னும் நிலையிலே இருக்கின்றன. மற்ற சிறு சேமிப்பு திட்டங்களை விட பிஎப்/விபிஎப் வட்டி விகிதம் இதுவரை அதிகமாகத்தான் இருந்திருக்கிறது. வரும் ஆண்டுகளிலும் இதே போலவே இருக்கும்.

பொருளாதார ஏற்ற இறக்கங்களை பொறுத்துதான் வட்டி விகிதம் இருக்கும். ஆனால் பொருளாதார மாற்றங்களுக்கும் இபிஎப் வட்டி விகிதத்துக்கும் சம்பந்தம் இல்லை. இதர திட்டங்களை விட கூடுதல் வட்டியே வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இருக்கும் உபரி தொகை மற்றும் தொழிற்சங்கங்களுக்குதான் நாம் நன்றி சொல்லியாக வேண்டும். வட்டி விகிதங்கள் உயரத்தொடங்கியுள்ள சூழலில் அடுத்த நிதி ஆண்டு க்கான வட்டி, தற்போதைய வட்டியை விட அதிகமாக இருக்கும். இருந்தா லும் அடுத்தாண்டு பிப்ரவரியில்தான் வட்டிவிகிதம் அறிவிக்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக பிஎப் கணக்கில் இருக்கும் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. பெரும்பான்மையான தொகை கடன் சார்ந்த திட்டங்களில்தான் முதலீடு செய்யப்படுகிறது. இருந்தாலும் 15 % தொகை பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யப்படுவதால் நீண்ட கால அடிப்படையில் மற்ற திட்டங்களை விட கூடுதல் வட்டி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

வரிச்சலுகை, பாதுகாப்பு

மற்ற திட்டங்களை விட வட்டி அதிகமாக கிடைக்கும் என்றாலும் இங்கு முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரிச்சலுகை வாங்கிக்கொள்ளலாம். 80சி பிரிவின் கீழ் 1.50 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யும் பிஎப்/விபிஎப் தொகைக்கு வரி விலக்கு பெற்றுக்கொள்ளலாம். இதில் முக்கியமான விஷயம் கிடைக்கும் முதிர்வு தொகைக்கும் வரி செலுத்தத் தேவையில்லை. அடுத்தது இந்த முதலீடு கூட்டு வட்டி அடிப்படையில் செயல்படுகிறது.

ஓய்வு கால நிதியை திரட்ட விரும்புவர்கள் பிஎப், இபிஎப்-ல் கவனம் செலுத்தலாம். அடுத்தது, பிஎப் மற்றும் விபிஎப் ஆகியவை பாதுகாப்பான முதலீடு. இந்த முதலீட்டு க்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் இவை மாதாந்திர சம்பளதாரர்களுக்கு மட்டுமே பயன்படக் கூடியது. இந்த முதலீட்டில் இருந்து தொடர்ந்து முறையான வருமானம் தேவை என்பவர்களுக்கு இந்த திட்டத்தால் பயனில்லை.

எளிமை

விபிஎப்-ல் முதலீடு செய்வது எளிது. எவ்வளவு தொகையை முதலீடு செய்யப்போகிறீர்கள் என்பது குறித்த தகவலை உங்கள் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். உங்கள் மாதாந்திர தொகையில் இருந்து இந்த தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும். அதேபோல எளிதாக நிறுத்தவும் செய்யலாம்.

ஆனால் வரம்புக்கு மீறி விபிஎப்-ல் முதலீடு செய்ய வேண்டாம். அதிகம் முதலீடு செய்வதினால் வீட்டுக்கு எடுத்துச்செல்லும் பணத்தின் அளவு குறையும். இதில் முதலீடு செய்துவிட்டு அன்றாட தேவைகளுக்கு கடன் வாங்குவதில் எந்த பலனும் இல்லை. தவிர உங்களது சேமிப்பு முழுவதும் கடன் சார்ந்த முதலீடாக மட்டுமே இருக்க வேண்டாம். போதுமான அளவுக்கு பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களிலும் இருக்கட்டும்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x