Last Updated : 19 Mar, 2018 10:52 AM

 

Published : 19 Mar 2018 10:52 AM
Last Updated : 19 Mar 2018 10:52 AM

தொடரும் வங்கி மோசடிகள்: தவறுகளுக்கு யார் பொறுப்பு?

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. தொடக்கத்தில் ரூ.11,500 கோடி மோசடி என்று சொல்லப்பட்டது. பின்னர் அது ரூ.12,700 கோடியாக உயர்ந்தது. தங்களிடம் என்ன தேவைக்கு நீரவ் மோடி கடன் வாங்கினாரோ அந்த தேவைக்கு கடன் தொகையைப் பயன்படுத்தவில்லை என்று சமீபத்தில் மீண்டும் சிபிஐ வசம் புதிய புகாரை அளித்திருக்கிறது பஞ்சாப் நேஷனல் வங்கி. இதனால் மொத்த மோசடித் தொகை இன்னும் எவ்வளவு உச்சத்தைத் தொடும் என்பது யாருக்கும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் மத்திய நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எல்ஓயூ எனப்படும் கடன் உறுதியளிப்புக் கடிதங்களையும் மிகச் சமீபத்தில் தடை செய்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருபுறம் இந்த காலதாமதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட, மறுபுறம் விக்ரம் கோத்தாரி, துவாரகா தாஸ் இன்டர்நேஷனல் என்று தினமும் புதிய புதிய மோசடியாளர்களின் பெயர்கள் தெரியவருகின்றன .

கோடிக்கணக்கான ரூபாய் மோசடி என்பது மக்களுக்கு இயல்பான செய்தியாக மாறிவருகிறது. வங்கி மோசடிகளால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.1.6 கோடி இழப்பு ஏற்படுவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இந்த பாதிப்பில் 89 சதவீதத்தோடு முன்னணியில் இருப்பது வழக்கம்போல பொதுத்துறை வங்கிகள் என்பதிலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஆனால் இந்த மோசடி சம்பவங்களுக்கு பொறுப்பு ஏற்பது யார் என்ற கேள்வி எழும்போது சம்பந்தப்பட்ட அமைப்புகள் அடுத்தவரைக் கைக்காட்டித் தப்பித்துக்கொள்ள முயல்கின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வெளிச்சத்துக்கு வந்ததும் உறுதியளிப்புக் கடிதங்களை நம்பி பணம் அளித்த இந்திய வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளை குற்றஞ்சாட்டியது பஞ்சாப் நேஷனல் வங்கி.

ஆனால் இந்த மோசடிக்கான முதன்மைக் காரணம் பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்ததுதான் என்பதை மறுக்க முடியுமா? மத்திய அரசாங்கமும் அடுத்தவர்மீது பழியைத் தூக்கிப் போடுவதில் மற்ற அமைப்புகளுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல என்பதை நிரூபித்தது . முந்தைய ஆட்சிதான் எல்லாத் தவறுகளுக்கும் காரணம் என்ற பழைய பல்லவியை வழக்கம்போல கூச்சமில்லாமல் பாடியது .

கடைசியாக இந்தப் பட்டியலில் வந்து சேர்ந்திருப்பது ரிசர்வ் வங்கி. பணமதிப்பு நீக்கத்தின்போது கூட வாய் திறக்காத ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் ஒருவழியாக மெளனம் கலைந்திருக்கிறார். பொதுத்துறை வங்கிகளில் நடக்கக்கூடிய எல்லா மோசடிகளையும் ரிசர்வ் வங்கியால் தடுக்க முடியாது என்ற உர்ஜித் படேலின் வாதத்தில் ரிசர்வ் வங்கியும் தனது பொறுப்பைக் கை கழுவும் தொனி இருப்பதை மறுக்க முடியாது.

யார் பொறுப்பு?

உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியை பஞ்சாப் நேஷனல் விவகாரத்தில் இருந்து காப்பாற்றும் விதத்தில் பேசியிருந்தாலும் சில முக்கியமான அமைப்புச் சிக்கல்களை அடையாளம் காட்டியிருக்கிறார். ரிசர்வ் வங்கியின் அதிகார பரவலாக்கம் குறித்த அவர் கேள்விகள் குறிப்பிடத்தக்கவை. 1949-ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைகள் சட்டப்படி இந்திய வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்குகின்றன. ஆனால் 1970-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வங்கி நிறுவனங்கள் சட்டத்தின்படி இந்திய பொதுத்துறை வங்கிகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இந்திய அரசாங்கமும் பெற்றிருக்கிறது.

வங்கி ஒழுங்குமுறைகள் சட்டத்தின் எந்தப் பிரிவுகள் பொதுத்துறை வங்கிகளுக்கு பொருந்தும் என்பதை அந்த சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் விவரிக்கின்றன. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகள் மீதான ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் பொதுத்துறை வங்கியின் இயக்குநர்களையோ, வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர்களையோ ரிசர்வ் வங்கியால் நீக்கமுடியாது.

வங்கி நிர்வாகக் குழுவில் எந்த ஒரு மாற்றத்தையும் ரிசர்வ் வங்கியால் செய்ய முடியாது. பொதுத்துறை வங்கிகளின் தலைவரையோ, நிர்வாக இயக்குநரையோ ரிசர்வ் வங்கியால் ஒன்றும் செய்யமுடியாது. சில வேளைகளில் ஒரு வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், தலைவராகவும் ஒருவரே இருந்து அவருக்கு அவரே பதில் சொல்லக்கூடிய வாய்ப்புகளும் இந்த முறையில் உள்ளன. இவர்களை நியமிப்பதற்கான மற்றும் நீக்குவதற்கான எல்லா அதிகாரங்களும் இந்திய அரசாங்கத்திடம் உள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் மோசமான நிலைமைக்கான காரணங்களில் ஒன்றாக அதனுள் செயல்படும் அரசியல் குறுக்கீடுகளைச் சொல்லலாம். பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், தலைவர்களை நியமிப்பதற்கான ஆலோசனைகளை சொல்வதற்குமான சுயாட்சி அமைப்பாக வங்கி வாரியக் குழுவை 2016-ம் ஆண்டு அமைத்தது இப்போதைய பாரதிய ஜனதா அரசாங்கம். அதன் தலைவராக நியமிக்கப்பட்டார் முன்னாள் தலைமைக் கணக்காயர்களில் ஒருவரான வினோத் ராய்.

பொதுத்துறை வங்கிகளின் அமைப்புகளுக்கு சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவின் தலைவரே சரியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது காங்கிரஸ். 2ஜி அலைவரிசை குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காகவே சட்ட விதிமுறைகளை மீறி வினோத் ராய் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னது காங்கிரஸ். இந்திய வங்கித் துறையில் அரசியல் விளையாடியது. கடைசியாக இப்போது வங்கி வாரியக் குழுவின் நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவு இல்லையெனவும் அது கலைக்கப்பட வாய்ப்புகள் உண்டு எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வங்கித் துறையில் தேவையற்ற குறுக்கீடுகளை ஏன் ஒரு அரசாங்கம் செய்யவேண்டும், இதை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைப்பதிலிருந்து அரசைத் தடுப்பது எது என்பன போன்ற கேள்விகள் முக்கியமானவை. அரசியல் சுய லாபங்களுக்காக பொருளாதாரத்தை பலி கொடுப்பதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள முடியும்? ரகுராம் ராஜன் போல அதிரடியானவர் அல்லாத மென்மையான உர்ஜித் படேலையே இந்தப் பிரச்சினை கோபம் கொள்ளச் செய்திருப்பதிலிருந்து இதன் தீவிரத்தை உணரலாம்.

அதே வேளையில் ரிசர்வ் வங்கி கவர்னர் நியமனத்தில் இருக்கும் அரசியலையும் சுலபத்தில் புறந்தள்ளிவிட முடியாது. ரிசர்வ் வங்கியை தனது கைப்பாவையாக வைத்துக்கொள்ள அரசு நினைப்பதால் ஏற்படும் விளைவுகளின் தழும்பு அவ்வளவு சீக்கிரத்தில் மறைந்துவிடாது.

வங்கி அமைப்புமுறைகளில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து பேசுகிற அதேவேளையில் வங்கிப் பணியாளர்களிடம் நிலவும் தொழில் அறமின்மை பற்றியும் பேச வேண்டியது கட்டாயமாகிறது. 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மோசடி குற்றங்களில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் ஒவ்வொரு நான்கு மணிநேரத்துக்கும் ஒரு வங்கி ஊழியர் மோசடியில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடிக்கான விதை நீரவ் மோடியால் போடப்பட்டதென்றால் அதை மரமாக்கி வளர்த்த பெருமை பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்களையே சேரும்.

அரசு அமைப்புகளில் இணையும் ஊழியர்களின் மனமாற்றத்திற்கான காரணங்கள் என்ன, இதற்கான அடிப்படைச் சிக்கல் சமூக அமைப்பின் பொருளாதார கொள்கைகளில் மறைந்திருக்கிறதா, அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தும் ஆழமாக சிந்திக்கவேண்டி இருக்கிறது. இடர் மேலாண்மை முறைகளை மேம்படுத்துவதன் மூலம் மட்டும் இந்த மோசடிகளை தடுத்துவிட முடியாது.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வெளிவந்ததும் அது குறித்து கருத்து தெரிவித்த பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் தங்களது ஊழியர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பணிமாற்றம் செய்வதாகவும் இத்தகைய முறைகளை மற்ற வங்கிகளும் கடைப்பிடிக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார். ஆனால் ஊழியர்கள் வங்கி மோசடிகளில் ஈடுபடுவது குறித்த ரிசர்வ் வங்கி புள்ளிவிபரத்தில் பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் இருப்பது நகைமுரண்.

அதிகார பரவலாக்கம் குறித்து உர்ஜித் படேல் முன்வைக்கக்கூடிய அதே கருத்துகளைத்தான் சர்வதேச செலாவணி நிதியத்தின் இணை நிர்வாக இயக்குநர் தாவோ சாங்கும் முன்வைக்கிறார். ஆனால் தனது அதிகார எல்லைக்குள் நின்று செயல்படுத்தக்கூடிய அதிகாரங்களை எந்த அளவுக்கு ரிசர்வ் வங்கி பயன்படுத்தியது? 2016-ம் ஆண்டிலேயே சைபர் குற்றங்களைத் தடுப்பது குறித்த மூன்று அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுத்ததாகச் சொல்லும் உர்ஜித் படேல் அது எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறித்து கவனிக்காமல் ரிசர்வ் வங்கி மெளனம் காத்ததை வசதியாக மறந்துவிடமுடியாது.

சாதாரண வங்கி ஊழியரிலிருந்து ரிசர்வ் வங்கி கவர்னர், நிதி அமைச்சர் வரை வங்கி மோசடிகளுக்கு பொறுப்பேற்க வேண்டியது அவசியம். பொறுப்பேற்பது என்பது ஒருபோதும் ஒருவரை குற்றவாளியாக ஆக்கிவிடுவதில்லை. தயக்கமற்ற சுய பரிசோதனைகள் மூலம் மாற்றங்கள் குறித்து வெளிப்படையாக விவாதிப்பதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும்தான் இந்திய வங்கித் துறைக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் இனிவரும் காலங்களில் நன்மை பயக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x