Last Updated : 19 Mar, 2018 10:51 AM

 

Published : 19 Mar 2018 10:51 AM
Last Updated : 19 Mar 2018 10:51 AM

சபாஷ் சாணக்கியா: ரிஸ்க் எடுக்காட்டா.... பெரிய ரிஸ்க்!

கடந்த புதன்கிழமை ஆங்கிலேய விஞ்ஞானி ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் உயிரிழந்த பொழுது, அந்தச் செய்தியை வெளியிட்ட சில ஊடகங்கள், அவர் வானத்தில் ஒரு நட்சத்திரமாகி விட்டதாகக் குறிப்பிட்டன. சரிதானே? அண்டவியலை ஆராய்ந்தவரை, அதன் கருந்துளை ( black holes) ஆழங்களை `அளந்தவரை ’ வேறு எப்படிச் சொல்வது?

1942-ல் ஆக்ஸ்போர்டு நகரில் பிறந்த இவர், தனது அண்ட ஆராய்ச்சிகளைத் தொடங்கியது 1962-ல் ,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில். முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச்சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் மூலம் விளக்கினார். அண்டங்களின் ரகசியங்களை விண்டவர் என்பதால், இவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போலப் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

`காலத்தின் வரலாற்றுச் சுருக்கம்' (A brief history of time) எனும் இவரது நூல் 1988-ல் வெளிவந்து ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளதாம். 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளதாம்! விஞ்ஞானக் கோட்பாடுகளை, விஞ்ஞானிகளாக இல்லாத சாதாரண மக்களுக்கும் புரியும்படி சொல்வதில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர் இவர். எனவே தனது கோட்பாடுகளை, அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம், 26 மணி நேரம் ஓடக் கூடிய பாடத் திட்டமாக உருவாக்கிக் கொடுத்தார். இது 2000 ஆண்டு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால், ஒரு கோடி ரூபாய் செலவில், தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இப்படித் தனது 20 வயது முதல் ஆராய்ச்சியில் இறங்கி அரும்பெரும் சாதனைகள் புரிந்த இவர், தனது 21 வயது முதல் கை, கால் முதலிய உடல் இயக்கங்கள் பாதிக்கப் பட்டவர் என்றால் நம்ப முடிகிறதா? Amyotrophic Lateral Sclerosis எனும் கொடிய நரம்பு நோயால் தாக்குண்டவர் இவர். குணப்படுத்த முடியாத இந்நோயால் பேச்சையும் இழந்தவர். கணிணி மூலமாக பேச்சுத் தொகுப்பு மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தவர்.

அவர் தனது நோயை, இல்லை,நோய்களை, உடல் ஆற்றாமைகளை, ஒரு பொருட்டாகவே கருதவில்லை. `நம்மால் முடியுமா என்றெல்லாம் கவலைப்படாமல் தன் வழியே அடுத்தடுத்து தன் விஞ்ஞான சாதனைகளைச் செய்து கொண்டே இருந்தார். அவரது கண்டுபிடிப்புக்களைப் போலவே அவரது வாழ்க்கையும் நம் எல்லோருக்கும் ஒரு நல்ல படிப்பினை.

சமீபத்தில் ஒரு மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.`கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்பதற்கு புது விளக்கம் தந்தார் அவர். அதாவது ஒரு பணியைச் செய்யும் பொழுது `அதைச் சரியாய்ச் செய்கிறோமா, நம்மால் ஒழுங்காய்ச் செய்து முடிக்க முடியுமா, எது எதிர்பார்த்தபடி அமையுமா’ என்பது போன்றவற்றை நினைக்கக் கூடாதாம். அப்படி நினைப்பதால் வேலையில் கவனம் சிதறும். அது வேலையைச் சிறப்பாகச் செய்வதைப் பாதிக்கும்.மொத்தத்தில் கிடைக்கவேண்டிய பலன் கிடைக்காதல்லவா?

வேறு சிலர் இருக்கிறார்கள். எதிலுமே ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு சென்னையில் வெகு காலம் வசித்த எனது உறவினர் ஒருவர், பணி நிறைவு பெற்றதும், இனி திருச்சி போன்ற ஒரு சிறிய நகரத்திற்குக் குடும்பத்துடன் மாறிச் சென்று விடலாமா என யோசித்தார். பல காலம் யோசித்தார். ஆனால் முடிவு செய்ய முடியவில்லை. உங்களுக்குத் தான் தெரியுமே . முடிவு எடுக்காமல் இருப்பதுதானே எளிது? ஆனால் அதன் உண்மையான பாதகங்கள் பல அல்லவா?இடம் மாறாததால் அவர் இழந்தது எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டுமல்லவா? அதனால் தான்,வியாபாரத்திலும் சரி ,வாழ்க்கையிலும் சரி, ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே பெரிய ரிஸ்க்!

மேலும், எதையும் செய்வது என முடிவெடுத்த பின்னர், அதனை ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் செய்வது தானே நல்லது?உங்களுக்கு மும்பையில் இளநீர் சாப்பிட்ட அனுபவம் உண்டா? நடைபாதையில், கடற்கரையில் இளநீர் விற்பவர்கள் அதைச் சீவும் அழகே அழகு! மேற்பக்கத்தை மட்டுமல்ல, அடிப்பக்கத்தையும் கையில் பிடித்துக் கொள்ள, வைத்துக் கொள்ள வாகாக, சதுரமாக வெட்டித் தருவார்கள். ஆனால் க்ளைமாக்ஸ் என்ன தெரியுமா? கூம்பாக வெட்டிய மேற்பாகத்தில், கூரிய அரிவாளால், அவர் சீவும் அந்தக் கடைசி வெட்டு தான்! 10,12 செ மீ விட்டத்தில் உள்ளே இளநீர் தளும்புவதைப் பார்த்து அதைக் குடிக்கு முன்பே குளிர்ச்சி அடைவீர்கள்!

தம்பி, செய்யும் பணியை நேர்த்தியாகச் செய்வது என்பது சிலரது குணம். அதை ஒவ்வொரு முறையும் அனுபவித்து, ஆர்வமாகச் செய்வது அவர்களது இயல்பு. அவர்கள் அதில் அடையும் மகிழ்ச்சி ஒப்பில்லாதது.மற்றவர்களால் கொடுக்க முடியாதது!

`ஒரு பணியைச் செய்யத்தொடங்கிய பின், தோல்வியைகுறித்துப் பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தம் பணியைச் செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்’ என்கிறார் சாணக்கியர்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x