Last Updated : 05 Mar, 2018 11:56 AM

 

Published : 05 Mar 2018 11:56 AM
Last Updated : 05 Mar 2018 11:56 AM

சபாஷ் சாணக்கியா: தீ பிடித்து விட்டால்...

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். தரைத் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பார்வையாளர் நேரம் தொடங்குவதற்காகக் காத்திருந்தேன். அருகிலேயே அவசர சிகிச்சைப் பிரிவு. காவலாளி நம்ம ஊர் அரசியல் பற்றி பேசிக் கொண்டிருந்தார். தேநீர் அருந்தி விட்டுத் திரும்பிய இரு செவிலியரும், ஓர் உதவியாளரும் விவாதத்தில் சேர்ந்து கொண்டு விட்டனர்.

2021-ல் யார் ஆட்சி நடக்குமெனக் காரசாரமான வாக்குவாதம்! அப்பொழுது வெளியில் ஓர் ஆம்புலன்ஸ் வேகமாக வந்து நின்றது. கதவைத் திறந்தார்கள்.உள்ளே 30 வயது மதிக்கத்தக்க இளைஞருக்கு நெஞ்சை மிக வேகமாக, பலமாக அமுக்கிக் கொண்டிருந்தார்கள்.

அவ்வளவுதான். இதைப் பார்த்ததும் அங்கிருந்த காட்சி மின்னல் வேகத்தில் மாறியது. காவலாளி அவசர மணியை அழுத்தினார். மற்றொருவர் உள்ளே மருத்துவரை அழைக்கப் பாய்ந்தார். செவிலியரும் உதவியாளரும் ஸ்டெரச்சருடன் வந்து விட்டனர். நோயாளியின் நெஞ்சை அமுக்கிக் கொண்டிருந்தவரையும் ஸ்டெரச்சரிலேயே வைத்துத் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடினர். அவ்வப்போது கதவு திறக்கப்படும் பொழுது உள்ளே நடப்பது தெரிந்தது. அந்த நோயாளியைச் சுற்றி 8 பேர். ஒருவர் ரத்தம் எடுக்க, ஒருவர் ஊசி போட, ஒருவர் மானிட்டர்களை மாட்ட என வேகவேகமாக, ஆனால் எந்த விதக் குழப்பமும் இன்றி செயலாற்றிக் கொண்டிருந்தனர்.

மருத்துவர் ஒருவர் ஆணையிட மற்றவர்கள் அவற்றையெல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.திடீரென பரபரப்பு அதிகமாகியது. இஸ்திரிப் பெட்டி போன்ற உபகரணத்தை வைத்து மின்சார ஷாக் கொடுக்க , அந்த ஆள் படுக்கையில் எம்பி எம்பி எழுந்து விழுவது தெரிந்தது.

அரை மணி நேரத்தில் நிலைமை சீரானதும், நோயாளி பிழைத்துக் கொண்டது தெரிந்தது. பின்னர் விசாரித்ததில், அந்த இளைஞருக்கு முதல் நாள்தான் கல்யாணமென்றும், மருத்துவமனைக்கு வருவதற்கு கொஞ்சம் நேரமாகி இருந்தாலும், சிகிச்சையில் தவறோ தாமதமோ ஏற்பட்டிருந்தாலும் அவரைக் காப்பாற்றி இருக்க முடியாது என்றார்கள். மரண த்தின் வாயிலிருந்து மீட்கப்பட்டவரின் மனைவி அந்த மருத்துவமனைப் பணியாளர்களுக்கு கண்ணீரை மாலை மாலையாய்ச் சிந்தி நன்றி கூறிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன், நெகிழ்ந்தேன். இது போன்று நீங்களும் அனுபவப் பட்டிருப்பீர்கள். பல சமயங்களில் உடனடி நடவடிக்கை தேவைப்படும். ஒரு கட்டிடத்தில் தீ பிடித்து விட்டால் மக்கள் வெளியேற்றப்படுவதும், தீ அணைக்கப்படுவதும் அவசர அவசரமாகச் செய்யப்பட வேண்டியவை.ஒவ்வொரு நொடி காலதாமதமும் பேரிழப்புக்கு வழிவகுத்து விடும்!

அலுவலகங்களிலும் வீடுகளிலும் இதே கதை தானே. அவசரமான பிரச்சினைகளில் உடனடியாக கவனம் செலுத்தவில்லை என்றால் விஷயம் கையை மீறிப் போய் விடுமே! உதாரணமாக, ஒருவர் வங்கியில் மோசடி செய்பவர் எனத் தெரிந்தால், அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்தால்தானே மேலும் பாதகம் வராமல் தடுக்கலாம்? இதனால் தானே நம்ம வள்ளுவர், தீயவை தீய பயத்தலால் அவற்றிடம் தீயைக் காட்டிலும் அஞ்ச வேண்டும் என்றார்! இல்லாவிட்டால் தீய செயல்கள் தீயைப் போலவே வேகமாகப் பரவி எல்லாவற்றையும் நாசமாக்கி விடுமே? கிரெடிட் கார்டோ, டெபிட் கார்டோ தொலைந்தால், உடனே வங்கிக்குத் தெரிவித்தால் தானே அவற்றை முடக்கி மோசடிகளைத் தவிர்க்க முடியும்?

ஒரு காரியம் அவசரமானது என்றால் என்ன செய்ய வேண்டும்? அக்காரியத்தை அதற்கான முக்கியத்துவத்துடனும், கவனத்துடனும் காலதாமதமின்றி அணுக வேண்டும்' என்பார் ரிச்சி நார்ட்டன் எனும் எழுத்தாளர். இந்த நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி வங்கி மோசடியில், எது எப்படியிருந்தாலும், சிபிஐயும் அமலாக்கத் துறையும் செயல்பட்ட வேகம் பாராட்டுதலுக்குரியது.

முன்னர் சுமார் ரூ. 6500 கோடிக்கு மேல் சொத்துக்கள் முடக்கவோ பறிமுதலோ செய்யப்பட்டதாகப் படித்தோம்.கடந்த வியாழனன்று சோக்ஸி நிறுவனங்களின் 41 சொத்துக்கள் புதிதாக முடக்கப்பட்டுள்ளனவாம். அவற்றின் மதிப்பு ரூ1,217 கோடியாம்.

அதையெல்லாம் விடுங்கள். ஒரு நாள், எங்கள் கிராமத்து வீட்டில் தேள் ஒன்று பரணியிலிருந்து கீழே விழுந்து வேகமாக ஓடியது. அதை அடிப்பதற்கு ஒருவர் செருப்பைத் தேட, மற்றொருவர் துடைப்பம் எடுக்க ஓடினார்.ஆனால் அங்கிருந்த சிறுவனோ பக்கத்தில் இருந்த கனத்த புத்தகத்தை எடுத்து ஒரே போடாய்ப் போட்டான்.

அது செத்தது, நாங்கள் பிழைத்தோம். `அரசன் , எந்த ஓர் அவசர விஷயத்தையும், உடனே கையாள வேண்டும். இல்லாவிட்டால், அதைச் சரி செய்வது பின்னர் கடினமானதாகவும், ஏன் முடியாததாகவும் கூட ஆகி விடும் ' என்கிறார் சாணக்கியர்! இந்த அவசரத்தின் அவசரத்தை அறிந்து செயல்பட்டால் அவதியிருக்காது.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x