Published : 18 Feb 2019 11:22 AM
Last Updated : 18 Feb 2019 11:22 AM

ஸ்டார் ரேட்டிங்கும் நூதன மோசடியும்

ஒரு நாள் ஹெவன் மெக்ஹீகன் என்ற அமெரிக்க பெண்ணிற்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. அதில் சில ஹேர் க்ளிப்புகள் இருந்தன. அட்ரஸ் சரி. பார்சலும் பக்கா. க்ளிப்பும் அவருக்கு பிடித்த கலர். ஒரே ஒரு பிராப்ளம். அவர் ஆர்டர் செய்யவில்லை!

தப்பாக வந்திருக்கும் என்று விட்டுவிட்டார். அடுத்த நாள் அதே கூரியர். அதே பார்சல். அதே ஹேர் க்ளிப். அதற்கு அடுத்த நாளும். இப்படியே ஒரு வாரம் வர ஹெவனுக்கு சந்தேகம். தன் பெயர் ஹெவன் என்பதால் எதுகை மோனையில் செவன் க்ளிப்புகள் அனுப்புகிறார்களோ என்று. யாருடைய கைங்கர்யம் இது? தன்னை கரெக்ட் செய்ய பார்க்கிறார்களா? வெறும் க்ளிப் கொடுத்தா? அத்தனை சல்லிசாகப் போய்விட்டோமா?

வந்த பார்சல்களைத் தேடிய போது அவை சீனாவிலிருந்து வந்திருப்பது தெரிந்தது. சீனாவில் அவருக்கு யாரையும் தெரியாது. சொல்லப் போனால் அவருக்கு சீனா எங்கிருக்கிறது என்பதே தெரியாது. சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் பிடிக்கும். அதை விட்டால் அவருக்கும் சீனாவுக்கும் ஸ்நானப் பிராப்தி கூட இல்லை. யார் வேலை இது?

ஹெவனுக்கும் உங்களுக்கும் ப்ரஷ்ஷிங் பற்றி விளக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் ஏதோ ஒரு ஈ-காமர்ஸ் சைட்டில் ஏதோ ஒன்று வாங்கியிருப்பீர்கள். வாங்காமல் இருந்தாலும் உங்கள் பெயர், அட்ரஸ் இன்ன பிற விஷயங்களை சில இன்டர்நெட் கம்பெனிகள் பெற்று உங்கள் ப்ரொஃபைல் ஒன்றை உருவாக்கும். அதைக்கொண்டு தங்கள் சைட்டில் விற்கப்படும் பொருட்களைப் பற்றி நீங்கள் ஆஹா, ஓஹோ என்று சிலாகித்து எழுதுவதுபோல் அவர்களே எழுதி பதிவு செய்வார்கள். நான்தான் வாங்கவில்லையே என்பீர்கள். அது உங்களுக்கு தெரியும்.

ஆனால் சில பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்ததே. அதன் மூலம் உங்களுக்கு ‘வெரிஃபை பர்சேஸர்’ அதாவது ‘சரிபார்க்கப்பட்ட வாடிக்கையாளர்’ என்ற சர்டிஃபிகேட் தரப்பட்டுவிடும். உங்களை போல் பத்து பேரின் ப்ரொஃபைல் போல் செட்டப் செய்து சைட்டிலுள்ள பொருளுக்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங் தந்து அதைப் பற்றி நல்லவிதமாக எழுதுவது போல் செய்வார்கள். அந்த சைட்டிற்கு வருபவர்கள் ‘இத்தனை பேர் சொல்கிறார்கள் என்றால் நல்ல பொருளாக இருக்கும்’ என்று நம்பி வாங்குவார்கள்.

நாம் தான் கூட்டமான கடையே நல்ல கடை, நிரம்பி வழியும் ஹோட்டலே பெஸ்ட், ஜெயிக்கும் கட்சிக்கே என் ஓட்டு என்று கூறும் வர்க்கம் ஆயிற்றே. கேட்கவேண்டுமா! ஏதோ இந்த மட்டும் ஹெவனுக்கு அட்லீஸ்ட் ஹேர் க்ளிப்பாவது அனுப்பினார்கள் சீனாக்காரர்கள். பலருக்கு காலி பார்சல்தான் வருகிறதாம். உள்ளே பெப்பே தானாம். அதனால் என்ன, பார்சல் பெற்றவர் வெரிஃபைட் கஸ்டமர் ஆகிறாரே. அவர் பெயரில் அந்த பொருளுக்கு அர்ச்சனை செய்து மற்றவர் தலையில் மிளகாய் அரைக்கலாமே!

ஹேர் க்ளிப் என்றில்லை. ஏதோ ஒரு பொருள் அனுப்பினால் கூட போதும். அதை பெறும் வாடிக்கையாளர் சர்டிஃபைட் பட்டம் பெறுவதால் அவர் பெயரில் ஸ்டார் ரேட்டிங் தந்து பிரமாதமான பொருள் என்று எழுதும் போது அவர் ரெவ்யூவிற்கு ஒரு தனி அந்தஸ்து கிடைத்துவிடுகிறது.

ஏன், இப்படி ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறார்கள்? ஈ-காமர்ஸ் கம்பெனிகள் தங்கள் சைட்டில் விற்கும் பொருட்களை ரேங்க் செய்ய உபயோகிக்கும் அல்காரிதம்தான் காரணம். தங்கள் சைட்டுகளில் பொருளை விற்பவர்களின் விற்பனை அளவு, பொருளை வாங்குபவர்கள் அதற்கு தரும் ஸ்டார் ரேட்டிங், பாசிடிவ் ரெவ்யூ போன்றவை மூலம் பொருட்களை ரேங்க் செய்கிறார்கள். அதிக ஸ்டார் ரேட்டிங், நல்ல ரெவ்யூவாக இருந்தால் அப்பொருட்கள் லிஸ்ட்டில் முன்னிறுத்தப்படுகின்றன.

மற்ற பொருட்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. பார்ப்பவர் கண்ணிலிருந்து தப்புகின்றன. அது மட்டுமல்ல. சைட்டில் பொருள் வாங்குபவர்களும் அதிக ரேட்டிங், சிறந்த ரெவ்யூ உள்ள பொருட்களைத் தான் நம்பி வாங்குகிறார்கள். அதனால் தங்கள் பொருட்களை முன்னுக்கு தள்ளி, மக்கள் மனதில் முதன்மையாய் தெரிய பல விற்பனையாளர்கள் இந்த ப்ரஷ்ஷிங் டெக்னிக்கை பயன்படுத்துகிறார்கள்.

இத்தனைக்கும் அமெரிக்க ஃபெடரல் டிரேட்கமிஷன் விதிப்படி ப்ரெஷ்ஷிங் சட்டபடி குற்றம். அமேஸான் கூட இவ்வகை கம்பெனிகளை கண்டுபிடிக்க என்னென்னவோ செய்கிறது. ப்ரெஷ்ஷிங் செய்யும் கம்பெனிகளை தன் சைட்டிலிருந்து தடை செய்கிறது.

பல்கலைக்கழகம் ஒன்று ஒரு ஆய்வு செய்தது. ப்ரஷ்ஷிங் செய்து விற்க முயன்ற சுமார் நாலாயிரம் பொருட்களை கூர்ந்து கவனித்தபோது அப்பொருட்களின் ரேங்கிங் பத்து தரம் அதிகரித்ததை கண்டனர். இதை செய்ய பெரிய ரிஸ்க் இல்லையாம். நாலாயிரம் பொருட்களில் எண்பத்தி ஒன்பது பொருட்கள் மட்டுமே ஈ-காமர்ஸ் கம்பெனிகளிடம் மாட்டிக்கொண்டனவாம். அதாவது 2.2%. ஜூஜூபி!

அமெரிக்க கம்பெனி என்றாலாவது பிடிக்கலாம். வெளிநாட்டு கம்பெனிகள் செய்தால் எப்படி கண்டுபிடிப்பது? பிடித்தாலும் என்ன தண்டனை தருவது? சீனாவிலிருந்து ஹேர் க்ளிப்புகள் அனுப்பும் காரணம் இதுவே. ஹேர் க்ளிப் என்ன, ஹெலிகாப்டரைக் கூட அனுப்பி ப்ரஷ்ஷிங் செய்வார்கள் சீனாக்காரர்கள்.

பொருள் விற்பதில் தான் இவ்வகை தில்லாலங்கடி என்றில்லை. ப்ரஷ்ஷிங்கிற்கு தம்பி தங்கைகள் உண்டு. அதில் ஒன்று சாக் பப்பெட்டிங். ஒருவரே இன்னொருவர் பெயரில் தன்னை பற்றி எழுதுவது. பதிப்பகத் துறையில் இது பிரபலம். ஒரு புத்தகத்தின் ஆசிரியரே இன்னொருவர் பெயரில் தன் புத்தகத்தை ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து எழுதும் தலையெழுத்து தான் சாக் பப்பட்டிங். இது பல நாடுகளில் நடக்கும் கூத்து என்றாலும் இன்டர்நெட் வந்தது சிலருக்கு வசதியாகிவிட்டது.

‘என்ன அருமையான புத்தகம்’ என்பது முதல் ‘இதை வாங்கிப் படிக்காமல் இருப்பவன் மடையன்’ என்பது வரை அப்புத்தகத்தின் ஆசிரியரே நெட்டில் வேறு பெயர்களில் எழுதி புத்தகத்தை ப்ரமோட் செய்கிறார்களாம். சகட்டுமேனிக்கு பலர் செய்வதாய் கேள்வி. செய்து மாட்டிக்கொண்டு தெரியாமல் செய்தேன் என்று மன்னிப்பு கேட்ட ஆசிரியர்களும் உண்டு. சரியாய் செய்யாமல் மாட்டிக்கொண்டேன் என்று இதற்கு பொருள் காண்க!

தன் புத்தகத்தை தானே ரெவ்யூ செய்யவேண்டும் என்றில்லை. வேண்டாதவர் புத்தகத்தை நெகடிவ் ரெவ்யூ செய்யவும் முடியும். செய்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் எழுதிய What Happened என்ற புத்தகம் வெளியான ஒரு சில மணி நேரத்திற்குள் அமேஸானில் ஏகப்பட்ட பேர் அப்புத்தகம் குப்பை என்று ஒரு ஸ்டார் ரேட்டிங் தந்தார்கள்.

புத்தகத்தை ஆர்டர் செய்யும் நேரத்திற்குள் எப்படி இத்தனை கேவலமான ரேட்டிங் என்று ஆராய்ந்த அமேஸான் அவை பெரும்பாலும் ஃபேக் ரெவ்யூ என்று தெரிந்து அத்தனை ரெவ்யூக்களையும் டெலிட் செய்தது. ஒரு சில மணி நேரத்திற்குள் ஒரு சில ஆயிரம் ரேட்டிங் வந்தது என்றால எப்படி கூத்தடித்திருக்கிறார்கள் பாருங்கள்!

இந்த கண்றாவிக்கு ரெவ்யூ ப்ரஷ்ஷிங் என்ற இன்னொரு பெயரும் உண்டு. சென்ற வருடம் லண்டன் நகரிலுள்ள ஊபா பட்லர் என்பவர் இதை நமக்கு தெளிவாக படம் வரைந்து பாகங்களை குறிப்பிட்டு காட்டினார். தன் கார் ஷெட்டிற்கு ‘ஷெட் ஹோட்டல்’ என்று பெயர் வைத்து டேபிளில் பீங்கான் தட்டு, ஸ்பூன் இத்யாதிகளுடன்... நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஷேவிங் க்ரீம், பாத்திரம் கழுவும் சோப் போன்றவற்றை சாப்பாடு ஐடங்கள் போல் வைத்து ஃபோட்டோ எடுத்து ஹோட்டல்கள் பற்றி எழுதும் ஒரு பெரிய வெப்சைட்டில் பதிவு செய்தார்.

 பின் அவரே பல பெயர்களில் அந்த சைட்டில் ஏகப்பட்ட ரெவ்யூக்கள் எழுதினார். நான்கு வாரத்திற்குள் ஊரிலேயே அதிகமாக ரேட்டிங் செய்யப்பட்ட ஹோட்டலாகிவிட்டது. இதில் இன்னொரு வேடிக்கை உண்டு. இல்லாத அந்த ஹோட்டலில் சாப்பாடு சரியில்லை என்று கூட ஒரு பிரகஸ்பதி ஒரு ஸ்டார் மட்டும் தந்திருந்தார். யாராக இருக்கும்? வேறு யார், அதிக ரேட்டிங் பெறுகிறதே என்று வயித்தெரிச்சல்பட்ட ஏதோ ஒரு போட்டி ஹோட்டல் ஓனர் தான்!

ஆன்லைனே இப்படி தான் என்று குறை கூறாதீர்கள். சினிமா விமர்சனம் முதல் ஹோட்டல் ரெவ்யூ வரை நம்மூரிலும் இது போன்ற தகிடுதத்தங்களுக்கு குறைவில்லை. எங்கள் படம் உங்கள் படத்தை விட அதிகம் சம்பாதித்தது, உங்கள் படத்தை விட எங்கள் படத்திற்கு கூட்டம் அதிகம் என்று ஒரு க்ரூப் எழுத, அதை இன்னொரு குழு எதிர்த்ததே, அதை எந்த லிஸ்ட்டில் கொண்டு போய் சேர்ப்பது. தியேட்டருக்குப் போய் பார்த்தால் தானே உண்மை தெரிகிறது!

இனியும் சினிமா முதல் டிவி சீரியல் வரை ஆன்லைன் ஆஃபர் முதல் ஆஃப்லைன் சாமான் வரை யாராவது எதையாவது ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருந்தால் ஒரு முறைக்கு இரு முறை விசாரியுங்கள். ‘மாப்பிள்ளை ரொம்ப நல்லவர், அவரே சொன்னார்’ என்பது போல் ப்ரஷ்ஷிங் செய்வதை பல்லை இளித்துக்கொண்டு வாங்கித் தொலைக்காதீர்கள்.

- satheeshkrishnamurthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x