Last Updated : 27 Aug, 2018 12:40 PM

 

Published : 27 Aug 2018 12:40 PM
Last Updated : 27 Aug 2018 12:40 PM

எப்பொழுது மீண்டெழும் கடவுளின் தேசம்?

ஆகஸ்ட்-8 கேரள மக்களால்  இனி ஒருபோதும் மறக்கமுடியாத நாள். அவர்களுக்கு எப்பொழுதும் பிரியமான, உற்ற தோழனாக இருந்த மழை 10-க்கும் மேற்பட்ட நாட்களுக்கு தயவுதாட்சண்யமின்றி அவர்களை வஞ்சிக்க ஆரம்பித்தது அன்றிலிருந்துதான்.

இந்திய தேசிய சராசரியைவிட 60 சதவீதம் அதிகமான தனிநபர் வருமானம் கொண்ட மாநிலத்தின் மக்கள், தங்கள் கண்முன்னே தங்களது வீடுகள் சுக்குநூறாகிப் போவதைக் கண்டார்கள். உயிருக்குயிராக நேசித்த மனிதர்களும், ஆடுகளும், மாடுகளும், நாய்களும், பூனைகளும் இறந்து மிதப்பது ஒரு துர்கனவாக இருக்கக்கூடாதா என ஏங்கினார்கள்.

கடவுளின் சொந்த தேசத்தை கடவுளர்களே கைவிட்ட அந்த துயரம் தோய்ந்த நாளில், இயற்கையின் பேராற்றலுக்கு முன்னால் தோற்று மண்டியிடாமல் தொடர்ச்சியாக போராடவேண்டிய மன உறுதியை மக்கள் உடனடியாக பெறவேண்டியிருந்தது. ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற பேதமின்றி மனிதர்கள் என்ற ஒற்றைச் சொல்லின்கீழ் தலைவர்களும், மக்களும் களத்தில் இறங்கி செயல்பட்டார்கள்.

அந்த மனித ஆற்றலின் மன்றாடலுக்கு இயற்கை இறுதியாக மனம் இரங்கி கருணை காட்டியபொழுது ரூ.20,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது. இழப்பீடாக ரூ.600 கோடியை மட்டும் தற்போதைக்கு அளித்திருக்கிறது மத்திய அரசு.

1924-ம் ஆண்டுக்குப் பிறகு கேரளத்தை தாக்கியிருக்கும் இந்த பேரிடரால் சுமார் 370 பேர் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். 80,000 பேர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். 5,645 நிவாரண முகாம்களில் சுமார் 2,23,000 பேர் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 2.8 சதவீத மக்கள் தொகையை மட்டுமே கொண்டிருந்தாலும், இந்திய பொருளாதாரத்துக்கு 4 சதவீதம் அளவுக்கு பங்களிக்கிறது கேரளம்.

ஆனால் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரள மாநில ஜிடிபியில் 1 சதவீதம் அளவுக்கு இந்த மழை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறது சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஒரு அறிக்கை.

விவசாய பாதிப்புகள்

கேரள மாநில வளர்ச்சியில் 12.75 சதவீதம் அளவுக்கு விவசாயம் முக்கிய பங்காற்றி வருகிறது. நெல், ரப்பர், தேங்காய் போன்றவை இந்த மாநிலத்தின் முக்கிய விவசாய விளைபொருட்களாக இருந்து வருகின்றன. நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் கேரளாவின் பங்களிப்பு 92 சதவீதமாக உள்ளது. ஆனால் ரப்பர் உற்பத்தியில் முக்கிய மாவட்டங்களான கோட்டயம், பதனம்திட்டா போன்றவை மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரப்பர் உற்பத்தி மறுபடியும் எப்பொழுது தொடங்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து ரப்பர் விலை கடந்த ஆகஸ்ட் 18 அன்று 92 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் விளைவுகள் இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்துள்ளன. முக்கிய மூலப்பொருளாக ரப்பரைப் பயன்படுத்தும் அப்பல்லோ டயர்ஸ், எம்ஆர்எஃப், ஜேகே டயர்ஸ் போன்ற டயர் துறை சார்ந்த பங்குகள் 10 சதவீதம்வரை சரிவை சந்தித்துள்ளன.

பேராம்பரா மற்றும் கலமசேரியில் உள்ள அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் உற்பத்தியகங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ரூ.430 கோடி அளவுக்கு ரப்பர் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்யும் குட்டநாடு பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வயநாடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களால் கருமிளகு, ஏலக்காய் போன்றவற்றின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தேயிலை உற்பத்தி 40 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஆடுகளும், மாடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இவற்றுக்கான இழப்பீடுகளை எவ்வளவு சீக்கிரத்தில் அரசு வழங்கப்போகிறது என்பதும் தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது.

போக்குவரத்து

200 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், 80,000 கிலோ மீட்டர் அளவுக்கான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடுக்கி மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள சாலைகள் மிகக் கடுமையாக சேதமடைந்துள்ளன.

பெரியார் ஆறு உள்நுழைந்ததைத் தொடர்ந்து கொச்சின் விமான நிலையம் ஒரு வாரத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இதனால் ரூ.220 கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஓடு பாதை, விமான நிலையத்தில் உள்ள கடைகள், டாக்ஸி நிறுத்துமிடம் போன்றவையும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பாதிப்புகளால் மக்களின் அன்றாடம் மிகக் கடுமையான சிக்கலுக்கு உள்ளாகும் அதேவேளையில் மாநில வருவாயில் 10 சதவீதம் பங்களிக்கும் சுற்றுலா துறையிலும் இவை பாதிப்பை ஏற்படுத்த உள்ளன. சாலை, விமானம் என 2 வகை போக்குவரத்துகள் முடங்கியுள்ள நிலையில் வர்த்தகக் கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறுவதிலும் சிக்கல்கள் எழும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொச்சி விமான சேவை ஆகஸ்ட்-26 முதல் மறுபடியும் ஆரம்பமாகும் என்று கூறப்பட்டாலும் உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அதிகரிக்கும் தேவைகள்

பொருளாதார ரீதியிலான, உள ரீதியிலான பல்வேறு சிக்கல்களை இந்த வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் அதேவேளையில் சில பொருட்களுக்கான தேவை அதிகரித்து மாநில பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வீடுகளை இழந்தவர்களில் மீண்டும் வீடுகளை கட்டத் திறனுள்ளவர்கள் அதற்கான செயல்பாடுகளைத் தொடங்குகிறபொழுது மாநிலத்தின் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் வீடுகளுக்கு அரசு அளிக்கவிருக்கிற இழப்பீட்டுத் தொகையோடு ஒப்பிடும்போது அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் லாபமளிக்குமா என்பது கேள்விக்குறியே.

தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள் வீணாகியிருக்கும் நிலையில் அவை புதிதாக வாங்கப்பட உள்ளதால் அவற்றுக்கான தேவை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ரூ.1,000 கோடி அளவுக்கு காப்பீட்டுத் தொகை கோரப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், தங்கள் வீடுகளுக்கு இதுவரை காப்பீடு எடுக்காதவர்கள் வரும்காலங்களில் இதுபோன்ற பேரிடர்களால் நிகழும் பொருளாதார இழப்புகளைத் தவிர்க்கும்பொருட்டு புதிய காப்பீடுகளை எடுப்பார்கள் எனக் கருதப்படுகிறது.

இத்தகைய சில சூழல்கள் மாநில பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் என்றாலும்கூட , மதிப்பு கூட்டு வரியில் பெறப்பட்டதைவிட குறைந்த வரியை ஜிஎஸ்டி முறையில் பெறும் கேரளத்தின் வரி வருவாய் மேலும் குறையவே வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மீளுமா கேரளம்?

சில நாட்களுக்கு முன் வெளியாகி இருக்கும் கேர் ரேட்டிங்ஸ் நிறுவன ஆய்வு வெள்ளத்தால் கேரள மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை தற்பொழுது கணக்கிடப்பட்டிருக்கும் 3.1 சதவீதத்தைவிட மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கிறது. வேலை இழப்புகளும் ஏற்படலாம் என அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

கேரளம் பொதுவாகவே வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்காத மாநிலங்களில் ஒன்றாகத்தான் இருந்துவருகிறது. வடகிழக்கு மாநிலங்களுக்குப் பிறகு இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. 2016-ம் ஆண்டு வெளியான 5-வது வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை தரவுகள்படி இந்தியாவின் வேலையின்மை வீதம் 5 சதவீதமாக உள்ளது.

ஆனால் கேரளாவின் வேலையின்மை வீதம் 13.2 சதவீதம். இந்த வெள்ளத்தால் தொழில்துறை பாதிக்கப்பட்டு வேலையின்மை அதிகரித்தால் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படலாம். வளைகுடா நாடுகளில் பெற்றிருக்கும் வேலைவாய்ப்புகள் கேரள வருமானம் உயர உதவிவந்தாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியைவிட கேரள சராசரி குறைவுதான். இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் எந்த அளவுக்கு பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.

மன ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பாதிப்படைந்திருக்கும் மக்களை முடிந்த அளவு வேகமாக மறு குடியமர்த்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மிக மோசமான இந்த சூழலில் உடனடியாக எந்த விலை உயர்வையும் அறிவிக்கமுடியாத நிலையும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. சமயோசிதமாக 100 நாட்களுக்கு மதுவுக்கான வரியை அதிகரித்துள்ள அரசின் செயல்பாடு பாராட்டத்தக்க ஒன்று.

பெரும்பாலும் பள்ளிகளும், கல்லூரிகளும் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வி குறித்தும் யோசிக்கவேண்டி இருக்கிறது. வெள்ள பாதிப்புகளால் தொற்று நோய்கள் ஏற்பட்டுவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டி இருக்கிறது. இவை அனைத்தையும் சரிசெய்யவேண்டிய பெரும்பணி தற்பொழுது அரசிடமும், மக்களிடமும் உள்ளது.

தாங்கள் செய்த மனிதநேயப் பணிக்கு பணம்வேண்டாம் என்றுகூறி அரசு அறிவித்த ரூ.3,000 தினப்படியை மறுக்கும் மீனவர்கள், நிவாரண முகாமில்  இறந்த இந்து மதத்தவர் ஒருவரை புதைக்க இடமில்லாமல் உறவினர்கள் கண்ணீர் விட்டபொழுது கிறிஸ்தவர்களை அடக்கும் இடத்தில் இடமளித்த பாதிரியார் போன்ற மகத்தான மனிதர்கள்  ஒன்றிணைந்து செயலாற்றும்பொழுது மிக விரைவிலேயே கேரளம் மீண்டெழும் என உறுதியாக நம்பலாம்.

  - akhilkumar.a@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x