Last Updated : 23 Jul, 2018 11:20 AM

 

Published : 23 Jul 2018 11:20 AM
Last Updated : 23 Jul 2018 11:20 AM

உலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அணுகுண்டு!

தயாரிக்கப்படும் எந்த ஒரு பொருளுக்கும் ஆயுள் காலம் உண்டு. ஆனால் ஆயுள் காலம் வரையறுக்கப்படாத ஒரு பொருள் பிளாஸ்டிக். இன்று உலக நாடுகள் பிளாஸ்டிக் உபயோகத்தை ஒழிக்க கடுமையாகப் போராடி வருகின்றன. அதில் இந்தியாவும் ஒன்று.

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான மாநிலங்கள் (தமிழகம் உள்பட) பிளாஸ்டிக் மீதான தடை பற்றிய அறிவிப்பை வெளியிட்டன. இதற்கு முக்கியக் காரணமே பிளாஸ்டிக் முழுமையாக மக்குவதற்கு 500 ஆண்டுகள் முதல் 1,000 ஆண்டுகள் வரை ஆவதுதான்.

இன்று சர்வமும் பிளாஸ்டிக் மயம் என்றாகிவிட்ட சூழலில், அதுவே பெரும் சூழல் கேட்டுக்கு காரணமாகி அச்சுறுத்தலாக உருவாகி வருகிறது.

61 ஆண்டுக்கால வளர்ச்சி

 இந்தியாவில் பிளாஸ்டிக் தொழில் நுழைந்ததே 1957-க்குப் பிறகுதான். ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளியிலும் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறியது இத்துறை. பாலிஸ்டிரினில் தொடங்கி எல்டிபிஇ, பிவிசி, ஹெச்டிபிஇ, பாலி புரொபலீன் என படிப்படியாக வளர்ந்தது.

இன்று பிளாஸ்டிக் உபயோகம் இல்லாத துறையே இல்லை எனும் அளவுக்கு வியாபித்துவிட்டது. முன்னர் கண்ணாடி பாட்டில்களில் விநியோகிக்கப்பட்ட பால் இப்போது பிளாஸ்டிக் பாக்கெட்டுகளாக உருமாறிவிட்டன. இந்தியாவில் மட்டும் 22,000 பிளாஸ்டிக் பதப்படுத்தும் நிலையங்கள் உள்ளன. 150 பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. உலக அளவில் பிளாஸ்டிக் ஏற்றுமதியிலும் இந்தியா கணிசமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் பிளாஸ்டிக் உற்பத்தி ஆண்டுக்கு 178 லட்சம் டன்னாக உள்ளது. இதில் உபயோகிப்பது 148 லட்சம் டன்னாகும்.

ஏற்றுமதியில் முன்னிலை ஆண்டுக்கு 885 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் ஏற்றுமதி நிறுவனங்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன. அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, துருக்கி, இங்கிலாந்து, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகள் இந்திய பிளாஸ்டிக்கின் வாடிக்கையாளர்கள்.

இந்தியாவில் தனி நபர் பிளாஸ்டிக் நுகர்வு ஆண்டுக்கு 10 கிலோவாக உள்ளது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் இது 100 கிலோவாக உள்ளது. இருப்பினும் பிளாஸ்டிக் அச்சுறுத்தும்  அளவுக்கு வளர்ந்தது எப்படி என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஆபத்தாகும் பிளாஸ்டிக்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 0.5 மைக்ரானுக்கும் குறைந்த தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், சாஷேக்கள், உணவு தட்டுகள் இவைதான் பிரச்சினைக்குக் காரணம். அடுத்தது பிளாஸ்டிக் பாட்டில்கள். இவையும் மறு சுழற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளன. இவையனைத்தும் சேர்ந்து மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்தியா ஆண்டுக்கு 56 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றுகிறது. டெல்லியில் மட்டும் தினசரி வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள் தலைநகரை அச்சுறுத்துகிறது.

இந்திய நகரங்கள் தினசரி 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றுகிறது. இதில் 9 ஆயிரம் டன் பிளாஸ்டிக் மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகிறது. எஞ்சிய 6 ஆயிரம் டன் பிளாஸ்டிக் அப்படியே நிலத்தில் கொட்டப்படுகின்றன.

ஆறு, கடல் மாசுபாடு

நிலத்தில் மட்டும் பிளாஸ்டிக் பிரச்சினை இல்லை, கடலில் ஒவ்வொரு சதுர மைல் தூரத்திலும் 46 ஆயிரம் பிளாஸ்டிக் துண்டுகள் மிதக்கின்றன. இதே நிலைமை நீடித்தால் அடுத்த 32 ஆண்டுகளில் கடலில் மீன்களின் எண்ணிக்கையை விட பிளாஸ்டிக் துண்டுகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் என்று சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலக அளவில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் இந்தியாவின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது.

ஆண்டுதோறும் உலகம் முவுவதும் 10 லட்சம் கடல் பறவைகள் மற்றும் 10 லட்சம் கடல் வாழ் பாலூட்டி இனங்கள் பிளாஸ்டிக் பொருளை சாப்பிட்டு உயிரிழக்கின்றன.

0.50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கக் கூடாது என்றும் இத்தகைய பை தயாரிப்புக்கு நாடு முழுவதும் தடை உள்ளது. ஆனாலும் இத்தகைய பை உற்பத்தியோ அல்லது அதன் பயன்பாடோ நிற்கவேயில்லை.

பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் குறைக்க கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பைகளுக்கான விலையை வசூலிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. சில, பல பெரிய நிறுவனங்கள் மட்டுமே பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. ஆனாலும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறையவேயில்லை. தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லி என்சிஆர் பிராந்தியத்தில் பிளாஸ்டிக்  பை கழிவுகளுக்கு தடை விதித்தது. ஆனாலும் கழிவுகளின் அளவு குறையவேயில்லை, மாறாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.  உலகில் அதிக அளவில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.

பிளாஸ்டிக் பைகளை நிலத்தில் போடுவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. இவ்விதம் நிலத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக்குகளில் பெரும்பாலானவை உணவு பொருள் மற்றும்  சாஷே பாக்கெட்டுகள்தான்.

தடையால் பயனில்லை

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பிளாஸ்டிக் பை உபயோகத்துக்கு தடை விதித்துள்ளன. ஆனால் அதை செயல்படுத்துவதில் கடுமையான நடவடிக்கை இல்லாததால் இந்த தடை இருந்தும் ஒரு பயனும் ஏற்படவில்லை. இந்த ஆண்டு சுற்றுச் சூழல் தினமானது

”பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேட்டைத் தடுப்போம்’’ என்ற முழக்கத்தை மையமாகக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பிளாஸ்டிக் மீதான தடை அமலில் இருந்தும் அது சரிவர செயல்படுத்தப்படவில்லை என்பதே  உண்மை.

மத்திய அரசு 2016-ம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை கொண்டுவந்தது. இதன்படி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களே பிளாஸ்டிக் கழிவை அகற்றும் பணியிலும் ஈடுபட வேண்டும் என்பதே. அத்துடன் மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்யக் கூடாது என்பதும் இந்த விதிமுறையில் உள்ளது.

6 மாதங்களுக்குள் இது கட்ளடாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற அரசின் சுற்றறிக்கை 2 ஆண்டுகளாகியும் இதுவரை பின்பற்றப்படவில்லை. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் இன்னமும் இந்தியா முன்னேற்றமடையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பிளாஸ்டிக் பைகளை உபயோகித்தால் ரூ. 500 முதல் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. பிளாஸ்டிக் பைகளை இருப்பு வைத்திருப்போர் மீது 5 ஆண்டு வரை சிறைதண்டனை விதிக்கவும் சட்டம் வகை செய்கிறது.

பொதுவாக சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கென விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் எப்படி காற்றில் பறக்க விடப்படுகின்றனவோ அதைப்போலத்தான் பிளாஸ்டிக் ஒழிப்பு விதிமுறையும். யாருமே கண்டுகொள்வதில்லை. 2012-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிங்வி மற்றும் முகோபாத்யாய ஆகியோர் அடுத்த தலைமுறைக்கு அணுகுண்டு ஆபத்தை விட பிளாஸ்டிக்கால் ஏற்படும் ஆபத்துதான் பயங்கரமானதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். பிளாஸ்டிக்கிற்கு முழுமையான தடை விதிப்பதுதான் இதற்கு தீர்வாக இருக்கும் என்று கூறியிருந்தனர்.

அவர்கள் கருத்து கூறி 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்னமும் இந்த விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் மெத்தனப் போக்குடன்தான் இருக்கின்றன. அணு ஆயுத ஒழிப்புக்கு எதிராக உலக நாடுகள் திரண்டு முயற்சி எடுப்பதைப் போல பிளாஸ்டிக்கை ஒழிக்க ஒன்று திரண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். அந்த நாள் வெகு  தொலைவில் இல்லை.

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x